பாடல் எண் :2706
"தோற்றவர் கழுவி லேறத் துணிவதே யருக?"ரென்பார்;
"ஆற்றிய வருளின் மேன்மைப் பிள்ளையார்க் கழகி!"தென்பார்;
"நீற்றினார் றென்னன் றீங்கு நீங்கிய வண்ணங் கண்டார்
போற்றுவா ரெல்லாஞ் சைவ நெறியினைப் போற்று" மென்பார்;
808
(இ-ள்) தோற்றவர்...அருகர் என்பார் - தோல்வியுற்றவர்கள் கழுவில் ஏற என்று அமணர்கள் துணியலாமா? என்று சொல்வார்கள்; ஆற்றிய... அழகிது என்பார் - செய்து காட்டிய அருளின் மேன்மையியனையுடைய பிள்ளையாருக்கு இஃது அழகேயாகும் என்று சொல்வார்கள்; நீற்றினால்... போற்றுவார் - திருநீற்றினாலே பாண்டியர் தீங்கினின்றும் நீங்கிய தன்மையைக் கண்டவர்கள் யாவரும் சைவத் திறத்தினைப் போற்றுவார்கள் (ஆதலால்); எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் என்பார் - எல்லாம் சைவ நெறியினையே போற்றுங்கள் என்று சொல்வார்கள்; (வி-ரை) அருகர் "தோற்றவர் கழுவில் ஏற"த் துணிவதே என்க. ஏகாரம் வினா. துணிந்திருக்கக் கூடாது என்று எதிர்மறை குறித்தது. "தனிவாதில் அழிந்தோமாகில் கழுவேற்றுவான் வேந்தனே" (2696) என்று தோற்றவர் செய்வதனை ஒட்டியதனைக் குறித்து மாந்தர் இரங்கிக் கூறியது. தோற்றவர் - இவ்வா தொன்றினும் தோல்வியுறுபவர். முன்னமே தோல்வி யுற்றவரா யிருந்து அதனால் அறிவுறாமல் இவ்வாறு துணிவதோ? என்றலுமாம்.இப்பாட்டு இவ்வாதத்தின் முடிவாக அருகர் தோற்றுக் கழுவிலேற ஒட்டியதனையும், அதனையும் பிள்ளையார் ஏற்றுப் போந்தருளிய தனையும், அதன் முடிவில் மாந்தர் செய்தக்கதனையும் எண்ணிய மற்றும் பல மாந்தர்களின் கூற்றாக அமைந்தது. பலபல மாந்தர் பலபலவாறகாவும் எண்ணியவற்றுள் இது முடிந்தநிலை பற்றியதாதலின், தொடர்வின் முடிவில் கூறப்பட்ட அமைதி காண்க.
அருளின் ஆற்றிய மேன்மைப் பிள்ளையார்க்கு இஃது அழகு - என்க; அருளின் ஆற்றிய மேன்மை - இதுவரையும் செய்தருளிய செயல்கள் யாவும், இகல் - செற்றம் - முதலிய தீக்குணமொன்றும் பற்றாது, அருளினை மேற்கொண்டே செய்த மேம்பாடு; அமணர்கள் தமது திருமடத்தில் தீயினை நாடியிட்டபோதும் அவர்களை முனியாது அத்தீ, முறைவழுவிய அரசனிடம்பையவே சென்று ஆக என்று ஆசிபுரிந்து அவனை வினை அனுபவிக்கச் செய்து தீர்த்து ஆட்கொள்ளும் அருளும், வாதிற் புகுமுன் அதனை அஞ்சித் திருவருட் குறிப்பினை ஒருமுறைக் கிருமுறையும் வினவியறிந்தபின்பே அரசவையுட் புகுந்த அருளும், ஆண்டும் அரசன் அமணர்க்கிடங்கொடாது மறுத்தகாலை சவையுட் புகுந்த அருளும், ஆண்டும் அரசன் அமணர்க் கிடங்கொடாது மறுத்தகாலை அவனைத் தடுத்து அவர்களுக்கு வாதத்திற்கு இடந் தந்தருளிய அருளும், பிறவும் ஈண்டுக் கருதியே மாந்தர்கள் இவ்வாறு புகழ்ந்து அருளின் ஆற்றிய மேன்மை என்றனர்.
