பிள்ளை யாரு "முங்கள் வாய்மை பேசு மின்க" ளென்றலுந், தள்ளு நீர்மை யார்கள் "வேறு தர்க்க வாதி னுத்தரங் கொள்ளும் வென்றி யன்றியே குறித்த கொள்கை யுண்மைதான் உள்ள வாறு கட்பு லத்தி லுய்ப்ப" தென்ன வொட்டினார். | 775 | (இ-ள்) பிள்ளையாரும்...என்றலும் - பிள்ளையாரும் அமணர்களை நோக்கி உங்கள் சமயவுண்மைகளைப் பேசுங்கள் என்று கூறலும், (அதுகேட்டு); தள்ளு நீர்மையார்கள் - தள்ளப்படும் தன்மையுடையவர்களாகிய அவ்வமணர்கள்; வேறு...அன்றியே - வேறுதர்க்க உருவமாகிய கடா விடைகளால் வரும் வெற்றியையன்றி; குறித்த.... உய்ப்பது - "அவ்வவர் குறிக்கொண்ட கொள்கைகளின் உண்மைத் தன்மை உள்ள படியினைக் கண்முன்னே நிறுத்திக் காட்டுதல் ஈண்டு செய்யத்தக்கது" என்று ஒட்டினார்கள். (வி-ரை.) பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசுமின்கள் என்றது - முன்னர் அமணர்கள் பிள்ளையாரைப் பலராய்ச் சூழ்ந்து சினந்து வாதினில் வெல்ல எண்ணித் தாம் கோலும் நூல் எடுத்தோதித் தலைதிமிர்ப்பக் குரைத்தார்கள்(2654); அப்போது "நும்பொருள் எல்லை உள்ளவாறுபேசுக" என்று பிள்ளையார் அருளினர்(2655); பிள்ளையார்பாற் கொண்ட பரிவினால் அவ்வாதம் நிகழாமல் அம்மையார் தடுத்து, "அரசமது நோய் நீக்கியபின் இவ்வமணர் வல்லராகில் பேசுக" என்று குறுக்கிட்டுத் தடுக்க, அரசன் ஆணையின்படி நோய்தீர்த்தலையே இகலிய வாதமாகக் கொண்டு தெய்வத் தன்மையும் வெற்றியும் துணியப்பட்டன; ஆதலின், அவ்வாறு முன்பு தாமே அழைக்கவும் இடையில் தடுக்கப்பட்ட சமயநூல் வாதத்தினைத் தொடர்ந்து பேசுக என்று பிள்ளையார் அமணரை அழைத்தருளினர் என்க; சிலசில சிறு உண்மைகளையே கோட்பாடாகக் கொண்டு சிறுதெய்வங்களை வணங்கும் சிறுசமயங்கள், முழு உண்மைகளுக்கு நிலைக்களமாய் முழுமுதற் கடவுளும் சங்காரகாரணனுமாய் உள்ள சிவபெருமானையே கடவுளாகக் கொண்டதாய் விளங்கும் சைவ சமயத்தொடு மாறுபட்டு உலகை மயக்கினது அக்காலநிலை; அதனால் பொய் மிகுத்து மறைவழக்கமருகிப் பூதிசாதன விளக்கம் போற்றல்பெறாது சைவநெறி குன்றியது (1916); இதனை நீக்கிச் சமயங்களானவற்றின் தாங்களை உள்ளபடி அறிவித்து அளவுபடுத்தி நிறுவ வேண்டியது ஞானாசாரியரது கடமையாயிற்று. திருவருட் குறிப்பினை வினவி விடைபெற்ற பின்னரே பிள்ளையார் இதனை மேற்கொண்டனர்; 2636, 2637 பார்க்க. இக்காரணங்களால் அமணரை அவரது சமய உண்மை பேசுக என்று பிள்ளையார் அழைத்தனரேயன்றி இகலினாலன்று; "இகலில ரெனினும்"(2752); "இது வாகு மதுவல்ல தெனும்பிணக்க தின்றி, நீதியினா னிவையெல்லா மோரிடத்தே காண நின்றதியா தொருசமய மதுசமயம்" (சித்தி. 