பாடல் எண் :2696
அங்கது கேட்டு நின்ற வமணரு மவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூறப் பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே "தனிவாதி லழிந்தோ மாகில்
வெங்கழு வேற்று வானிவ் வேந்தனே" என்று சொன்னார்.
798
(இ-ள்) அங்கு...கூர - அங்கு அதனைக் கேட்டுநின்ற அமணர்களும் அவ்வமைச்சர்மேல் போயின பொங்கி எழுந்த சினம் மீக்கூர்தலால்; பொறாமை....சோர்ந்து - பொறாமை என்னும் தீக்குணம் மிக்க காரணத்தால் தங்களுடைய வாய் சோர்ந்ததனால்; தனி வாதில்....என்று - இவ்வொரு வாதத்திலும் தோற்றோமானால் இவ்வரசனே எங்களை வெவ்விய கழுவில் ஏற்றுவானாவன் என்று; தாமே சொன்னார் - தாமே சொன்னார்கள்.
(வி-ரை) அவர்மேற் சென்று பொங்கிய வெகுளி - இவ்வாறு தமது சூழ்ச்சிகளுக்கு ஒரு முடிவான எல்லை வகுத்ததனை எண்ணி அவர்மேற் சினங் கொண்டார்கள்.
பொறாமை காரணமேயாகத் தங்கள் வாய் சோர்ந்து - மேற்கூறும் வஞ்சினமாகிய ஒட்டுதலுக்குப் பொறாமையே காரணமாயிற்றன்றி, வேறெவரும் அவரை அவ்வாறு செலுத்தினாரிலர்; பொறாமை - சைவர்களது ஆக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாது அழுக்காறு படுதல்; "அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார், வழுக்கியும் கேடீன்பது"; "அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்"(குறள்) என்பன முதுமொழி யாதலின் ஈண்டுப் பொறாமையினால் தங்கள் கேட்டினைத் தாமே தேடி வரவழைத்துக் கொண்டனர் என்பதாம். இங்ஙனமாகவும் சமணர் கழுவேறிய செயலின்காரணத்தை அமைச்சர் பாலதாகவோ, அன்றிப் பிள்ளையார் பாலதாகவோ சுமத்திப் பழிசாற்றுதல் எத்துணைப் பெருந்தவறு! என்பதறியலாம். இவ்வாதம் ஒட்டிச் செய்வது என்று அமைச்சர் அறுதியிட்டனரே யன்றி இன்னபடி என்று வகுத்தாரிலர். தண்டியடிகள்பால் "நாங்கள் இவ்வூரிலிருக்கிலோம்" என்று ஒட்டிய இவர்களது சகோதர சமணர்கள் போலவே இவர்களும் தாமே ஒட்டினர் என்க.
தனி...வேந்தனே என்று சொன்னார் - தனி வாது - இனி ஒன்று என்று வேண்டிப் பெற்ற இவ்வோர் வாதம்; தனி - ஒப்பற்ற என்றலுமாம்; வேந்தனே ஏற்று வான் - வேந்தன் எங்களை இவ்வாறு முறை செய்வானாக; அதற்கு நாங்கள் இசைகின்றோம் என்று ஒட்டினார். இசைவு தங்கள் பாலதாகவும் அதனை இயற்றுதல்மட்டில் அரசன் பாலதாகவும் வைத்துக் கூறியது காண்க; தாமே - தம் பொறுப்பாகவே.