பலர்தொழும் புகலி மன்ன ரொருபுடை வெப்பைப் பாற்ற மலர்தலை யுலகின் மிக்கார் வந்ததி சயித்துச் சூழ இலகுமேற் றென்னன் மேனி வலமிட மெய்தி நீடும் உலகினிற் றண்மை வெம்மை யொதுங்கினா லோத்த தன்றே. | 767 | (இ-ள்) பலர்தொழும்....பாற்ற - பலராலும் தொழப்படும் சீகாழித் தலைவராகிய பிள்ளையார் அரசனது ஒரு பக்கத்து (வலப்பக்கத்து) வெப்பினைப் போக்க; மலர்தலை.....சூழ - மலர்தலையுடைய உலகின் அறிவினான் மிக்கோர்கள் அதிசயித்து வந்து சூழ; இலகு....எய்தி - விளங்கும் வேலேந்திய பாண்டியனது உடல் வலத்தின் வெப்பும் இடத்திற் பொருந்தியமையால்; நீடும்....அன்றே - நீண்ட உலகில் தட்பமும் வெப்பமும் ஒன்றுபட ஒதுங்கினாற்போல் அப்பொழுது இருந்தது; (வி-ரை) பலர் தொழும் - "பலர் புகழ் ஞாயிறு"(முருகு); பாற்ற - அழிக்க; எய்தி - எய்தியமையால்; வலம் - வலத்தின் வெப்பம்; வலமிடம் - தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்து - வலமும் இடமுமாகத் தண்மையும் வெப்பமும் வந்து முறையே ஒதுங்கியது போல; மிக்கார் - அறிவின் மிக்கார் என வருவித்துரைக்க. |
|
|