8 -13) என்றபடி உலகில் ஒன்றோடொன்றொவ்வாமல் உள்ள பற்பல சமயங்களின் கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டு அதனால் ஒன்றோடும் மாறுகொள்ளாமல் அவ்வவற்றுக்கும் படி முறை காட்டி நிற்பது சைவ சமயம்; ஆதலின் அது எச்சமயத்தினையும் வெறுப்பதோ மாறுகொள்வதோ அழிப்பதோ இல்லை; ஆயின் பரபக்க நிராகரணமும், சமயவாதமும், ஈண்டு வருவதுபோல் அழிவும் சைவத்துட் கேட்கப்படுதல் என்னையோ? எனின், தற்காப்பின் பொருட்டும் உண்மை தெரித்தற்பொருட்டுமாம் என்க. இங்குப் பிள்ளையார் சமணரைக் சமயநூல் வாதம் பேசுக என்றது சைவத்துக்கு இடையூறு விளைத்த அவர்களையும், அவரது பொய்களில் மயங்கிநின்ற உலகத்தையும் தேற்றி உண்மை தெளிவித்து உய்யக் கொள்ளும் கருணையினாலேயாம் என்க; பின்னர் அமணர் கழுவேறி அழிந்த வரலாறு அரசன் நிகழ்த்திய அரச நீதிமுறையின்பாற்படும். பிள்ளையார் ஈண்டுச் சமய வாதத்திற்கு அழைத்ததற்கும் அரசன் நீதிமுறை விதித்த அதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை; பிள்ளையார் அழைத்த சமயநூல் வாதத்தை மறுத்துக் காட்சி வாதத்தில் ஒட்டிப் புகுந்து, தோல்வியுற்றாற் கழுவேறுவேம் என்று இசைந்து, தம் செயலினாலும் வாக்கினாலும் தாமே தமக்கு அழிவைத் தேடிக்கொண்டதும், அரசன் நீதிமுறை செய்ததும் பின்னர் விரிக்கப்படும்; ஆண்டுக் கண்டுகொள்க; இங்கு மேற்கூறியவாறன்றி, "அவர்கள் எண்ணத்தை உணர்ந்த பிள்ளையாரும்" என்றுரைத்து அவ்வாறுணர்ந்தமையால் சமய வாதத்துக்கு அவர்களை அவர் நினைத்தபடியே பிள்ளையாரும் அழைத்தனர் என்றுரைகூறுவாருமுண்டு; அது பொருந்தாமை கண்டுகொள்க. அமணர்கள் சமயவாதம் வெல்லலாவதன்று; காட்சிவாதமே செய்யத்தக்கது என்று எண்ணியபோது பிள்ளையார் சமய உண்மைகள் பேசுக என்றது அவர் எண்ணத்துக்கு மாறுபட்டமையாலும் அது பொருந்தாமை யறிக. தள்ளும் நீர்மையார்கள் - சுரவாதத்தினை இகலிச் செய்து தோற்றமையாலும் முன்னர்ச் செய்த பொய்-வஞ்சம் இவற்றாலும் ஒதுக்கித் தள்ளத்தக்கவர்கள்; இதற்கு இவ்வாறன்றித் தள்ளப்படும் பொய் வஞ்சனை முதலிய குணங்களையுடையவர்கள் என்றுரைப்பாருமுண்டு. தள்ளும் - தர்க்கவாதத்தைத் தள்ளிய என்றலுமாம். வேறு.....அன்றியே - வேறு - மேற்சொல்வதற்கு வேறாக - தனியாக - என்க; கட்புலத்தில் உய்ப்பதே சமய வாய்மையை விளக்குவதாகும் என்பது கருத்து; தர்க்கவாதின் உத்தரம் கொள்ளும் வென்றி - வாதம் செய்து கடாவிடைகளால் சமய உண்மைகளை நிலைநாட்டும் வெற்றி; அன்றியே - அஃது இல்லாமலே; வேண்டாமலே. குறித்த கொள்ளை உண்மைதான் கட்புலத்தில் உய்ப்பது - கொள்கையின் உண்மையை வாதிப்பதாயின் காதினாற் கேட்பதன்றிக் கண்ணாற் காண இயலாது; அவ்வாறன்றிக் கண்ணாற் காணும்படி காட்டிச் செலுத்துதல் வேண்டப்படுவது; குறித்த - அவ்வவர் குறிக்கொண்ட; குறிக்கோளாகக் கொண்ட; உள்ளவாறு - யாவரும் ஒப்பும் முறையில். ஒட்டினார் - சூளுறவு சொன்னார்;பந்தயம் கூறினார். குறிப்பு : - இவர்கள் போலன்றிப் புத்தர் மந்திரவாதம் வேண்டாது சாத்திரவாதமே வேண்டி எதிர்த்தது குறிக்க; (புரா. 911 = 2811). |
|
|