பாடல் எண் :2684
இட்ட வேட்டினி லெழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டு லாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்
தட்ட மூர்த்தியைப் பொருளென உடைமையா லமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கிய தன்றே.
786

(இ-ள்) இட்ட...பதிகம் - மேற்கூறியவாறு பிள்ளையார் தமது கையினால் தீயிடை இட்ட ஏட்டிலே எழுதப்பட்ட திருநள்ளாற்றைப் போற்றும் செந்தமிழ்த் திருப்பதிகம்; மட்டுஉலாம்...உடைமையால் - மணம் வீசுகின்ற கூந்தலையும் அழகிய முலைகளையுமுடைய மலைமகளாராகிய உமையம்மையாரை ஒருபாகத்திற் கொண்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானையே பொருளாகக் கொண் டுடைமையாலே; அமர்ந்து பட்ட - பொருந்திக் கிடந்த; தீயிடை..அன்றே - தீயினிடையே வேவா திருந்ததனுடனே பச்சையாயும் அப்பொழுதே விளங்கிற்று.
(வி-ரை) பதிகக் குறிப்பைக் காட்டி, அது திருவருட் குறிப்புடன் பொருந்தியமையால் ஏடு வேவாமைக்குரிய காரணத்தை ஆசிரியர் எடுத்துபதேசித்தபடி.
இட்ட ஏடு - பிள்ளையார் தீயினில் இட்ட ஏடு.
பதிகம் - அட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால் - பதிகம் - சொல்; அட்டமூர்த்தி அதனாற் குறிக்கப்படும் பொருள்; "பதிகத்தின் நாதன்"; "ஈசன்றன் நாமமே"(2682) என்றவையும் இக்கருத்து; பொருளினை உட்கொண்டமையாற் சொல்லும், அதனை மேற்கொண்டதனால் அது எழுதப்பட்ட ஏடும் அத்தன்மைப்பட்டு வேவாதிருந்தன என்பது.
அட்டமூர்த்தி - "நிலனீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்" (திருவா. தோணோ - 5) மண் - நீர் - தீ - காற்று - வான் என்ற ஐம்பூதங்களும் ஞாயிறு - மதி - உயிர் என்ற மூன்றும் ஆக எட்டும் இறைவரது திருமேனி என்ப. ("புலனாய மைந்தன்" என்றதனால் ஏனைய ஏழும் அசித்து என்றபடி.)
அட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால் - பச்சையாய் விளங்கியது - என்றதென்னை? எனின் கூறுதும்: முன்கூறியபடி எட்டு மூர்த்தங்களுள் எரி - தீயும் ஒன்று; மூர்த்தம் - மூர்த்தி - என்பது உடல்; அவ்வுடலுள் உயிராய் இருப்பவன் மூர்த்திமான்; உயிரையன்றி உடலுக்குச் செயலில்லை; உடல் தனித்தியங்காது; அரசன்முன் அமைத்த எரி உடலும், அதனுள் இட்ட ஏடு அவ்வெரியுள்ளிட்ட எட்டினையும் உடலாக்கொண்ட மூர்த்திமானாகிய உயிர். ஆதலின் உடலினுள் உயிர் பொருந்தியவாறு இவ்வேடு அமர்ந்துபட்டுப் பச்சையாய் விளங்கியது. இடல் உயிரை அழிக்கமாட்டாதன்றோ? ஆனால் ஏடு இடுவதன் முன்னரும் எரியாகிய உடல் அவ்வுயிரை இன்றியமையாமல் உட்கொண்டிருந்த தன்றோ? எனின், அஃதொக்கும், முன்னரும் அத்தீ உயிருடன்தானிருந்தது. இறைவனது நிறைவு யாண்டுமுள்ளதன்றோ? ஆயின் பின்னர்ப் பதிகம் எழுதிய ஏடு, அத்தீயாகிய ஒருடம்பு அளவின்மட்டிலன்றி எட்டும் உடம்பாக உடைய மூர்த்தியை உட்கொண்டது. ஆதலின் சத்தாந் தன்மை மிகப்பெற்று எரியினில் வேவாமை மட்டுமன்றிப் பச்சையாயும் விளங்கிற்று என்க. இன்னும், அவ்வெட்டுமூர்த்தங்களுள் நீரும் ஒன்று, காற்றும் ஒன்று; எனவே தீயும் நீறும் காற்றும் உடன்கொண்ட மூர்த்தமாகிய அட்டமூர்த்தத் தொகுதிப்பொருள் உட்புகுந்தது. அஃது ஊழித்தீயினையும் ஊழிநீரினையும் ஊழிக்காற்றினையும் உள்ளடக்கியது; அவ்வாறாயின் இத்தீயினை அவித்தல்வேண்டுமே எனின், அதனுள் தீயுமிருத்தலின் அவிந்திலது; இத்தீயினை அடக்கவ்லலது அத்தீ; "நெருப்பையு மெரிக்கும்" (திருப்புகழ்); ஊழித்தீயை உள்ளடக்கிய தீயாகிய மூர்த்தம் இருக்கவே அங்கங்கும் தீயின் வடிவம் அளவுபடுத்தப்பட்டு நிகழ்வது அவ்வட்ட மூர்த்தியின் செயல்; "அங்கிமிகாமைவைத் தானுடல் வைத்தான்; எங்குமி காமைவைத் தானுல கேழையும், தங்கிமி காமைவைத் தான்றமிழ்ச் சாத்திரம், பொங்கிமி காமைவைத் தான் பொருடானுமே" (பாயிரம் - 87) என்று திருமூலர் திருமந்திரம் இதனை விளக்குதல் காண்க.
