பாடல் எண் :2664
உறியுடைக் கையர் பாயி னுடுக்கையர் நடுக்க மெய்திச்
செறிமயிற் பீலி தீயத், தென்னன்வெப் புறுதீத் தம்மை
யெறியமா சுடலுங் கன்றி, யருகுவிட் டேற நிற்பார்
அறிவுடை யாரை யொத்தா ரறிவிலா நெறியி னின்றார்.
766
(இ-ள்) உறியுடை....எய்தி - உறிதூக்கிய கையினை யுடையார்களும் பாயினை உடையாக யுடையார்களும் ஆகிய அமணர்கள் நடுக்கமடைந்து; செறி....தீய - செறிந்த மயிற்பீலிக் கற்றை தீந்துபோக; தென்னன்.....கன்றி - அரசனது வெப்பு நோயின் சூடு தம்மைத் தாக்குதலாலே மாசுகொண்ட உடலும் மேலும் கருகி வெதும்பியவர்களாய்; அருகுவிட்டு ஏற நிற்பார் - அரசனது அருகினின்றும் அகன்று தூரச்சென்று நிற்பவர்களாகிய அவ்வமணர்; அறிவுடையாரை...நின்றார் - அறிவில்லாத நெறியின் நின்றவராயினும் அறிவுடையார்களைப் போன்றனர்.இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
(வி-ரை) உறியுடைக்கையர் - உறி தூக்கிய கையினை யுடையவர்; கையில் சிறிய உறியில் குண்டிகை நீரைத் தூக்கி வருதல் அமணகுருமார் வழக்கு; பாயுடுத்தலும் அவ்வாறே அவர் வழக்குக்களுள் ஒன்று; உடுக்கை - உடை; பாயின் உடுக்கை - பாயாகிய உடை. உடைக்கையர் - உடைக்கையர் என இருமுறையும் கையர் என்ற குறிப்பும்படக் கூறியது முன்பாட்டிற் கூறிய இருவகைத் தோல்வி குறித்தது; கையர் - கீழ் மக்கள் என்ற குறிப்பும்பட நின்றது; இவர்கள் இடப்பாகத்தில் நின்றவர்கள்.
மயிற் பீலி தீய - தம் கையில் கொண்டு அரசனுடலைத் தடவி நின்ற மயிற் பீலிக் கற்றை; தீய - கருக; வெப்பு மிகுதியின் சூடு தாங்கலாற்றாது மயிற் பீலி தீந்துபோக என்க.
தென்னன் வெப்புறு தீ
- இவ்வொன்றே மயிற்பீலி தீவதற்கும், தம்மை எறிவதற்கும் காரணமாதலின் முன்னும் பின்னும் கூட்டி உரைக்கும்படி இடையில் வைக்கப்பட்டது.
எறிய மாசுடலும் கன்றி - எறிய - எறிதலால்; கன்றுதல் - கருகுதல் - வெதும்புதல்; மாசுடலும் கன்றி - இயற்கைக் கருமையுடன் செறிந்த செயற்கை மாசும் கூடிக் கருகிய உடல், வெப்புத் தீயினால் மேலும் கருகிற்று என்க. கன்றி - கன்றுதலால்; நடுக்கமெய்தி - "கண் திகைப்பிப்பது நீறு" என்ற பதிகம் காண்க;
அருகு விட்ட ஏற நிற்பார் - அருகு - மந்திரித்து நோய் தீர்க்க அணுகச் சென்ற அணியதாகிய இடம்; ஏற - அகல; தூரத்தே - சேய்மையில்.
நிற்பார் - நின்றார் - ஒத்தார் - என்று கூட்டி முடிக்க.
அறிவுடையாரை ஒத்தார் - அறிவுடையாரல்லா ராயினும் அறிவுடையார் போன்றனர் என்பது; அறிவுடைமை போல்வதாவது அறிவுடை யோர் போன்று செயல் செய்தல்; ஈண்டு மன்னவனை அணுகி அருகு நிற்றலை விட்டுச் சிறிது அகன்று நிற்றல்; "அகலா தணுகாது தீக்காய்வார் போல்க, விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்"(குறள்) என்றபடி மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல மன்னர்ச் சேர்ந்தொழுகுதல் அறிவுடையார் செயல்; அதுபோல இங்கு அமணர் மிக அருகில் நிற்பதை விட்டு மிக அகலாமல் கற்றுத் தூரத்தில் நின்றாராதலின் அறிவுடையாரை ஒத்தனர்; "புத்திதா னுடையை போல விருந்தனை" (சித்தி - 1 - 42).
அறிவிலா - நின்றார் - ஆனால் அச்செயலாற் பயன் கொள்ளமாட்டா தழிந்தனராதலின் அறிவிலா நெறியில் நின்றார் என்றார். அறிவிலா நெறி - அமண நெறி.
இங்கு இவ்வாறன்றி, இந்நோய் எம்மால் தீர்த்தற்கு அரிதென விவேகம் வந்து அகன்ற அறிவுடையோர் போல என்றுரைப்பர் ஆறுமுகத் தம்பிரானார். நெருப்புச் சுடுமென்பதை யறிந்து விலகிக் கொண்டமையால் அறிவுடையாரை நிகர்த்தனர் என்பது இராமநாதச் செட்டியார் உரைக் குறிப்பு. பிள்ளையார் பெரியார்; அவரே தீர்க்கட்டும் என்று ஒதுங்கி நிற்பது அறிபுடைமையாதலின் அவ்வாறு செய்வார் போல; "கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற், சொல்லா திருக்கப் பெறின்"((குறள்) என்றதற்கேற்ப ஒதுங்கி ஏற நின்றனர் என்பது சதாசிவ செட்டியார் குறிப்பு
அறிவிலா நேறியில் நின்றமையாவது அறியமாட்டாது தமது புரை நெறியினையே பற்றிப் பின்னரும் மூண்டு நின்ற தன்மை.