பாடல் எண் :2704
"நெருப்பினிற் றோற்றார் தாங்க ணீரில்வெல் வர்களோ?" வென்பார்;
"இருப்புநெஞ் சுடையா ரேனும் பிள்ளையார்க் கெதிரோ?" வென்பார்;
"பருப்பொரு ளுணர்ந்தார் தாங்கள் படுவன பாரீ" ரென்பார்;
"மருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரி யார்தா" மென்பார்;
806
(இ-ள்) நெருப்பினில்...வெல்வர்களோ என்பார் - தீயினை ஒட்டிச் செய்த வாதத்தில் தோற்ற இவர்கள் நீரிற் செய்யும் இவ்வாதத்திவ் வெற்றி பெறுவார்களோ? என்று சொல்வார்கள்; இருப்பு....எதிரோ என்பார் - இந்த அமணர்கள் இருப்பு போன்ற கடிய நெஞ்சுடையவர்களாயினும் பிள்ளையார்க்கு எதிராய் நிற்க வல்லரோ? என்று சொல்வார்கள்; பருப்பொருள்....பாரீர் என்பார் - நுண்பொருளல்லாத பருப்பொருளினை பட்டும் உணர்ந்த அவ்வளவில் அடங்கிய அமணர் படஇருக்கும் முடிபினைப் பாருங்கள் என்று சொல்வார்கள்; மருப்புடை...மந்திரியார்தாம் - கொம்புகளைப் போலக் கூரிய நீண்ட கழுமரங்களை மந்திரியாராகிய குலச்சிறையார் செய்வித்துள்ளார் என்று சொல்வார்கள்;
(வி-ரை) முன் பாட்டுக்களிற் கூறிய கருத்துக்களன்றி, அமணர்களின் பாலனவாக எழுந்தனவாய் வேறு பலருடைய கூற்றாய் அமைந்தது இப்பாட்டு.
நெருப்பினில் தோற்றார் நீரில் வெல்வர்களோ - நெருப்பும் ஒரு பூதம்; அதுபோன்று நீரும் ஒரு பூதம்; ஆதலின் ஒன்றிற் றோற்றார் மற்றென்றில் வெல்வரோ என்பது. தோற்றமுறையில் நீரைத் தன்பாற் றோற்றுவிக்கவும், ஒடுக்குமுறையில் அதனைத் தன்னின் ஒடுக்கவும் வல்லது தீ; ஆதலின் அதனில் தோல்வி நீரினில் தோல்வியை உள்ளிட்டதாம் என்க. இனி, வலிய நெருப்பினில் இவர்களை வென்று தோல்விபெறச் செய்த பிள்ளையார் அதனின் கீழதாய்க் குறைந்த வலிமையுடைய நீரினில் வெல்லாது விடுவரோ? வென்றேவிடுவர்; ஆதலின் இவர்கள் வெல்வரோ என்று பிள்ளையாரைப் பற்றி உரைப்பதும் கருத்து; ஆனால் இப்பாட்டுக் கருத்துக்கள் முழுமையும் அமண அடிகளைப் பற்றியே எழுதலின் இவ்வாறு அவர் செயல்பற்றிக் கூறினார்.
இருப்பு நெஞ்சம் - இரும்புபோற் கடிய நெஞ்சம்; அன்பு கலவாத முழு வன்கண்மையுடைய மனம்; இருப்புநெஞ் சுடையார் - அமண அடிகண்மார்; வஞ்சனை சித்திரித்துக் கொலையும் சூழத் துணிபவர்; உடையரேனும் - உம்மை சிறப்பு. எதிரோ - எதிர்த்து நிற்கும் ஆற்றலுடையராவரோ; எதிர்க்க வல்லவரோ? எதிர் அல்லர் என வினா எதிர்மறை குறித்தது.
பருப்பொருள் உணர்ந்தார் - பசு தர்மங்களாகிய அறங்களை விதிக்கும் நூல்களை மட்டும் கற்று, அவற்றின் நுண்பொருளாகிய உள்ளுறையை அறியாதார்; பாவ புண்ணியங்களை உணராதார். இலிங்க புராணத் திருக்குறுந்தொகையும், "கங்கை யாடிலென்" என்பன முதலாக வரும் தனித் திருக்குறுந்தொகையும், பிறவும் பார்க்க; "பூசுநீறு சாந்த மெனப் புனைந்த பிரானுக்கான பணி, யாசிலாநல் லறமாவ தறிய வருமோ உமக்"கென்று தண்டியடிகள் புராணத்துள்(6) இந்நுட்பம் விளக்கப்பட்டதும், பிறவும் காண்க. இவ்வாறன்றி நுண்பொருளாவது இயற்கையினூடு இரண்டறக் கலந்துள்ள இறையின் உண்மை என்றுரைப்பாரும் உண்டு; இயற்கை என்ற சொல்வழக்குப் பொருளற்ற தொன்றென்பது முன்னரே கூறப்பட்டது. "அறியுமச்சமய நூலினளவினி லடங்கிச் சைவ, நெறியினிற் சித்தஞ் செல்லா நிலைமை" (2501); "அந்நூற் றன்மை யுன்னிய மாந்தர், இதுவே பொருளென் றதனிலை யறைதலின், வேற்றோர் பனுவலேற்றோர்க் கிசையா, மாறு பாடு கூறுவரதனாற், புறச்சம யங்கள் சிறப்பில வாகி, அருளின் மாந்தரை வெருளுற மயக்கி, யலகைத் தேரின் நிலையிற் றீரும்" (சங்கற்ப நிராகரணம் - பாயிரம்)
படுவன - அழிந்துபடும் நிலைகள். மருப்புடைக் கழுக்கோல் - மருப்பு - கொம்புகள்; குத்திக் கொல்லும்படி கூரிய மான்கொம்பு முதலாயின. மருப்புடை - மருப்பின் தன்மையை உடைய. அது போலக் கூரிய; மான்கொம்பினை நுனியிற் பதித்த என்பாருமுண்டு.
கழுக்கோல் செய்தார் - தோற்றால் கழுவேற்றுவான் இம்மன்னனே என்று ஒட்டினாராதலானும், தோற்பது நிச்சயமாதலானும், அதன்பின் ஒட்டியவாறே மன்னவன் ஆணையிடின் எண்ணாயிரவரையும் கழுவேற்ற அத்துணைக் கழுக்கள் வேண்டப்படுமாதலானும், முன் எச்சரிக்கையாக மந்திரியார் கழுக்களைச் செய்தனர் என்க; இவ்வாறன்றி இவ்வமணரைக் கழுவேற்றி யகற்றுதலில் முனைந்தனர் அமைச்சர் என்ற பொருள்படக் கூறுவனவெல்லாம் பிழை என்க.