என்று வாது கூற லும்மி ருந்த தென்னர் மன்னனுங் "கன்றி யென்னு டம்பொ டுங்க வெப்பு நோய்க வர்ந்தபோ தொன்று மங்கொ ழித்த லீர்க; ளென்ன வாது மக்"கெனாச் சென்று பின்னு முன்னு நின்று சில்லி வாயர் சொல்லுவார், | 776 | (இ-ள்) என்று வாது கூறலும் - அமணர் முன்சொல்லியபடி ஒட்டி வாதத்தினைக் கூறுதலும்; இருந்த......உமக்கு என - நோய் நீங்கியிருந்த பாண்டியனும் அவர்களைநோக்கி "எனது உடம்பு முழுதும் வெதும்பி வெப்புநோய் என்னை முழுதும் உள்ளாக்கியபோது, அங்கு ஒரு சிறிதும் தவிர்க்ககில்லீராகித் தோல்வியுற்றீர்கள்; ஆதலின் இப்போது இனி, உமக்கு என்ன வாது இருக்கின்றது! " என்று சொல்ல; சென்று.....சொல்லுவார் - அரசனுக்குப் பின்னும் முன்னுமாகச் சென்று அணுகி நின்று கொண்டு ஓட்டை வாயர்களாகிய அமணர்கள் சொல்வாராகி, (வி-ரை) என்று - முன்பாட்டிற் கூறியபடி சொல்லி; வாதுகூறல் - வாதத்துக்கு அறைகூவுதல். இருந்த - முன்னர் வெப்பு நோயுடன் வலிகெட்டுக் கிடந்த நிலை நீங்கி எழுந்து அமர்ந்திருந்த; அவ்வாறு இருந்தமையால் - என - என்ற குறிப்புமாம். மன்னனும் - உம்மை சிறப்பு; மன்னனும்....என - பிள்ளையார் அமணர்களை உங்கள் வாய்மை பேசுமின்கள் என்று அருள, அதனைத் தொடர்ந்து அவர்கள் வாதத்தில் முற்பட்டனர்; ஆயினும் அரசன் அதனை உடம்படாது மறுத்து எனது நோயினை ஒழிக்கமாட்டாது தோல்வியுற்ற உங்களுக்கு இனி வாது செய் என்ன நிலையுள்ளது; ஒன்றுமில்லையே! என்று தடுத்துக் கூறியபடி; "நீங்கள் தேறிய தெய்வத்தன்மை என்னிடைத் தெரிப்பீர்"(2657) என்றும், "இகலித்தீரும்; தீர்த்தார் வாதில் வென்றவர்"(2659) என்றும் தான் அரசாணையிட, அதனை ஒட்டியே மந்திரவாதம் நிகழ, அதில் தோற்றீர் (2667) என அரசநீதி முடிபுகொள்ள, ஆணையும் நிகழ்ந்துவிட்டமையால், ஒருமுறை தீர்வு பெற்ற நியாயத்தில் வாதத்துக்கிடமில்லை என்று அரசாங்க நீதிமுறையில் கூறியபடியாம். இனி, "குறித்த கொள்கை - கட்புலத்திலுய்ப்பதென்ன ஒட்டுதல்" எதன் பொருட்டு? முன்னரே அவ்வாறு எனது நோயினைப் பற்றிக் கட்புலத்தில் உய்த்த போது உமது கொள்கை உண்மை நிலைபெறாதொழிந்தமை கண்டோமே என்ற படியுமாம். ஒடுங்க - ஒடுங்கும்படி. "உணர்வும் ஆவியு மொழிவதற் கொருபுடையொதுங்க"(2610); ஒன்றும் - ஒரு சிறிதும்; ஒருபக்கமும் என்றலுமாம். ஒழித்தல் - நோய் தவிர்த்தல் குறித்தது. என்ன வாது? - வினா ஒன்றுமில்லை என எதிர்மலை குறித்தது. சென்று பின்னும் முன்னும் நின்று - சென்று - வெப்புத் தீக்கதுவ அருகுவிட்டேற நின்றார்க(2664) ளாதலின் அருகு சென்று; பின்னும் முன்னும் சூழ்ந்து கொண்டு. சில்லிவாய் - ஓட்டைவாய்; உண்மைப்பொருள் தங்குதலின்றி ஒழுகிவிடும் - நழுவும் - வாய். சொல்லுவார் - முற்றெச்சம்; சொல்லுவார் - என்றனர் என வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|