மலைமகள்பாகத்து அட்டமூர்த்தியைப் பொருள் என உடைமையால் - எரியினில் ஏடு இடவேண்டியகாலைப் "போகமார்த்த பூண்முலையாள் தன்னொடும் பொன் அகலம் - பாகமார்த்த - பரமேட்டி"(பதிகம்) என்ற பாட்டு எழுதிய ஏடு வந்து நேர்ந்தது; அதனை எரியிலிடில் பழுதிலை என்பது திருவருட் குறிப்பென அருள்வழியே உணர்ந்தனர் பிள்ளையார்; அதனால் அவ்வுணர்ச்சி கொண்டு "முலையாள் பாகமார்த்த பரமேட்டி" என்பதற்கு "மலைமகள் முலையிணையவை குலவலின் - எரியிடில் பழுதிலை என்று உரைகூறிப் போற்றி உலகுக்குக் காட்டியருளினர்; அவ்வாறு பிள்ளையார் காட்டிய நியாயத்தினைப் பின்னும் விளக்கி முலை குலவலின் என்பதற்கு முலைமலைமகள் பாகத் தட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால் என்று விரித்துரை செய்து காட்டியருளினர் ஆசிரியர். மலைமகளும் இறைவரது திருமேனி என்பது.
போகமார்த்த பூண்முலையாள் - பரமேட்டி - (திருவருட் குறிப்பு); மலைமகள் முலையிணை யவை குலவலின் நள்ளாறர் நாமமே - (பிள்ளையார் அருளியது); மலைமகள் பாகத் தட்டமூர்த்தியைப் பொருளென உடைமை - (ஆசிரியர் உரை).
பதிகம் - தீயிடைப் பச்சையாய் விளங்கியது - பதிகம் எழுதிய ஏடு விளங்கியது என்பது கருத்து. இங்கு வாதத்தில் ஒட்டிய பொருளாவது தீயினை ஏவல் கொண்டு சுடாதிருக்கப் பண்ணுதலன்று; அதனுள் இட்ட ஏடு பழுதிலாது நின்று உண்மை காட்டுதலேயாம்; தீயினை ஏவல்கொள்ளுந் தன்மை முன்னரே பிள்ளையார் "சுடர் - பையவே சென்று பாண்டியற் காகவே" எனப் பணித்தமையாற் போந்து அறிய நின்றது; அதனை உட்கொண்டுபோலும் அமணர்களும் "மன்னுதம் பொருட்கருத்து வாய்மைதீட்டி மாட்டினால், வெந்நெருப்பில் வேவுறாமை வெற்றி"(2675) என்று ஒட்டினர்; "அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடா தாகும் " (சித்தி - 10-5) என்றபடி தீயின் வேதனை தம்மாட்டுச் சாராது செய்தல் சில சாதனைகளால் ஆகும். இது சமணர் அறிந்த கலைகளுள் ஒன்று என்பது "அதிசயமன் றிதுமுன்னை யமண்சமயச் சாதகத்தா, லிதுசெய்து பிழைத்திருந்தான்"(1367) என்று பாடலி புத்திர அமணர், நீற்றறையில் அரசுகள் பழுதுறாது பிழைத்திருந்த போது பல்லவனுக்குச் சொன்னதனாலறியலாம்; எனவே அசேதனமாய் எரியுட்பட்ட மாத்திரையிற் பழுதுபடுவதாய் உள்ள ஏடு வேவாமை அதனுள் எழுதிய பொருளின் வாய்மைத் தன்மையாகிய வலிமையாலாவது என்று காண்பது அவர் கருத்து; அதனால் அவ்வலிமை ஏட்டினிற் காண வேண்டுவதாயிற் றாதலின் தீச்சுடாது குளிர்ந்ததென்று தீயின் செயலாகக் கூறாது பதிகம் - அட்டமூர்த்தியைப் பொருளென உடைமையின் தீயிடைப் பச்சையாய் விளங்கிய" தென்று, பதிகப் பொருளின் செயலாகக் கூறினார் என்க.
