பாடல் எண் :2699
தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயி னீங்கிப்
பின்னுற வணைந்த போது பிள்ளையார் பெருகுஞ் செல்வம்
மன்னிய மதுரை மூதூர் மறுகில்வந் தருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர் தொழுதுவே றினைய சொன்னார்.
801
(இ-ள்) தென்னவன்...போது - பாண்டியன் வெப்பு நோய் நீங்கிச் செழிய அழகிய அரண்மனையினின்றும் புறப்பட்டுத் தமது பின்னே பொருந்த அணைந்தபோது; பிள்ளையார்....கண்டு - பெருகுகின்ற செல்வம் நிலையாக நிறைந்த மதுரையாகிய பழம்பதியின் வீதியில் பிள்ளையார் எழுந்தருளி வருதலைக் கண்டு; துன்னிய....சொன்னார் - வந்து நெருங்கிய மாதர்களும் மைந்தர்களும் வணங்கித் தத்தமக்குத் தோன்றியவாறே வெவ்வேறு விதம்பட இத்தன்மையான மொழிகளைச் சொல்லலாயினர்.
(வி-ரை) செழுமணிக் கோவில் - அரசனுடைய அரண்மனை. தென்னவன் - பின்னுற அணைந்தபோது - பிள்ளையார் வந்தருள - என்றது அரசன் பின்னும் பிள்ளையார் முன்னுமாகப் போந்த முறையும், அரசன் பின் அணைந்த பின்பு பிள்ளையார் வீதியில் புறப்பட்ட காலமுறையும் குறித்தபடி; பின்னுற - பின்பற்ற என்றதும் குறிப்பு. இவ்வாத முடிவில் பிள்ளையார் ஈந்தருளிய திருநீற்றினை முழுவதும் அணிந்து புனிதனாய் உய்ந்த வரலாறும் காண்க (2755 - 2756).
பெருகும் செல்வம் மன்னிய மதரை மூதூர் - அங்கயற் கண்ணம்மையாரது அருள் நோக்கமாகிய அரசசெல்வம் நிலைபெற்று நிறைந்த பழவூர். இத்தன்மை என்றும் நிலைபெற்றும் பெருகியும் நிகழ்வது இன்றும் கண்கூடு. "பண்டு மின்று மென்றுமுள்ள பொருள்"(திருப்பல்லாண்டு) என்ற தன்மை இம்மூதூருக்கும் பொருந்தும்.
வந்தருள - ஒருசொல்; வந்து அருள என்று பிரித்து வந்து நகர மாந்தர்க்குக் காட்சி தந்து அருள என்றலுமாம்; பின்னர் "மன்னனீ றணிந்தா னென்று மற்றவன் மதுரை வாழ்வார், துன்னிநின் றார்க ளெல்லாந் தூயநீ றணிந்து கொண்டார்"(2755) என்னும்படி நகர மாந்தரும் அருள்பெறும் குறிப்பு.
துன்னிய மாதர் மைந்தர்தொழுது - பிள்ளையார் பின் அரசனும் அரசியாரும் மந்திரியாரும் எழுச்சியாக ஒருபுறமும், அமணர் கூட்டம் எண்ணாயிரம் ஒரு பக்கமுமாக மிகப் பெரிய ஆரவாரமுடைய எழுச்சியானமையாலும், தெய்வத்தன்மை விளங்கிய வாதமும் அரசன் நோய் நீங்கினமையும் ஆகிய பெருஞ் செயல்கள் நகர முழுதும் பரவிவிட்டமையாலும் நகர மாந்தர் இவ்வெழுச்சியினையும், இதன் விளைவாகிய முடிவினையும் காணும் ஆர்வத்துடன் எழுந்துவந்து மறுகில் கூடினார்கள்; அவருள் மாதர்களே முற்படும் இயல்பு காட்ட அவர்களை முன்வைத்தார். தொழுது - முன்னர் வேற்றுச் சமயம் நம்பினநிலையில் இருந்தாராதலின் தொழாதார்(2642) இப்போது அதனில் நம்பிக்கை நீங்கிச் சைவமாகிய முன்சார்பின் நம்பிக்கை கொண்டமையின் ஈண்டுத் தொழுது என்றார்; இடைப்பட்ட சிறுகால் அளவே நின்றமையால் சமண நம்பிக்கை விரைவில் நீங்கவும் சைவநிலை முன்பு நீண்டநாட் பொருந்தியதாதலின் விரைவிற் பற்றவும் ஏதுவாயிற்று; இதனை இவர் மேற்கூறுவனவற்றா லறிக.
வேறு - தத்தமக்கேற்றவாறு வெவ்வேறாக; இனைய - மேல் 2706 வரை ஏழு பாட்டுக்களிற் கூறுமாறு. இவற்றையெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டுதலுமாம்.வந்தணைய - என்பதும் பாடம்.