மான மன்னவ னவையின்முன் வளர்த்தசெந் தீயின் ஞான முண்டவ ரிட்டவே டிசைத்தநா ழிகையில் ஈன மின்மைகண் டியாவரும் வியப்புற வெடுத்தார் பான்மை முன்னையிற் பசுமையும் புதுமையும் பயப்ப. | 789 | (இ-ள்) மானமன்னவன்....ஏடு - ஞானபோனகராகிய பிள்ளையார், பெருமையுடைய பாண்டியனது சபையின்முன் வளர்க்கப்பட்ட தீயிலே இட்ட ஏடு; இசைத்த...கண்டு - குறிப்பிட்ட நாழிகையளவில் அழிவுபெறாமல் நின்றதனைக் கண்டு; பான்மை...பயப்ப - முன்னையினும் பசிய தன்மையும் புதிய தன்மையும் உளதாயிருக்க; யாவரும் வியப்ப எடுத்தார்- எல்லாரும் அதிசயிக்கும்படி தீயினின்றும் எடுத்தருளினார். (வி-ரை) மான மன்னவன் - மானம் - பெருமை; ஈண்டுக் கொள்கையின் பெருமைபெற்ற நிலை குறித்தது. அவையின் முன் - அவையின் முன் வளர்த்த என்றும், அவையின் முன்இட்ட என்றும், அவையின் முன் எடுத்தார் என்றும் தனித் தனி கூட்டி யுரைத்துக்கொள்க. தீயின் - தீயின் இட்ட என்றும், தீயினின்று எடுத்தார் என்றும் அவ்வாறே தனித் தனி கூட்டுக. இசைத்த நாழிகை - இத்தனை நாழிகை வரை வேவாதிருத்தல் வேண்டுமென்று குறித்துக் கொண்ட காலஎல்லை. ஈனமின்மை - அழிவுறாமை. பசுமைப்பான்மையும் புதுமைப்பான்மையும் என்க. முன்னையினும் பயத்தல் - அதிகரித்தல் - மேம்படுதல். பசுமை - ஏட்டின்பாலும், புதுமை - அதில் எழுதிய பொருளின்பாலும் கொள்க. பசுமை - திண்மை; தீயிற்படும் ஏனைய பொருள்கள்போலன்றி வறட்சி நீங்கிப் பசுமை பெற்ற நிலை; இதனால் இதற்குப் பச்சைப் பதிகம் என்று பெயர் வழங்கும். "தான் செய்த - பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம் பா, வித்துப் பொருளை விளைக்கவல பெருமான்" (ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை) என்ற நம்பியாண்டார் நம்பி திருவாக்கும் காண்க. இதனுள் பாவித்துப் பொருளை விளைக்க வல என்ற கருத்து ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. "பச்சையாய் விளங்கிய தன்றே"(2684). புதுமையாவது அவ்வேட்டில் எழுதிய பொருள் முன்னர்ப் பொதுவகையால் இறைவனது பொதுவியல்பு கூறிய நிலையில் அறியப்பட்டது. இங்கு இவ்வரலாற்றின் றொடர்பினால் சிறப்பாகவும் அவனது சிறப்பியல்பு பற்றிய நிலையிலும் அறிந்து வழிபடப் பெறுவது. பயப்ப - பயனாகப் பெற; பயப்ப எடுத்தார் - என்க. வியப்பாவது - அழிவின்மையோடு முன்னையினும் பசுமையும் புதுமையும் பயப்ப விளைதல். பான்மை - பான்மையினால்; தெய்வத் தன்மையினால் என்றலுமாம். |
|
|