பிள்ளையார்க்கு இஃது அழகு - என்றது அவ்வாறாயின், இங்குச் சமணர் தோற்பது நிச்சயமாதலறிந்தும் அவர்கள் கழுவேறநின்ற இவ்வாதத்தில் முற்படுவது அந்த அருளுடன் பொருன்துமோ? என்று வினயினார்க்கு அற்றன்று; இஃது அதற்கு மாறன்று; அழகேயாம் என்று விடுத்தவாறு; அமணர்களை இவ்வாதத்தின் இடையில் இடங்கொடாது மறுத்தல் அழகன்று; அது சைவவுன்மையினை முற்றும் காட்டாதாதலின் அரசனையும் இவ்வாதத்தில் இசைவித்தருளினர் பிள்ளையார்; கழுவேற ஒட்டி இசைந்தது அமணர் தாமே செய்துகொண்ட செயல்: பின்னர் அவ்வாறே அவர்களைக் கழுவேற்றி முறைசெய்வது அரசனது ஆணைச்செயல். இவ்விரண்டிலும் பிள்ளையார்க்குஎவ்விதத் தொடர்புமில்லை என்பனவாதி நியாயங்களை உட்கொண்டு இவ்வாறு அறிவுடை மாந்தர் இஃது இழுக்காவதன்றி அழகேயாம் என்று முடித்தனர். அழகு - அழகேயன்றிப் பிறிதில்லை என்று பிரிநிலை ஏகாரம் தொக்கது.
நீற்றினால் - போற்றுவார் - திருநீற்றின் உண்மைத் திறத்தினாலே அரசன் அமணர்களால் வந்த தீங்குகள் எல்லாவற்றினின்றும் நீங்கின உண்மையினைக் கண்டவர்கள் அவ்வண்ணங்களைப் பற்றி எடுத்துப் போற்றுவார்கள்; எல்லாம் என்பதனை முன் உரைத்தவாறன்றி ஈண்டுக் கூட்டிஎல்லாத் தீங்கும் என்றும், எல்லா வண்ணமும் என்றும் உரைப்பினு மமையும்; கண்டார் - பிள்ளையாரது அருளின் மேன்மையும், இஃது அவர்க்கு இழுக்காதலன்றி அழகாமாறும் கண்டு போற்றுவர் என்பதும் குறிப்பு.
எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் - ஆதலால் எல்லா வகையாலும் முழு உண்மையும் உடைய சைவ நெறியினைப் போற்றுங்கள்; சைவநெறி - சைவநெறியின் வாய்மை; ஆதலால் என்பது சொல்லெச்சம்; எல்லாமுடைய சைவநெறி என்பது அந்நெறியிலடையப்படும் கடவுளாகிய சிவனது முழுமுதற்றன்மை. "இறைவனாவான்ஞான மெல்லா மெல்லா முதன்மையனுக் கிரகமெல்லா மியல்புடையா னியம்பு, மறைகளா கமங்களி னாலறிவெல் லாந்தோற்றும் மரபின்வழி வருவோர்க்கும் வாராதோர்க்கும், முறைமையி னாலின்பத் துன்பங்கொ டுத்தலாலே முதன்மையெலா மறிந்து முயங் கிரண்டு போகத், திறமதனால் வினையறுக்குஞ் செய்தியாலே சேருமனக் கிரகமெலாங் காணுதுநாஞ் சிவற்கே ". (சித்தி - 8-17) என்ற கருத்துக் காண்க.
கண்டாற் போற்றுவார் - என்பது இராமநாதச் செட்டியார் கண்ட பாடம்.