ஆயின் ஈண்டுத் தீயிற் பழுதுபடாது நிற்கும் வாய்மையின் வலிமையினை அவ்வேட்டினில் எங்ஙனம் கண்டு கொண் டருளினார் எனின், ஏட்டினைக் கண்டனர்; அதனுள் "பூண்முலையாள் பாகமுடைய பரமேட்டி" - என்ற சொற்றொகுதி கண்டனர்; அதனுள் அதன் பொருளாகிய நள்ளாறனையும், அவன் அருள்முலையாளொடு குலவலின் அட்ட மூர்த்தமாகிய உடம்புடையான் என்பதனையுமே கண்டனர்; அவ்வேட்டினை அவ்வாறே கருதுதல் (பாவனை); அழுந்தியறிதல் (தியானம்); ஆணையிடுதல் (மந்திரம்) என்ற செயல்களை அவ்வண்ணமாக்கினர்; "முலையொடு குலவலின்" என்றது பாவனை; "நாமமே" "மெய்ம்மையே" என்பன தியானம்; "எரியிடிலிவை பழுதிலை" என்பது ஆணையாகிய மந்திரம். என்னை? "நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திர மென்ப"(தொல்). அவ்வேட்டினை எடுத்து இவ்வாறு அருளுருவாக்கிக் கொண்டதனால் அவ்வேடு அத்தன்மையே பெற்றதென்க. "கண்டதொரு மந்திரத்தாற் காட்டத்தி லங்கிவே, றுண்டல்போனின்றங் குளதாமாற் - கண்டவுருத், தானது வா யன்றானான் றானதுவாய்த் தோன்றானோ, தானது வாய்க் காணுந் தவர்க்கு" (12 - 3 - அதி - வெண்பா) என்று தாபரத்தின்கட் சிவ வழிபாடு செய்க என விதிக்கும் சிவஞானபோத உண்மை ஈண்டுச் சிந்தித்துணரற் பாலது; இவ்வாற்றாற் சிவம் வெளிப்பட்டமையால் அவ்வேடு சிவனுருவாகிய எரியிடை அமைந்து பட்டதென்க. "மரத்தை மறைத்தது மாமத யானை.....பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே"(திருமந் - 8 - பராவத்தை - 23) என்றபடி இங்கு நள்ளாறர் நாமமேயாகிய பொருளியல்பே வெளிப்பட்டு, எழுத்தாகிய சொல்லும் ஏடும் தோற்றப்படாது நின்றன.
மட்டுஉலாம் குழல் - இயற்கையாகிய மணத்தையுடைய குழல். பட்ட தீயிடை என்று வேறு பிரித்து, வளர்க்கப்பட்ட என்றுரைப்பாருமுண்டு. அன்றே - அசையென் றொதுக்குவாருமுண்டு.
இனி, இப்பாட்டிற்கு மேற்கூறியவாறன்றி, "எரி அட்டமூர்த்தங்களுள் ஒன்று. அவ்வெரி ஆண்டவனுருவம்; இவ்வுண்மையை அநுபூதியில் உணர்ந்து திருவருள் ஞானம் பெற்ற பெரியாரின் திருவாக்கைக் கொண்ட திருப்பதிகம் எங்ஙனம் அழிந்து படும்?" என்று கருத்துரை கொள்வாருமுண்டு; அருள்ஞானம் பெற்ற பெரியாரின் திருவாக்கு என்பது பிள்ளையாரது எல்லாப் பதிகங்களுக்கும் ஒக்கும்; அதனால் இப்பதிகத்திகற்குச் சிறப்பியல்வு ஒன்றுமில்லை. ஈண்டு எரியில் பழுதில்லாதிருந்தது பிள்ளையார் திருவாக்கு என்பதனாலன்று; "மலைமகள் முலையிணை குலவலின்" - "அட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால்" - என்று பிள்ளையார்தாமும் ஆசிரியரும் உணர்த்தியருளினமை கொண்டும், இவ்வாற்றானும், பிறவாற்றானும் இக்கருத்துரை பொருந்தாமை கண்டு கொள்க.
