பாடல் எண் :2678
ஏய மாந்தரு மிந்தனங் குறைத்துட னடுக்கித்
தீய மைத்தலுஞ் சிகைவிடு புகையெழுந் தொழிந்து
காயும் வெவ்வழற் கடவுளும் படரொளி காட்ட
ஆயு முத்தமிழ் விரகரு மணையவந் தருளி,
780
(இ-ள்) ஏய....அமைத்தலும் - ஏவப்பெற்ற மாந்தர்களும் விறகை வெட்டி உடனே அடுக்கித் தீயினை அமைத்தலும்; சிகைவிடு...காட்ட - சிகைபோல விடும் புகையெழுந்து பின் அது மாறப்பெற்றுச் சுடுகின்ற வெவ்விய தீக்கடவுளும் படரும் ஒளியினைக் காட்ட; ஆயும்...வந்தருளி - உயர்ந்தோர் ஆய்கின்ற முத்தமிழ் விரகராகிய பிள்ளையாரும் அத்தீயினுக்கு அருகு அணையும்படி வந்தருளி,
(வி-ரை) ஏய - ஏவிய - ஏவப்பட்ட - எனச் செயப்பாட்டுவினைப் பொருளில் வந்தது.
உடன்குறித்து அடுக்கி - உடன் - ஏவிவிடுத்த உடனே; குறித்தல் - துண்டங்களாக வெட்டித் தீக்கொளுவுதற் கேற்றதாக்குதல்; அடுக்கி - தீக்கொள்ளும்படி ஒழுங்குபடுத்தி வைத்து; தீ அமைத்தலும் - தீயைக் கொளுவிப் பற்றச் செய்தலும்.
சிகை விடு புகை ஒழிந்து எழுந்து - ஒளிகாட்ட - முன்னர்ப் புகைவிட்டு எழுதலும் பின்னர் ஒளிகாட்டி எழுதலுமாகிய தீப்பற்றி எரியும் இயல்பு குறிக்கப்பட்டது. சிகை விடுபுகை - சிகைபோல மேலே விடும் புகை; சிகைபோன்றதைச் சிகை என்றதுபசாரம்; கருமையாலும் அடி மிகுத்தும் தொகுத்தும் நுனித்தும் மேல் கொழுந்து போல் எழுதலாலும் சிகைபோன்றது எனப்பட்டது; ஒளி காட்ட - புகை நீங்கி ஒளி விடுதல்; தீப்பற்றிய தன்மையை ஒளியினால் காட்ட; ஒளியே எல்லாப் பொருள்களையும் காட்டுதல் இயல்பு; அதுபோல் இங்கு ஒளியானது தீப்பற்றிய நிலையினைக் காட்டிற்றென்ற நயமும் காண்க. அழற்கடவுள் - என்றதற்கேற்பச் சிகையும் ஒளியும் கூறினார். அக்கடவுளைத் தியானிக்கும் சுருதிமுறையும் இங்கு நினைவுகூர்தற்பாலது.
காயும் வெவ்வழற் கடவுள் - "வெப்புறுந் தழல்" என்றதற்கேற்ப ஈண்டும் இவ்வாறு கூறினார்; பிள்ளையாரால் திருநோக்கம் பாவனை பதிசம் என்ற தீக்கை முறைகளைப் பெற்றுத் திருநீறு பூசப்பெற்றவனாதலாலும், வினைகளொத்துச் செய்தவப் பயனெய்தும் செவ்வியுற்றவனாதலானும், அரசன் தூய உள்ளத்து எண்ணியாங்கே அழற்கடவுளும் வந்தனன் என்ற குறிப்பும் காணத்தக்கது.
ஆயுமுத்தமிழ் விரகர் - ஆயும் - உயர்ந்தோரால் ஆயப்படும்; பிள்ளையாரது ஞானத்தமிழின் பெருமை கூறியவாறு; தமிழ்த் திருமுறையினைத் தாமே ஆய்ந்து பின்னர் எரியினிலிடும் பதிகத்தினை எடுக்கும் நிலையும், "எரியினி லிடவிவை கூறிய, சொற்றெரி யொருபது மறிபவர்"(சாதாரி - பதிகம் - 11) என்று அதன் ஆயத்தகும் தன்மையைப் பிள்ளையாரே காட்டியருளும் நிலையும், மற்றும் பிள்ளையாரது தமிழே வெற்றிபெறும் நிலையும் குறிப்பிற் பெறவைத்து ஈண்டு இத்தன்மையாற் கூறினார்; "அசைவில்செழுந் தமிழ்வழக்கே யயல்வழக்கின் றுறைவெல்ல"(1922) என்றதும் இங்கு நினைவுகூர்க.
அணைய வந்தருளி - அவையில் தழல் அமைத்த இடத்திற் சேரவந்தருளி.