பாடல் எண் :2688
எடுத்த வேட்டினை யவையின்முன் காட்டியம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலு மதிசயித் தரசன்
தொடுத்த பீலிமுன் றூக்கிய கையரை நோக்கிக்
"கடுத்து நீரிட்ட வேட்டினைக் காட்டுமி" னென்றான்.
790
(இ-ள்) எடுத்த....கோத்தலும் - (அவ்வாறு தீயினின்றும்) எடுத்த அவ்வேட்டினை அரசனவையின் முன்னே காட்டி, (முன்பு கழற்றிய) அம்முறையினாலே மீளப் பொருந்தும்படி சுவடியினுள் கோத்தலும்; அரசன் - பாண்டியன்; அதிசயித்து - அதிசயம் கொண்டு; தொடுத்த...என்றான் - கற்றையாகக் கட்டிய மயிற்பீலியை ஏந்திய கைகளையுடைய அமணர்களைப் பார்த்துக் கோபித்து நீர் தீயில் இட்ட ஏட்டினைக் காட்டுங்கள் என்று சொன்னான்.
(வி-ரை) எடுத்த ஏடு - தீயினின்றும் வியப்புற எடுத்த ஏடு; விளக்கம் போற்றல்பெறாதிருந்த திருநீற்றின் றிறத்தினை மேல் எடுத்த என்ற குறிப்புமாம்; "எடுத்த பொற் பாதமும்"(தேவா); "எடுக்கு மாக்கதை"(புரா).
அவையின் முன் காட்டி - பேரவை காண - இட்டாராதலின் (2683) அஃது பழுதின்றி எடுக்கப்பட்டமையும் அந்த அவையார் காணும்படி காட்டி.
அம்முறையில் - கோத்தலும் - சுவடியினின்றும் கழற்றிய அவ்வண்ணமே ஏடுகள் முன் வரிசையிற் பொருந்தும்படி கோத்தல் வேண்டும் என்பது.
பீலிமுன் தூக்கிய - நெஞ்சு சோரவும் அச்சோர்வு புலப்படாது மறைத்துப் பீலி கை சோராது ஊக்கங்கொண்டார்போலத் தூக்கிப் பிடித்த என்க; முன் - விளக்கமாக; தூக்குதல் - பலருமறியும்படி உயர்த்துதல்.
கடுத்து - கோபித்து; கடுத்து - இட்ட என்று கூட்டுக. "முகங் கோபத்தீத் துள்ளியெழு மெனக்கண்கள் சிவந்து" (2653); கடுத்து - என்றான் என்று கூட்டி, மன்னவன் செயலைப் பற்றிக் கூறுதலுமாம்; முன்னரே "என்னவா துமக்கு"(2674) என்று கூறியதும், அரசன் அதன்மேல் ஒன்றுரைக்குமுன் பிள்ளையார் தடுத்து மேற்கூறியருளியமையும் காண்க.
காட்டுமின் - இகழ்ச்சிக் குறிப்புப்படக் கூறியபடி; "எய்திய நகையி னோடும்"(2690) என்பது காண்க. கையர் - வஞ்சகர் என்றலுமாம்.