"ஏதமே விளைந்த திந்த வடிகண்மா ரியல்பா" லென்பார்; "நாதனு மால வாயி னம்பனே காணு" மென்பார்; "போதமா வதுவு முக்கட் புராணனை யறிவ" தென்பார்; "வேதமும் நீறு மாகி விடும்விடு மெங்கு" மென்பார்; | 804 | (இ-ள்) ஏதமே....இயல்பாலென்பார் - இந்த அமண குருமாரின் இயல்பினாலே தீமையே விளைந்தது என்று சொல்வார்கள்; நாதனும்.... காணும் என்பார் - முழுமுதற் கடவுளாவார் திருவாலவாயில் எழுந்தருளியுள்ள நம்பனே என்று கண்டுகொள்ளுங்கள் என்று சொல்வார்கள்; போதமாவதுவும்...அறிவது என்பார் - முக்கண்ணுடைய பழமையாகிய சிவபெருமானையறிவதுவே ஞானமாவது என்று சொல்வார்கள்; வேதமும்...எங்குமென்பார் - வேதமும் திருநீறுமே எங்கும் நிறைவுடையனவாகிப் பரவியிடும் என்று சொல்வார்கள்; (வி-ரை) இயல்பால் - அவர் தத்தம் இயல்புக்கேற்றவாறு செய்த தொழில்களால்; நாதன் - தெய்வத் தன்மையின் நிறைவுள்ள தலைவர். நம்பன் - நம்பி அடையத்தக்கவன் என்பது சொற்பொருள்; இது காரண இடுகுறியாய்ச் சிவபெருமானையே உணர்த்தும்; நம்பி - (நம்பப்படுபவன்) என்றதுமிக்கருத்து.நம்பி என்ற திருப்பதிகம் (நம்பிகள்) பார்க்க. ஏனைச் சிறுதெய்வங்களை நம்பி அடைபவர்களும், அவற்றாற் சிறுசிறு பயன்கள் பெறுபவர்களும் உண்டு. ஆனால் "மற்றத் தெய்வங்கள் வேதனைப் படுமி றக்கும் பிறக்குமேல் வினையும் செய்யும்; ஆதலா லவையி லாதா னறிந்தருள் செய்வ னன்றே"(சித்தி); ஈண்டு அதுகாறுங் கைகொடுத்து அமணரைக் காத்துப் பயன் உதவிய அருகக்கடவுள் அவர்களை இப்போது நட்டாற்றில் விட்டுப் போவது கண்டு மாதர் மைந்தர்கள் இவ்வாறு கூறினர். "ஏர்கொண்முக் குடையுந் தாமும் எழுந்துகை நாற்றிப் போக, வூருளோ ரோடிக் காணக் கண்டனம்"(2535) என்று சமணர்களும் நகர மாந்தர்களும் முன்னர்க் கண்ட கனாத்திறமும் கருதுக. புராணனை அறிவது - போதமாவது என்க. போதம் - முடிந்த ஞானம்; அனுபவ ஞானம். புராணன் - பழமைக்கெல்லாம் பழமையானவன். அறிவதுவே என்று பிரிநிலை ஏகாரம் விரிக்க. நம்பனே நாதன் - அவனை அவ்வாறறிந்து ஒழுகுதலே போதம் என்றதாம். இஃது அனல் வாதத்தின் முடிவினால் மக்கள் அறிந்துகொண்ட முடிபு. எங்கும் வேதமும் நீறுமாகி விடும் விடும் - விடும் விடும் என்றது துணிவுப் பொருளில் வந்த அடுக்கு; ஆகிவிடும் - விடும் பகுதிப்பொருள் விகுதி; வேதமாகி விடுதல் - வேதநெறி தழைத்தோங்குதலையும், நீறுமாகி விடுதல் - மிகுசைவத் துறை விளங்குதலையும் குறித்தன; எங்கும் - முன் அவை குன்றிச் சமணம் மிக்க இடங்களில் எல்லாம்; அதுபற்றி முன் 2499 - 2500-ல் அமணர் நிறைந்த நிலையிற் கூறப்பட்டதும், பின் 2769-ல் வேதமும் நீறுமாகித் தூய்மையாக்கப்பட்ட நிலையிற் கூறப்படுவதும் காண்க. இவ்வாறு பின்வரும் நிகழ்ச்சியினைத் தம் நுண்ணறிவினால் மதுரை நகர் மாதர் மைந்தர் முன்னறிந்து கூறும் திறம் கருதுக. இரண்டாவது விடும் என்றதற்கு அமணர் செய்த மயக்கம் நீங்கிவிடும் என்றலுமாம்.விரவிடுமெங்கும் - என்பதும் பாடம். |
|
|