தென்னவ னகையுட் கொண்டு செப்பிய மாற்றந் தேரார்; சொன்னது பயனாக் கொண்டு சொல்லுவார் "தொடர்ந்த வாது முன்னுற விருகாற் செய்தோ", முக்காலி லொருகால் வெற்றி யென்னினுமுடையோ மெய்ம்மை யினியொன்று காண்ப"தென்றார். | 794 | (இ-ள்) தென்னவன்...தேரார் - பாண்டியன் இகழ்ச்சியாகிய புன்சிரிப்பை உட்கொண்டு சொல்லிய மாற்றங்களை மனத்துட் டெளிந்து மேற்கொள்ளாதவர்களாகி; சொன்னது....சொல்லுவார் - சொன்ன சொன் மாத்திரையே அதன் பொருள் என்று மேற்கொண்டு சொல்வார்களாய்; "தொடர்ந்த...காண்பது" என்றார் - "தொடர்ந்த வாதமாக முன்பு இரண்டு முறை செய்தோம்; மூன்று முறையில் ஒரு முறையேனும் வெற்றி யடைவோம்; ஆதலின் உண்மைத் திறம் இனி ஒருமுறை காணத்தக்கது" என்றார்கள். (வி-ரை) நகையுட்கொண்டு....தேரார் - நகையுட்கொள்ளுதல் - இகழ்ச்சிக் குறிப்புடன் கூறுதல்; தேரார் - அங்ஙனம் தெரியாதார்போலப் பாவனை காட்டி; அதன் புறப்பொருளையே பொருளாத் தொடர்ந்துகொண்டு என்பார் சொன்னது பயனாக்கொண்டு என்றார். சொன்னது - சொல்லின் பருப்பொருள். தொடர்ந்த வாது - முன்னுற இருகாற் செய்தோம் - மேலும் தொடர்ச்சிபெறும் பொருட்டு ஒன்றற்கொன்று தொடர்பின்றியே முன்னர்த் தனித்தனி நிகழ்ந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றுபடுத்தித் தொடர்ந்த வாது என்றெடுத்துப் புனைந்து கொண்டது ஒரு வஞ்சனை; ஒன்று தவறின் மூன்று", "கங்கையும் மூன்று பிழை பொறுக்கும்" என்பது முதலிய சாமானிய உலக வழக்கினையும் தம் பக்கமாக எடுத்து முக்காலில் என்று மேலும் ஒரு வாதத்திற்குத் தோற்றுவாய் செய்துகொண்டது மற்றுமொரு சூழ்ச்சியாம்; "சூழ்ச்சி முடிக்குந் தொழிலோர்"(1387); இவ்வாறு சூழ்தல் தீவினைப்பட்ட செயலாய் உலகநிலை மாக்களின் இயல்பாம். அதனினும் மேலாய் சமயப்பீடை மிகக்கொண்டவர்களாகி வன்கணாளர்களாகிய சமணர்களிடம் இது மேலும் கொடிய அடர்ந்த நிலையிற் காணப்படும்; மேல்வரும் பாட்டுப் பார்க்க. அரசுகளை அமணர், தம் உரை ஒன்றன்பின் ஒன்றாய்ப் பலிக்காமை கண்ட பின்னும் ஒன்றன்மேலொன்றாய் நான்குமுறை மரணதண்டம் செய்வித்த தறுகண்மை அவர் சரிதத்துட் காண்க; இவர்கள் மேலும் மேலும் இவ்வாறு யாதாமொரு காரணங் காட்டி ஒட்டிக்கொண்டே முடிவின்றிச் செல்வார் என்பதும், அரசன் மறுப்பினும் பிள்ளையார் கருணையினால் அவர்களாகச் சலிக்குமளவும் இடந் தந்தருளுவர் என்பதும் அனுபவத்தாலும் நுண்ணறிவினாலும் உணர்ந்த அமைச்சர், பின்னர், "வேறினிச் செய்யும் இவ்வாது ஒன்றினுந் தோற்றார் செய்வ தொட்டியே செய்வ" தென்பதும் (2693 - 2695) காண்க; வாதம் செய்தால் இவ்வாறு ஒட்டிச் செய்யும் வழக்கும் அதன் முடிவில் தன்படி தீர்வு நிகழ்த்துவதும் உண்மை. "இந்தவூரி லிருக்கிலோ மென்றே யொட்டினார்...இந்த வழக்கை முடிப்பதென மொழிந்தார்"(17) என்ற தண்டியடிகணாயனார் வரலாற்றினாலும் இவையறியப்படும். முக்காலில் ஒருகால் வெற்றி யென்னினும் உடையோம் - உடையோம் என்று உறுதிபெறக் கூறியது வாதந் துணிவோர் இயல்பு. வெற்றி பெறுவது உறுதி; அவ்வாறு பெறினும் முன் இருமுறை தோற்றமை(2697) அரசன் குறிப்பிட்டபடி தோல்வித் தானமே மிகுதியாம்; ஆயினும் யாங்களும் மெய்ம்மை முழுமையல்லாவிடினும் ஒரு பகுதியேனும் உடையோமாகக் காண்பது பொருளாம் என்று தொடர்ந்து தமது நிலையை ஏற்பித்தது சூழ்ச்சியின் மற்றுமொரு நிலை; இது சிறிதாகக் காட்டி உள்நுழையும் சூழ்ச்சித் திறன். உடையோம் - மெய்ம்மை என்று கூட்டினுமாம். |
|
|