இனி, ஈண்டு இத்திருப்பாட்டின் கீழ், விசேட ஆராய்ச்சியுரை எனப்பட்டுத் திரிபுணர்ச்சியானும் ஒருசார்புணர்ச்சியானும், உண்மைநூலின் நுட்பவுணர்ச்சி பெறாமையானும், வேண்டப்படாதனவும், சைவசித்தாந்தத்திற்கு முரண்பாடாயினவும், மயங்க வைப்பனவுமாகிய பல பொருள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை பொருத்தமற்ற ஆரவார நீர்மையவாகிய வெற்றுரைகளே என்று வேறு ஒதுக்கத்தக்கனவே யாயினும், சைவநூல்களின் உண்மைத் திறத்தின் அநுபவமில்லாதாரை மயங்கவைக்குமாதலின் அவைபற்றி ஈண்டுச் சில கூறுதல் தகுதியாகும்: அவர் கூற்றாவன:-- "உயிர்களைத் திருஞானத்துடன் சம்பந்தப்படுத்தும் ஒருவர் குரு எனப்படுவர் - திருஞான சம்பந்தர்
உலகுக்கு ஒரு பெருங் குருவாக வீற்றிருப்பவர். அவருக்குப் பல மொழிகளில் பல பெயர்கள் உண்டு. மொழியளவில் நிற்போர் அவரை வெவ்வேறு புருடராக உணர்கிறார்; உண்மைஞானங் கைவரப்பெற்றோர்க்கு அவர் ஒருவரே என்பது விளங்கும்;
திருஞான சம்பந்தரைச் சூழ்ந்து அவர்தம் ஏவல்வழி நிற்கும் குருமார் பலர் வீற்றிருக்கிறார்; உலகில் எங்கெங்கே திருவருள் நெறிமீது மாசு படிகிறதோ அங்கங்கே அம்மாசினைப் போக்கித் திருவருள் நெறியை விளங்கச் செய்யத் திருஞான சம்பந்தர் போதருவர்; இல்லையேல் தம்மைச் சூழ்ந்துள்ள குருமாருள் ஒருவரை அனுப்புவர்" - என்றும்,
"ஆண்டவன் ஒருவன்; அவன் அருள்நெறியும் ஒன்றே; அவ்வொன்று ஒவ்வொருபோது ஒவ்வொருவிதப் பெயர் பெறுவதாகிறது; அப்பெயர்கள் பல சமயங்களாக ஆராய்ச்சி யில்லாதவர்களாற் கொள்ளப்படுகின்றன; பலபட்ட பெயர்களை நீக்கிப் பொருளைப் பார்த்தால் ஒருமை புலப்படுமேயன்றிப் பன்மை புலப்படாது" - என்றும்,
"திருஞானசம்பந்தர் வருகைக்குக் காரணமாயிருந்தது அந்நாளிற் சமணமென்று பெயர் பெற்றிருந்த திருவருள் நெறியில் சேர்ந்த மாறுபாடேயாகும்; ஆதிநாதராகிய விருஷபதேவர் கண்ட அருள்நெறி தோன்றியவாறே இயங்கியிருப்பின் திருஞான சம்பந்தர் வருகைக்கு இடம் நேர்ந்திராது" - என்றும்,
".....ஆதிஜைனத்திடைச் சிறப்பாகத் திகம்பர ஜைனம் என்றும் சுவேதாம்பர ஜைனம் என்றும் இரண்டு பிரிவுகள் தோன்றின. திகம்பரம் இயற்கையை வெறுப்பது; பெண்ணை இழிவாகக் கருதுவது; பெண் பிறவிக்கு வீடுபேறில்லை; ஆண்பிறவி தாங்கிய பின்னரே வீடுபேறு எய்தும்......இவை ஆதிஜைனத்துடன் மாறுபட்டவை; இதற்கு உடன்படாதார் சுவேதாம்பரர்கள்; .......திகம்பரர் இயற்கை நெறியினின்றும் வழுவினார்கள்; பெண்ணை இழிவாகக் கருதினார்கள்; பெண்ணை வெறுத்தல் பெருந்துறவு என்று கொண்டார்கள்; இவர்களால் இயற்கை நெறிக்கும் பெண்ணுலகுக்கும் பெருந்துன்பம் நேர்ந்தது.......இது இறைநெறிக்குக் கேடு நேர்வதாகும்; இயற்கை இறையின் போர்வை அதாவது உடல்; அவ்வியற்கையை வெறுத்துக் துறப்பது இறையை வெறுத்துத் துறப்பதாகும். "உலகினி லியற்கையை யொழிந்திட், டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற வாலவா யாவது மிதுவே" (திருஞான சம்பந்தர்)" என்றும்,
"இயற்கையை உற்று நோக்கினால் அது ஆண் பெண் மயமாயிருத்தல் விளங்கும் ......இயற்கை நெறிக்கும் பெண்ணுலகுக்கும் இழுக்கு நேரும் இடங்களில் அருள்நெறி செவ்விய முறையில் இயங்காது.....தென்னாட்டில் திகம்பரத்தால் இயற்கை நெறிக்கும் பெண்ணுலகுக்கும் இழிவு நேர்ந்தமையால் அவ்விழிவைப் போக்கவே திருஞான சம்பந்தர் தோன்றினார்; அவர் அருள்நெறியாகிய ஆதிஜைனத்தை அழிக்கப் போந்தா ரென்பது ஆராய்ச்சியில்லாதார் கூற்று" என்றும், "திருஞான சம்பந்தரது திருவிரும்பூளைப் பதிகத்தில் "சமண் சாக்கிய மாக்கிய வாறே" என்றதனால் சமண் சாக்கியம் ஆக்கியவன் சிவனே என்பது விளங்குகிறது; ........சமண் சாக்கியம் என்பன அருள்நெறிக்கு வழங்கப்படும் பல பெயர்களுள் சேர்ந்தவை. ஆகவே சிவனால் ஆக்கப்பட்ட சமன் சாக்கியம் ஒழிந்துபடத் திருஞானசம்பந்தர் முயல்வரோ?" என்றும் "....