பாடல் எண் :2693
தோற்கவு மாசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்"டிம்
மாற்றமென் னாவ"தென்று மன்னவன் மறுத்த பின்னும்,
நீற்றணி விளங்கு மேனி நிறைபுகழ்ச் சண்பை மன்னர்
"வேற்றுவா தினியென் செய்வ?" தென்றலு மேற்கோ ளேற்பார்,
795
(இ-ள்) தோற்கவும்....கேட்டு - ஒருமுறைக் கிருமுறையும் தோற்கவும் ஆசை விடாத உண்மைத் துணிவிலாத அமணர் இவ்வாறு சொல்லக் கேட்டு; இம்மாற்றம்...பின்னும் - அரசன் இந்த மாற்றம் என் ஆகக்கடவது? - இதனாற் கடவது ஒன்றுமில்லையே - என்று மறுத்தபின்பும்; நீற்றணி....என்றலும் - திருநீற்றின் அழகு விளங்கும் திருமேனியினையுடைய நிறைந்த புகழினையுடைய சீகாழித் தலைவர் இனிச் செய்யும் வேறு வாது என்ன? என்று கேட்டலும்; மேற்கோள் ஏற்பார் - வாதத்தினை மேற்கொள்வதனை ஏற்றுக்கொள்பவராகி,
(வி-ரை) தோற்கவும் ஆசை நீங்கா - அனுபவத்தாலும் அறிவுபெறாத ஆணவமலத் திண்மையுடைய; மாசை என்று பிரித்து மாசினை உடைய தன்மதத்தை என்பாருமுண்டு.
துணிவு - உண்மையிற் றுணிந்து ஒழுகும் தன்மை;
மன்னவன் இம்மாற்றம் என்ஆவது என்று மறுத்த பின்னும் - இது ஒன்றும் பெறாத வெற்றுரை என்று அரசன் மறுத்த பின்னரும்; தீ வாதத்தின் முன்னதே "என்ன வாது உமக்கு"(2674) என்ற அரசன் இங்கு அந்நிலையின் மேலும் ஒரு தோல்வி கண்டபோது முற்றிலும் மறுத்தனன் என்க;
பின்னும் - என்றலும் - பிள்ளையாரது கருணைப்பெருக்கைக் காட்டிய குறிப்பு உம்மை சிறப்பு.
நீற்றணி....மன்னர் - நீற்றணி விளங்கு மேனி - "புத்தரொ டமணை வாதி லழிவிக்கு மண்ண றிருநீறு செம்மை திடமே"(தேவா) என்று திருமறைக்காட்டில் முன்னரே ஆணை நிகழ்ந்ததற்கேற்ப ஈண்டுத் திருநீறே முதலில் வாதத்தில் வெற்றிகொண்டதாதலின் அவ்வெற்றிக் கோலம் மேலும் விளங்குவதாம் என்பது குறிப்பு.இக்கருத்தே பற்றிப் பின்னர் வைகைக் கரையில் ஏடிடுக என்று மன்னவன் பிள்ளையாரை நோக்கிய போது "நீற்றணி திகழ்ந்த மேனி நிறைமதிப் பிள்ளை யாரும்" (2712) என இக்குறிப்பே கண்டு போற்றினர். "நீற்று வண்கையான் மறித்தலும்"(2680)
நிறைபுகழ் - தாமே வெற்றிகொண்டபோதும் தோல்வியுற்ற பதகர்மீது கருணை கொண்டமை புகழின் நிறைவாகும். "உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன், றீவார்மே னிற்கும் புகழ்"(குறள்) என்ற கருத்து ஈண்டு வைத்துச் சிந்திக்கற்பாலது; அமணர் தோல்வியுற்ற பின்னும் இனி வேற்று வாது என்? என்று கேட்டதும், அதுவும் மன்னவன் மறுத்த பின்னும் கேட்டதும் புகழின்பாலதாம். "இறைவன் பொருள்சேர் புகழ்" என்றவிடத்து இறைமைக் குணங்கள் முற்றவுமுடைய இறைவன் புகழே புகழெனப்பட்டது என்ற தன்மையின் கருத்தும் ஈண்டுக் கருதுக. நிறை புகழ் - என்ற கருத்துமிது. புகழின் எல்லை என்றபடி.
மன்னவன் மறுத்த பின்னும் - நிறைபுகழ்ச் சண்பை மன்னர் - மாறனும் மன்னவன் - பிள்ளையாரும் மன்னவர் என ஒப்புக்கூறிய குறிப்பும், அதன் மேலும் இரப்பார்க்கொன் றீதலை மறுத்த அம்மன்னவனிலும், ஈந்த பிள்ளையார் புகழின்நிறைவுடையார் என ஏற்றம் பெறக் கூறிய குறிப்பும் காண்க. மன்னன் சொல்லுக்கு மாறாக உரைத்தலும் செய்தலும் வல்லவர் பிறிதொரு மன்னரேயாவர் என்றதும் குறிப்பு.
சண்பை - சீகாழியின் ஒன்பதாவது பெயர்.
இனி வேற்று வாது செய்வது என் - என்க; "இனி ஒன்று காண்ப"தென்று (2692) பொதுப்படக் கூறினார்களாதலின் அது என்ன? என்றார். வேற்று வாது - நீங்கள் மேற்கொள்ளும் வாதங்கள் முன்சொன்ன தன்மையில் தோல்வியுறுவனவே யன்றி வேற்று வாதம் என்ன உளது என்ற குறிப்பும் போதருதல் காண்க.
மேற்கோள் ஏற்பார் - மேற்கோள் - மேற்கொள்ளுதல்; ஏற்றல் - துணிந்து முற்படுதல்; ஏற்றுக் கொள்ளுதல்; ஏற்பார் - என்றார் என வரும் பாட்டுடன் முடிக்க.