பாடல் எண் :2680
சாற்று மெய்ப்பொரு டருந்திரு முறையினைத் தாமே
நீற்று வண்கையான் மறித்தலும் வந்துநேர்ந் துளதால்
நாற்ற டம்புயத் தண்ணலார் மருவுநள் ளாறு
போன்று மப்பதி கம்"போக மார்த்தபூண் முலையாள்"
782
(இ-ள்) சாற்றும்....மறித்தலும் - துதிக்கும் மெய்ப்பொருளினைத் தருகின்ற திருமுறையினைத் தாமே திருநீறு பொருந்திய வண்மையுடைய கையினால் மறித்து எடுத்தபோது; நாற்றடம் புயத்து....அப்பதிகம் - நான்கு பெரிய தோள்களையுடைய அண்ணலாராகிய இறைவர் எழுந்தருளிய திருநள்ளாற்றினைப் போற்றிய அந்தப் பதிகம்; வந்து - நேர்பட வந்து, அதனுள்; "போகமார்த்த பூண்முலையாள்" - "போகமார்த்த பூண்முலையாள்" என்று தொடங்கும் திருப்பாட்டு; நேர்ந்து உளது - நேர்ந்து உளதாயிற்று. (ஆல் - அசை).
(வி-ரை) சாற்றும் மெய்ப்பொருள் தரும் - சாற்றும் - வேத முதலிய நூல்களாலும் பெரியோராலும் எடுத்துச் சொல்லப்படும்; இவ்வாறன்றிச் சாற்றும் மெய்ப்பொருள் தரும் - சொல்லால் சொல்லப்படும் மெய்ப்பொருளாகத் தரும் என்றலுமாம்; பதிகம் - மெய்ப்பொருளைக் குறிக்கும் சொல்வடிவம். அதனால் தரப்படுவது அச்சொல்லால் குறிக்கப்படும் மெய்ப்பொருள் என்றலுமாம்; ஆதலின் அது ஈண்டு வாதத்தில் வேண்டிய "பொருட் கருத்தின் வாய்மை" யினைத் தரும் என்பதாம்.
திருமுறை - முத்தித் திருவுக்கு ஏதுவாகிய உண்மைகளை உரைக்கும் நூல்; இப்பெயர் ஆளுடைய பிள்ளையார் தேவாரமுதல் திருத்தொண்டர் புராணமிறுதியாகக் கோவை செய்யப்பட்ட சைவத் தெய்வத் தமிழ் மறைகளுக்கே காரண விடுகுறியாக வழங்குதல் பெரியோர் மரபு; இங்கு இம்மரபினைப் பிள்ளையார் தேவாரத்திற் பொருந்தக் காட்டி இவ்வழக்குத் தொடங்கிக் காட்டியருளினர் ஆசிரியர்; இறைவன் பாடலே திருமுறை எனப்படுமென்பது "பாடுந் திருமுறை பார்ப்பதி" (திருமந் - திருவுரை - 1067 = 4-5-23) என்ற திருமந்திரத்தானும் அறிக; இக்கருத்துப் பற்றியே தேவார முதல் திருப்புராண மிறுதியாகியவையும் இறைவர் வாக்கேயாதலால் அவையும் திருமுறை எனப்பட்டுப் பன்னிரு திருமுறைகள் என வகுக்கப்பட்டமை உமாபதி சிவாசாரியார் திருவாக்காலு மறியப்படும். இப்பெயரை ஏனைய பசுக்களின் பாடல்களுக்கு வழங்குதல் போலியேயாம்.
