தென்னவ னோக்கங் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர் "அன்னவன் வலப்பால் வெப்பை யாலவா யண்ண னீறே மன்னுமந் திரமு மாகி மருந்துமாய்த் தீர்ப்ப" தென்று பன்னிய மறைக ளேத்திப் பகர்திருப் பதிகம் பாடி, | 764 | (இ-ள்) தென்னவன் நோக்கம் கண்டு - பாண்டியனது நோக்கத்தினைக் கண்டு; திருக்கழுமலத்தார் செல்வர் - சீகாழியார் களுடைய செல்வராகிய பிள்ளையார்; அன்னவன்....தீர்ப்பது என்று - அவனுடைய வலப்பாகத்து வெப்புநோயினைத் திருவாலவாயில் இறைவனது திருருநீறே நிலைபெற்ற மந்திரமும் மருந்துமாகித் தீர்ப்பதாகும்" என்ற கருத்துட்கொண்டு; பன்னிய....பகர் - கூறிய வேதங்களின் கருத்தைப் போற்றி எடுத்துச் சொல்லுகின்ற; திருப்பதிகம் பாடி - "மந்திரமாவது நீறு" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடியருளிச் செய்து, (வி-ரை) நோக்கம் கண்டு - நோக்கமாவது "சிரபுரத்தவரைப் பார்த்தான்" (2661) என்று முன்பாட்டிற் கூறிய பார்வையின் உட்குறிப்பு. தென்னவன் - அம்மையார் - அமைச்சனார் - பிள்ளையார் சார்பு பற்றிக் கூறுமிடங்களில் தென்னவன் (2604 - 2652 - 2656), செழியன் (2502 - 2631), கொற்றவன் (2593), மீனவன் (2619) எனப் பெரும்பான்மை இக்கருத்துப்பட்ட பெயர்களாலும், அமணரது சார்பு பற்றிக் கூறும்போது மன்னன் (2511 - 2534 - 2578 - 2579 - 2580 - 2585 - 2612 - 2620 - 2645), கைதவன் (2647) என்ற கருத்துப் பட்ட பெயராலும் கூறும் குறிப்புக் காண்க; அமணர் அரசனைப் பெரும்பான்மை மன்னன் என்ற ஒரே நிலைபற்றி உட்கொண்டு வசமாக்கி அவனது அரசாணையைத் தம்வயமாகப் பயன்படுத்திச் சீவித்து வந்தனராதலின் அக்கருத்தை அவர்க்கு முன்னின்றது. அம்மையார், அமைச்சர், பிள்ளையார் இவர்க்கு அவ்வாறன்றி அவனது நலங்களும் பிறநற்பண்புகளும் ஒங்க எண்ணிய கருத்து முற்பட நின்றது. இவர்கள் சார்பில் "மன்புரக்கும் மெய்முறை"(2601), "மன்னவ னிடும்பை தீர"(2623), "மன்னவன் முன் வென்றருளி" (2631) என்று வருமிடங்களில் அவனது அரசாணை நிலை வழுவாமற் காக்கும் கருத்து முன் நிற்பதும் காண்க. "அன்னவன்....தீர்ப்பது" என்று - இது பதிகக் கருத்து. ஆலவாய் அண்ணல் நீறே - "ஆலவாயான் றிருநீறே" என்ற பதிக மகுடம் காண்க; ஏகாரம் தேற்றம்; பிரிநிலையுமாம். மன்னும் மந்திரமும் ஆகி- மன்னுதல் - அழிவுறாது - நிலை திரியாது - பொருந்துதல்; "மந்திர மாவது நீறு" என்ற பதிகத் தொடக்கம் அதன் கருத்தையும் உட்கோளையும் குறித்தது; நோய் தீர்த்தல் வழியாகத் தெய்வ உண்மை நிலை நாட்டுக (2657) என்று மன்னன் சொல்ல, அவ்வாதத்தினை ஏற்றுக் கொண்டு அமணர் "மந்திரித்துத் தெய்வ முய்ற்சியால்" என முந்திக் கொண்டாராதலின், அவ்வாறே பிள்ளையாரும் "மந்திரமாவது நீறு" என மந்திரத்தை வைத்துத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கினும் நோய் வினைகளின் தீர்வு மணி மந்திரம் மருந்து என மீவகைப் படுதலின் அம்மூன்றும் கொண்டது இத்திருநீறு என்பது கருத்தென்று விளக்குவார் ஆலவாய் அண்ணல் நீறு என்று மணியினையும், மருந்துமாய் என்று மருந்தினையும் உடன் சேர்த்துக் கூறியருளினார். அன்னவன் வலப்பால் வெப்பை அண்ணல் நீறே தீர்ப்பது - என்று கூட்டுக. இப்பதிகம் அரசனது உடலில் உற்ற வெப்பனைத் திருநீறு கருவியாக மந்திரித்துத் தீர்த்தலை உட்கொண்ட தென்பது "தேற்றித் தென்னனுட லுட்றற தீப்பிணி யாயின தீரச், சாற்றிய பாடல்கள் பத்தும்" என்ற பதிகத் திருக்கடைக்காப்பின் அகச்சான்றிலு மறியப்படும்; "அண்ணல் நீரே - தீர்ப்பீர் என்று" என்ற பாடமுமுண்டு; அது பிழையென் றொதுக்குக; "புத்தரொ டமணை வாதி லழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே" என்று திருமறைக் காட்டில் அரசுகள் கேட்கப் பிள்ளையார் அருளிய "வேயுறு தோளி"ப் பதிகத்தினுள் திருநீற்றினையே இவ்வாதினில் வெற்றி தரும் பொருளாக முடித்து அருளியதை நினைவு கூர்க. பன்னிய மறைகள் ஏத்திப் பகர் - வேத சிரசாகிய உபநிடதங்களின் கருத்துக்களால் திருநீற்றினைப் போற்றியருளிய என்பது "வேதத்திலுள்ளது நீறு" என்பது முதலிய பதிகப் பகுதிகளால் விளங்கும்; பஸ்மஜாபாலம் முதலிய உபநிடதங்கள் திருநீற்றைப் பஸ்மம் - ரட்சை முதலாகிய வசனங்களாற் போற்றுதல் காண்க. பதிகம் பாடித் - தடவ - என்று வரும்பாட்டுடன் முடிக்க; பதிகம்பாடி-பதிகத்து முதல் ஆறு திருப்பாட்டுக்களைப் பாடி என்பது கருதப்படும்; இவை வலப்பால் வெப்பைத் தீர்க்கவும், பதிகத்து ஏனைய (7-11) ஐந்து பாட்டுக்கள் பின்னர் இடப்பால் வெப்பைத் தீர்க்கவும், அருளப் பெற்றன என்பது? முதலாறு பாட்டுக்களில் "திருவாலவாயான் றிருநீறே" என்று போற்றி அதற்கேற்றவாறு தகர இகர மோனையும், மேல் ஐந்து பாட்டுக்களில் "ஆலவாயான் திருநீறு" என்று போற்றி அதற்கேற்றவாறு அகரமோனையும் வர அமைத்தருளி இப்பதிகம் இரு கூறாக நிற்கும் அமைதி கொண்டும் கருதப்படும்; இருபாகத்துக்கும் பதிகமொன்றே யாதலும், இடப் பாகத்துக்கும் "நீறு காட்டிப் பெருமறை துதிக்குமாற்றால் போற்றி"(2668) என்பதும், சரித நிகழ்ச்சியும் ஈண்டுக் கருதத் தக்கன. |
|
|