சிவஞானம் சமணத்துக்கும் சைவத்துக்கும் பொதுவானது. சமணமும் சிவநெறி; சைவமும் சிவநெறி. சிவநெறி என்னும் அருள்நெறி ஒவ்வொருபோது ஒவ்வொரு பெயர் பெறுவது வழக்கம்" என்றும், ..."சிவாஹொந்தி" (குந்தகுந்தோச்சாரியர் அக்ஷ்டபாகுடம்); "சிவசுகம" (பூபால ஸ்தோத்திரம்); "சிவகதியடையலாமே" (சிந்தாமணி); "சிவகதிநாயகன்" (சிலப்பதிகாரம்); "சிவகதியின் அமர்ந்திருந்தார்" (மேருமந்தர புராணம்);"மூவெயிலின் முரண்முருக்கி... நெருப்புமிழ் நெடுநோக்கினை..கொடுங்கூற்றைத் தாள்வலியின் விழ வுதைத்தனை; மூன்று கண்முனித் தலைவினை.....நின்னுள் ளேநீ யொடுக்கினை...நின்னின்று நீ விரித்தனை; ....ஆதி பகவனை அருகனை" (திருக்கலம்பகம்) என்ற சமண நூல்களுள் வருவன....என்றும் ..."இயற்கையானது ஆண்டவன் உடல்; ஆண்டவன் பெண்ணொடு கூடியுள்ள பெருந்தகை என்பது பொதுளவே திருஞான சம்பந்தர் திருப்பதிகங்கள் பாடியுள்ளார்...உலகில் பெண் ஆண் கூட்டுறவு என்னும் பேரறம், இயற்கை-இறையின் வழியது என்பது திருஞான சம்பந்தர் உள்ளக் கிடக்கை; ..."பொறியைம் புலத்தின் வேட்கைநோய் தீர்க்கும் மருந்து..."என்றும், இவ்வாறு வருவன பலவாம்.
இவற்றின் பொருத்தங்களைச் சிறிது ஆராய்வாம்:(1) திருஞானசம்பந்தர் என்பது மூலகுரு - இறைவர் - என்ற காரணப்பொருள்பட மயங்கி யறியவைத்தது பிழை; (2) பின்னர் அப்பெயர்ச்சொல்லையே ஆளுடைய பிள்ளையார் பெயராக வைத்துப் பேசியது மயங்கவைத்தலாம்; (3) அருள்நெறிக்கு மாசு படியும்போதெல்லாம் அதனைப் போக்கத் திருஞான சம்பந்தர் வருவர் அல்லது அவரைச் சூழ்ந்துள்ள குருமாருள் ஒருவரை அனுப்புவர் என்றது சைவசமய உண்மையாகிய சித்தாந்தத்திற்கு முற்றும் மாறாகிய பெரும் பிழை; (4) அருள்நெறிக்கு மாசு படியாது. அவ்வாறு மாசு படிதல் சைவத்துள் இல்லை; திருஞான சம்பந்தர் என்பது ஆதி குருவாகிய ஞான இறைவர் என்று கொண்டால் அவருக்கு நம்போல் உலகில்வரும் அவதாரநிலை பேசுதல் சைவ சமயக் கோட்பாட்டுக்கு முற்றும் மாறுபாடு; வைணவ மரபில் அவ்வாறு பேசுதல் அமையும், அவர்கள் கடவுள் அவதாரம் என்னும் பிறப்பில் வருதல் அவர்தம் மரபுக் கொள்கையிற் பேசப்படுதலால்; ஏனைப் புத்தம் - கிறித்துவ முதலிய சமயங்களிலும் அஃதொக்கும்; சைவத்திற்கேலாமை யுணந்துகொள்க; (5) திருஞான சம்பந்தர் என்ற பெயருக்கு உயிர்களைத் திருஞானத்துடன் சம்பந்தப்படுத்தும் ஒருவர் குரு எனப்பட்டுப் பெருங் குருவாவர் என்றது பிழை; இப்பெயர்ப்பொருளை ஆளுடைய பிள்ளையார் புராணம் விளக்குகின்றது. உலகத் தந்தை தாயர்கள் சிவஞானத்தை ஊட்ட உண்டருளியமையாலும், கலைஞான மெய்ஞ் ஞானங்களை முற்ற உணர்ந்தமையாலும் இப்பெயர் போந்ததென்பது; 1966 - 1967 பாட்டுக்கள் பார்கக. இதற்கு மாறாகப் பொருள் கொள்ளுதல் பிழையும் மரபு வழுவுமாம்; அவ்வாறு கொள்ளற்கு இலக்கமுமில்லை. "எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர் செப்பின ரப்படிச் செப்புதல் மரபே" என்ப திலக்கணம்; (6) இறைவன் ஒருகாலத்து ஓரிடத் வருவோனல்லன் - எஞ்ஞான்றும் எவ்விடத்தும் ஒவ்வொரு கணமும் உடனின்று உலகினைத் திருத்தி உயிர்களை மாசறுக்கின்றான் என்பது உண்மைநூற் றுணிபாம்; (7) ஆண்டவன் ஒருவனே என்பதொக்கும்; ஆனால் அவனருள்நெறியும் ஒன்றே என்பது சாலாது; அஃது குழறுபடையானதொரு மயக்கம்; ஆண்டவன் ஒருவனேயாயினும் உயிர்கள் பல. அவை பலப்பல பக்குவமுடையன; ஏன்? ஓரோருயிரும் ஓரோர் திறமும் பக்குவமுமுடையதாம் என்னலாம். அவ்வுயிர்களின் திறமும் பக்குவமு நோக்கிப் பல திறப்படுவன இறைவனருளும் முறைகளும் நெறிகளுமாம்; அருணெறி முடிவில் வீடுபேறாகிய ஒன்றையே கருதினும் உபாயங்களும் சாதனங்களும் மிகப் பலவாம்; அருணெறி ஒன்றே என்றும், அஃது ஒவ்வொருபோது ஒவ்வொரு விதப் பெயர் பெறுமென்றும், அப்பெயர்கள் பல சமயங்களாக ஆராய்ச்சி யில்லாதவர்களால் கொள்ளப்படுகின்றன என்றும் இவ்வாறெல்லாம் பேசுதல் முழுக் குளறுபடையான மயக்கம்.