தாமே மறித்தலும் - தாமே - வேறொருவரையும் செய்யவிடாது தாமே; மறித்தல் - நூற்சுவடியைக் கையினால் குறுக்கிட்டுத் திறத்தல்; இதுபற்றியே திருமுறை - கந்தபுராணம் - திருவிளையாடற் புராணம் முதலியவற்றுட் கயிறு சாத்திப் பார்க்கும் வழககு இன்றும் வழங்கி வருகின்றது; அவ்வாறு மறித்தெடுத்தபோது வரும் பாட்டு இறைவர் திருவுள்ளத்தைக் காட்டுமென்பது கொள்கை; ஈண்டுப் பிள்ளையாரது தேவாரத் திருமுறையில் வந்தெழுந்த பதிகம், எரியினில் வேவாது நின்று, சைவத்தின் உண்மை காட்டிப் பரசமய நிராகரணமும் சைவசமய விளக்கமும் பெறுவித்து உலகை உய்விக்கும் திறம் காண்க. மெய்கண்டதேவர் திரு அவதாரத்திற்கு முன் இவ்வாறே தம் குருவின் ஆணைப்படி அவர் தந்தையார் ஆளுடைய பிள்ளையாரது தேவாரத் திருமுறையினிற் கயிறு சார்த்தத் திருவெண்காட்டுப் பதிகம் "பேயடையா" என்ற பாடல் வரவே, அதன்படி பெற்றோர்கள் திருவெண்காட்டில் போய் வரங் கிடந்து பிள்ளைப்பேறு பெற்று, அதனாற் பரசமய நிராகரணமும் சைவத் தாபனமும் தரும் சிவஞான போதம் பெற்று, உலகம் ஈடேறக் காரணமாயின வரலாறு ஈண்டுச் சிந்திக்கத் தக்கது.
"போகமார்த்த பூண்முலையாள்" பதிகத் தொடக்கம்; வந்து நேர்தல் - உதயமாகுதல்; வெளிப்படுதல்.நால்தடம்புயத்து அண்ணலார் - சிவபெருமான் - நாடுடைநாயகர்; தோள்வலி பற்றிக் கூறினார் வெற்றி குறித்தற்கு.
நாள்ளாறு போற்றும்
- இரண்டனுருபு விரிக்க. நள்ளாற்றின் அண்ணலாரைப் போற்றும் என்னாது "அண்ணலார் மருவு நள்ளாறு போற்றும்" என்றது "நம்பெருமான் மேயது நள்ளாறே" என்று தலத்தைப் போற்றிய வகையால் அமைந்த பதிக அமைப்புக் குறித்தது.
பதிகம் - போகமார்த்த பூண்முலையாள் - வந்து நேர்ந்துளது - என்றது அப்பதிகத்துளே இத்தொடக்கமுடைய முதற்பாட்டு எழுந்தது என்ற குறிப்பாம்; பதிகம் - பதிகத்தினுள்; ஏழனுருபு தொக்கது. "வனமுலை யிணையவை குலவலின்" என்று இதனைப் போற்றுவதும், அப்பதிகத்தினுள் இவ்வொருபாட்டே முலை என்ற சத்தத்துடன் நிற்பதும் காண்க. நேர்ந்த முதற்பாட்டின் அச்சொல்லே அருட்குறிப்பினை உணர்த்தியதாம் என்பது அதனைப் போற்றிய "தளிரிள வளரொளி"ப் பதிகத்தின் பதினொரு பாட்டினும் முலை குலவலின் - செறிதலின் - கலவலின் - துதைதலில் - புணர்தலின் - பயிறலின் - என்று அச்சொல்லையும் பொருளையுமே பாராட்டியும், மேல் அந்த ஏடு எரியில் பழுதிலாமைக்கு அதுவே காரணமாகக் காட்டியும் அருளுதலாற் பெறப்படும்; பிராட்டியின் முலையிணைகளே ஞானங்களாய் அமுதமாய் உயிர்களுக்குப் போகங்களைத் தருவன என்பதும் போந்த குறிப்பாம். ஒரு பாட்டுப் பதிகம் என வழங்குவதும் மரபு. அப்பதிக முழுமையும் அவ்வொரு திருவேட்டினில் பொறிக்கப்பட்டிருத்தலுமாம். "பதிகத்தினை யமர்ந்துகொண் டருளி - திருஏட்டினைக் கழற்றி"(2681), "பதிகத்தின் நாதன்" (2682) என வருவனவும் கருதத்தக்கன; பதிகம் - வந்து (அதனுள்) போகம் - முலையாள் - நேர்ந்து - அஃதுளது என்று கூட்டிக் கொள்க.