பாடல் எண் :2708
"தென்றமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தோன் வந்தான்;
மன்றுளா ரளித்த ஞான வட்டில்வண் கையன் வந்தான்;
வென்றுல குய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான்';
என்றுபன் மணிச்சின் னங்க ளெண்டிசை நெருங்கி யேங்க,
810
(இ-ள்) தென்தமிழ்...வந்தான் - அழகிய தமிழ் விளங்கும்படி வந்த திருக்கழுமலத்தோராகிய பிள்ளையார் எழுந்தருளினார்; மன்றுளார்... கையன் வந்தான். அம்பலவாணர் அளித்தருளிய சிவஞானப்பால் நிறைந்த பொற்கிண்ணத்தையுடைய வண்மை பொருந்திய திருக்கரத்தையுடைய பிள்ளையார் எழுந்தருளினார்; வென்று ... வெல்வான் வந்தான் - முன்னம் சுரவாதத்திலும் அனல்வாதத்திலும் வெல்பவராகிய பிள்ளையார் எழுந்தருளினர்; என்று... ஏங்க - என்று இவ்வாறு பல அழகிய முத்துச் சின்னங்கள் எட்டுத் திசைகளிலும் நெருங்கி ஒலிக்கவும்,
(வி-ரை) தென்தமிழ் விளங்க வந்த - தென் - அழகு; அழகாவது என்றும் அழியாத இளமையோடிருத்தலும், மாறாத அழகினைச் செய்யும் ஞானமயமாகிச் சிவனடிச் சார்பு தருதலும் ஆம். "தென்றமிழ் பயனா யுள்ள திருத்தொண்டத் தொகைமுன் பாட"(358); பிள்ளையார் இந்தச் சிவஞானத் தமிழ் பரவும்படியே அவதரித்தவராதல் "அசைவில்செழுந் தமிழ் வழக்கே யயல்வழக்கின் றுறைவெல்ல"(1922) என முதற்கண்ணே அருளப்பட்டது காண்க;"பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத், துறவியெனுந் தோற்றோணி கண்டீர்.....சம்பந்தன், தன்மாலை ஞானத் தமிழ்"(ஆளு.பிள் - மும்மணிக்கோவை - 11.)
அளித்த ஞான வட்டில் - அளித்த சிவஞானப் பாலைக்கொண்ட பொற்கிண்ணத்தை ஏந்திய: ஞானப் பாலினையுடைய வட்டிலை ஞானவட்டில் என்றார்.
தமிழ் விளங்க - என்றும், ஞானவட்டில் வண்கை - என்றும் கூறியது தமிழின் மூலம் ஞானத்தைப் பரப்பி அஞ்ஞான இருளாகிய சமணத்தை வென்றார்; மேலும் வெல்வார் என்றபடி.
வென்று - மீள வெல்வான் வந்தான் என்று அடுத்து எடுத்துக் கூறியபடி.
வென்று...வெல்வான் வந்தான் - முன்னே வென்றுவிட்டதனோடு மீளவும் வெல்வார் என்று சின்னங்கள் பின்வரும் வெற்றியை விளம்பின; வெல்வான் - வெல்லும்பொருட்டு என்றலுமாம்.
உலகுய்ய என்பதனை உலகுய்ய வென்று என்றும், உலகுய்ய வெல்வான் என்றும் ஈரிடத்தும் கூட்டுக. உலகுய்ய - வந்தான் என்று கூட்டி உரைத்தலுமாம்.
பன்மணிச் சின்னங்கள் - அரத்துறைநாத ரருளிய முத்துச் சின்னம் - தாரை - காளம்.இவையும் அரசாங்க அடையளம். சிவனருளிய சிவிகையும் குடையும் சின்னமும் என்ற மூன்றும் உரியபடி இங்குத் தொழிற்பட்டதனை முறையே கூறியது காண்க.
ஏங்குதல் - மிக்க ஓசைபட எடுத்தியம்புதல்; மரபு வழக்கு.ஏங்க - உடன்செல - புடைவர - வந்தார் - என வரும் பாட்டுடன் முடிக்க.