சமயங்கள் பலப்பல. அவை உயிர்களின் பக்குவபேதம் நோக்கி அவ்வவற்றை வழிப்படுத்த இறைவன் வகுத்தனவேயாம். "சமய கோடிகள் எல்லாம்" "சைவ முதலாமளவில் சமயமும் வகுத்து" என்பன பெரியார் திருவாக்கு. ஆதலின் சமயங்கள் எல்லாம் ஒன்று என்றும், புறத்தோற்றம் மட்டும் வேறுபடுவன என்றும் சொல்வன எல்லாம் பிழை. சைவம் எல்லாச் சமயங்களையும் படிமுறையின் வகுத்துத் தன்னுள் அடக்குதலால் இதனுள் எல்லாச் சமயங்களும் அடங்கும்; இஃது ஒன்றினுமடங்காது. ஏனைச் சமயங்கள் தாமறிந்து சென்ற அளவில் ஒருசில உண்மைகளை மட்டும் காட்டுவன. சைவம் முழு உண்மையினையும் காட்டும்; சமணமும், புத்தமும், இனியும் "விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே, எரிவினாற் சொன்னா ரேனும்" அவையெல்லாமும் தன்னுள் அடங்குவது சைவம்; ஆனால் அவை யெவையும் ஒவ்வோர் பகுதி மாத்திரையானன்றி முழுமையாகிய சைவமாகா; "கண்ணில்லார் பலர்குழீஇக்கொண்டு வேழ நின்றுழித்தலைப்பட்டுக் கையினாற் றைவந்து வேறு வேறு கூறு மிலக் கணங்க ளெல்லாங், கண்ணுள்ளா னொருவன்கண்டு கூறுமத னிலக்கணத்துள் ஏகதேச மாய்க்காணப்பட் டடங்க மாறுபோல, ஏனைச் சமயநூலார் தத்தஞ் சிற்றறிவுக்குப் புலனாயவாறு பற்றி அவ்வந்நூல்களிற் கூறும் பொருளியல்புக ளெல்லாம், முற்றுணர்வுடைய முதல்வனாற் செய்யப்பட்ட வேதாகமங்களிற் கூறும் பொருளியல்பின் ஏக தேசமாய்க் காணப்பட்டு அவற்று ளடங்கும்" எனவும், "நூலெனப்படுவனவெல்லா மொரு நிகரனவாதலின்றி, முதனூல், வழிநூல், சார்புநூல், பூருவபக்க நூலெனப் பல வேறு வகைப்பட்டு மேன்மேல் நூல்களை நோக்கிக் கீழ்க்கீழ் நூல்கள் மென்மையுடையனவாம்; அவற்றுள் ஏனைச் சமய நூல்களெல்லாம் முதனூலாகிய வேதாகமப் பொருளை முழுவதுமுள்ளவா றுணரமாட்டாதார் அவற்றுட் சில பொருளைச் சமுத்திர கலச நயம்பற்றி ஆண்டாண் டெடுத்துக்கொண்டு தத்தமறிவளவுக் கேற்பத் தொகுத்தும் விரித்துஞ் செய்த நூலாகலான், அவையெல்லாம் பூருவபக்க நூலெனப்படும்" எனவும் சிவஞான சித்தியார் 8 - 13 - 14 பாட்டுக்களின்கீழ் எம் மாதவச் சிவஞான முனிவர் கூறியவை ஈண்டுச் சிந்திக்கற்பாலன; (8) இனி, ஆதிநாதராகிய விருக்ஷபதேவர் கண்டது மாசற்ற அருணெறி என்றும், அந்த ஆதிஜைனத்திடை சில மாசுகள் படிந்தன என்றும், அவை இயற்கையை வெறுத்துத் துறவு பூண்பதும், பெண்ணை இழிவாகக் கருதுவதும் என்றும் பலப்பல எழுதப்பட்டன; உண்மை அருணெறியாயின் அதனில் மாசு சேராது என்பது முன்னர்க் காட்டப்பட்டது; இயற்கைநெறி என்பது பொருளற்றதொரு சொற்றொடர் வழக்காம். "உலகினி லியற்கையை ஒழிந்திட்டற்றவர்க் கற்றசிவன்" என்பதற்குக் கொண்ட பொருள் பிழை. உலகினிலியற்கையை ஒழிந்திட்டற்றவர் என்றது உலக பந்தங்களினின்று விடுபட்ட மனமுடையோர் என்றும், அற்றசிவன் - அவர்க்கு அவ்வறுதலின் கண்ணே வெளிப்பட்டருளும் இறைவன் என்றும் பொருள்கொள்ளக்கிடந்த