யாதுமொன் றறிகி லாதா ரிருளென வணையச் சென்று வாதினில் மன்ன வன்றன் வாமபா கத்தைத் தீர்ப்பார் மீதுதம் பீலி கொண்டு தடவிட மேன்மேல் வெப்புத் தீதுறப் பொறாது மன்னன் சிரபுரத் தவரைப் பார்த்தான் | 763 | (இ-ள்) யாதும்...சென்று - ஏதேனும் உண்மைநிலை ஒரு சிறிதும் அறியும் ஆற்றலில்லாராகிய அமணர்கள் இருளைப்போல அரசனைக் கிட்டிச் சென்று; வாதினில்.....தீர்ப்பார் - வாதத்தின் முற்பட்டு மன்னனுடைய இடப்பாகத்து நோயினைத் தீர்ப்பார்களாகி; மீது...தடவிட - அவன் உடம்பின்மேல் தமது மயிற்பீலிக் கற்றையைக் கொண்டு(மந்திரித்துத்) தடவ; வெப்பு மேன்மேல் தீதுற - வெப்புநோய் மேன்மேலும் அதிகரித்துத் தீமை செய்ததனால்; பொறாது - ஆற்றமாட்டாதவனாகி; மன்னன்.... பார்த்தான் - அரசன் சீகாழித் தலைவரை வாதினில் தமது நோயினைத் தீர்க்க வேண்டுமென்ற குறிப்புடன் பார்த்தான். (வி-ரை) யாதுமொன்றும் அறிகிலாதார் - அமணர்; யாதும் என்பது அறியும் பொருளையும், ஒன்றும் என்பது அறியும் அளவையும் குறித்தன; ஒன்றும் - முற்றும்மை தொக்கது. "யாது மொன்றுமென் பக்கலுண்டாகில்"(410); அறிகிலாதார் - கில் - ஆற்றலுணர்த்தும் இடைநிலை: "வெம்பவரு கிற்ப தன்று கூற்றம் நம்மேல்" (தேவா - அரசு - தாண்); உண்மைநிலை யறிவும், அஃதில்லை யாயினும் அனுபவத்தாலறியும் ஆற்றலு மில்லாதாராதலின் இவ்வாறு இவ்வாதத்தில் துணிந்து முற்பட்டனர் என்பது குறிப்பு. இருள் என - இருட் கூட்டம்போல்; உருப்பற்றிய உவமம்; "இழுது மையிருட் கிருள் என"(2576). அணையச் சென்று - தாங்கள் நின்ற இடத்தினின்று பாண்டியனை அணுகச் சென்று. மீது - பாண்டியனது உடலின்மேல்; பீலி - அமணகுருமார் எப்போதும் மயிற்பீலி கையிற்பிடித்தல் மரபு; தம்பீலி கொண்டு - தாம் கையிற் பிடித்த பீலியினாலே; கொண்டு - கருவிப்பொருளில் வந்த மூன்றாவதன் சொல்லுருபு. பீலியினால் தடவுதல் - மந்திரிக்கும் முறையில் அவர்கள் செய்யும் கிரியை. வெப்பு மேன்மேல் தீதுஉற - தடவத் தடவ முன்னைய வெப்பு மேலும் மேலும் தீயதாய்ப் - வெப்பு மிகுவதாய்ப் - பொருந்த - அதிகரிக்க; தீது - வெப்பம் - தீத்தன்மை. பொறாது - பொறுக்கமாட்டாதவனாகி; தாங்கலாற்றானாகி. பார்த்தான்-"கண்ணிற் சொலி" என்பது அரசரிலக்கணமாதலின் ‘இதில் அமணர் தோற்றனர்; இனி நீவிர் நும்பக்கத்து வாதத்தினைமேற்கொள்க’ என்றகுறிப்புப் பார்வையிற்றோன்ற; "நோக்கம் கண்டு" என மேற்கூறுதல் காண்க. வெப்பு மேன்மேல் தீதுறப்பொறாத நிலையில் பேசமாட்டாது பார்த்தான் என்ற குறிப்பும்பட நின்றது. |
|
|