இவர்க்கு நேர்மாறாக உள்ள திருவாக்கு ஆகும். "யானெனதென் றற்ற விடமே திருவடியாம்" (குமரகுருபரர்); (9) பெண் பிறவியைச் சமணர் இழித்தமையால் அதனை ஒழிக்கத் திருஞான சம்பந்தர் தோன்றினார் என்பது பொருத்தமற்ற மொழி; மகளிரிழிவு - துறவின் மேன்மை முதலியவை சைவத்திலும் பேசப்படும்; ஆண்பிறவியோ பெண்பிறவியோ இரண்டும், பிறவி என்ற அளவில் முத்திக் கிடையூறாவன; ஆண்உயிரென்றும் பெண்ணுயிரென்றும் வேற்றுமை உயிரினுள் இல்லை; பிறவிகளுள் ஒன்றினை உயர்த்தியும் ஒன்றினைத் தாழ்த்தியும் கூறுதலும் சைவமன்று; பெண்ணின்பெருமை பேணத் திருஞான சம்பந்தர் தோன்றி யருளினார் என்பது பெரும்பிழையேயாம். பெண்ணேயாக ஆணேயாக அன்பு நெறியினையே சைவம் போற்றி எடுத்தது; பெண்ணை உயர்த்திப் போற்றிய இடமுமுண்டு;
தாழ்த்தி ஒதுக்கிய இடமுமுண்டு. இவ்வுயர்வு தாழ்வுகள் அன்பினைப் பற்றி எழுந்த னவேயன்றிப் பிறவியினிலை பற்றி எழுந்தனவல்ல; பிள்ளையாரது சமண வாதத்துக்கும் பெண் இழிவோ உணர்வோ என்ற இதற்கும் சம்பந்தமில்லை; சைவத்திற்குச் சமணர் சூழ்ந்து செய்த கேடுகளைப் போக்கித் திருநீற்றை ஓங்க ஆக்கித் தாபித்தலே இவ்வாதங்களின் கருத்தாதல் காண்க; (10) சமணத்தை அழிக்கத் திருஞான சம்பந்தராவது, அரசுகளாவது வேறு எந்தச் சைவ ஆசாரியராவது முற்படவில்லை; சமணர் சைவத்துக்குச் செய்த சூழ்ச்சிகளையும் கேடுகளையும் ஒழித்துத் தற்காப்புமட்டிற் செய்தனர் என்க; (11) சமண்-சாக்கியம் முதலியவையும் இறைவனால் உயிர்களின் பக்குவ பேதம்பற்றி ஆக்கப்பட்டன; ஆதலின் அவற்றை அழிக்கப் பிள்ளையார் முற்படார் என்றனர்; பாம்பு-தேள்-புலி-தீ-முதலியவையும் இறைவரால் ஆக்கப்பட்டன என்ற காரணத்தால் அவற்றை எடுத்துக் குலவுவார் உண்டோ? அவற்றைக் காட்சிச்சாலையில் அவ்வவற்றளவில் வைத்து அமைவுபடுத்துதலே முறையாம். சமணம் இறைவனால் ஆக்கப்பட்டமையால் அதுவும் சைவமும் ஒன்றாகுமோ? பசுவும் பாம்பும் ஒக்க இறைவனால் படைக்கப்படினும் ஒன்றாகாதவாறு இவையும் கொள்ளப்படும்; (12) இவர்கள் சிவம் சிவகதி என்ற சத்தங்கள் சமண நூல்களுள் வருதல்காணப் பெருமுயற்சி செய்தெடுத்தனர்; இது பயனில் முயற்சி என்றொழிக. சிவம் - சிவகதி முதலியவற்றிற்கு அவர் கொள்ளும் பொருள் வேறு; சைவம் கொள்ளும் பொருள் வேறு. பொருளொற்றுமையின்றி வெறும் சொன்மாத்திரை கொண்டு மயங்குதல் முறையன்று; (13) வேத சிவாகமங்களிற் போற்றப்படும் சிவனையும் ஏனைக் கடவுளர் - சிறு தெய்வங்களையும் ஒன்றாகவைத் தெண்ணுதல் பெரும் பிழை; சைவத் தெய்வப் பரமாசாரியார்களை ஏனைச் சிறுசமயங்கள் - போலிச் சமயங்க-ளென்றிவற்றின் குருமார்களுடன் ஒன்றாக வைத்துப் பேசுதல் உய்தியில்லாத பெரும்பாவமும் சிவாபராதமுமாம்; "மூவரென்றேயெம் பிரானொடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேற், றேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதவரே"(திருவாசகம்); "சிவனோ டொக்குந் தெய்வந் தேடினு மில்லை, அவனோ டொப்பாரிங் கியாவரு மில்லை"(திருமந்திரம்); (14) சமயங்களைப் புறப்புறம் - புறம் - அகப்புறம் - அகம் என நால்வகையாக வகுத்து அவற்றுள் ஆருகதம் என்னும் சமணம் சீவன் முதலாகப் பதார்த்தங்கள் ஏழு கொள்வதென்றும், இவ்வெழுவகைப் பதார்த்தங்களும் உண்டாம் - இல்லையாம் - உண்டுமில்லையாம் என்பனமுதலாக எழுவகையால் கூறப்படும் அனேகாந்த வாதத்தைக் கொண்டதென்றும், வேத சிவா கமமாதி உண்மை நூற்களை உடம்படாது மாறுபடுவதென்றும், கண்ட நம் பெரியோர் அதுவும், அதுபோன்ற பிறவும் உயிர்களை உண்மை காணமாட்டாது மயக்காத வண்ணம் நியாயங் காட்டி மறுத்துப் பரபக்கம் கூறிச் சைவத்தின் உண்மையை நாட்டினர்; இது பற்றியே ஆசிரியரும் "தெளியா தொருபொருளே பொய்யுமெய்யு மாமென்னும் புரை நெறியார்" என்று இதன் கருத்தினை வடித்துக் கூறியருளினர்; இவற்றையெல்லாம் விட்டுச் சைவத்தோடொப்ப ஆதிசமணம் மாசற்ற அருணெறி யென்றும், பிறவாறும் மேற்கூறியபடி யெல்லாம் பிதற்றிப் போலிச் சமரசம் காண முயலும் உரையெல்லாம் பட்டப்பகலில் காக்கை வெளிதென்பது போன்ற வெளிற்றுரையேயாமென்று விடுக்க.
முன் அரசுகள் புராணம் 1560-ல் கீழும், பிறாண்டும் உரைத்தனவும், இனியும் ஆண்டாண்டுரைப்பனவும் கண்டு கொள்க.
இனி, முன்னர்ச் சுரந் தீர்த்ததற்கும், பின்னர் நீரில் வெல்வதற்கும் தனிப் பதிகங்களினால் அருள்மேற்கொண்டாங்குச் செய்யாது, இங்குத் திருமுறையினை மறித்தெடுத்து வந்த ஏட்டினைப் போற்றித் தீயில் இட்ட கருத்தென்னையோ? எனின்:அவ்வாறு செய்தருளவுற்ற திருவருட் குறிப்பு எம்மா லறியும்தரமன்று; "ஆட்பாலவர்க் கருளும் வண்ணமு மாதிமாண்பும், கேட்பான்புகி லளவில்லை கிளக்க வேண்டா" என்பது ஆணை; ஆயினும் ஒன்று கருத உள்ளதனை ஈண்டு அச்சத்துடன் குறிக்க நினைக்கின்றேன்: முன் செய்த சுரந்தீர்த்த செயல் சமயஉண்மை காட்ட ஒட்டிச் செய்த வாதமன்று; அரசன் நோயின் மிகுதியால் "நீங்கள் தேறிய தெய்வத் தன்மை யென்னிடைத் தெரிப்பீர்" (2657); "இகலித் தீரும்"(2659) என்று கூறிய அளவிலன்றிப் பிள்ளையார் "பேசுதிர் நும்பொருள் எல்லை" என்று வாதத்தில் அழைக்க, அமணர் வாய்மை ஏடு நெருப்பில் வேவுறாமை வெற்றியாகும்; அது கட்புலத்திலுய்ப் பது என்று ஒட்டினாராக, அதன்படி துணிந்து வாய்மை நிலைநாட்ட எழுந்தது இவ்வாதமாதலின் தாமாத் துணிந்து செய்தலின்றி இறைவரருட் குறிப்பினையே கைக்கொண்டு செய்தல் தகுமென்பது பிள்ளையாரது திருவுள்ளக்கிடைபோலும் என்பது கருதப்படுவதாம்; பின்னர்ப் புனல் வாதத்தில், இவ்வாறு முன்னர்த் தீயினில் நிலைகண்ட வாய்மையினைப் பாண்டியனுக்குத் தேற்றி ஞானோபதேசம் செய்த ஆட்கொள்ளும் வகையாற் றிருப்பாசுரம் பாடப்பட்டதென்பதும் கருதப்படும். எய்திய செந்தமிழ்ப் பதிகம் - என்பதும் பாடம்