பன்மணி முரசஞ் சூழ்ந்த பல்லிய மியம்பப் பின்னே தென்னவன் தேவி யாரு முடன்செலத், திரண்டு செல்லும் புன்னெறி யமணர் வேறோர் புடைவரப் புகலி வேந்தர் மன்னிய வைகை யாற்றின் கரைமிசை மருவ வந்தார். | 811 | (இ-ள்) பன்மணி... இயம்ப - பல அழகிய முரசங்களுடன் இணைந்த பலவகை வாத்தியங்கள்முழங்க; பின்னே...உடன் செல - தமது பின்பு அரசனும் மாதேவி யாரும் சேர்ந்து வரவும்; திரண்டு...புடைவர - கூட்டமாகச் செல்லும் புன்மை நெறியில் நின்ற அமணர்கள் வேறு ஒரு பக்கத்தில் வரவும்; (இவ்வாறு) புகலி வேந்தர்...மருவ வந்தார் - சீகாழி வேந்தராகிய பிள்ளையார் நிலைபெற்ற வைகையாற்றின் கரையின்மேல் பொருந்தும்படி எழுந்தருளி வந்தார்.இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. (வி-ரை) பன்மணி ழரசம் சூழ்ந்த பல்லிய மியம்ப - இவை அரசன் வரும் வீதி எழுச்சியைக் குறிக்க முழங்கி வரும் அரசனது வாத்தியங்கள்; முன்கூறிய சின்னங்களினின்றும் வேறு பிரித்து அரசனையும் மாதேவியாரையும் சார முன்வைத்தோதியதும் இவை இயம்பப் பின்னே தென்னனும் தேவியாரும் வர என்றதும் இக்கருத்து.பின்னே - பிள்ளையார் பின்பு; பணிகின்ற நிலையிற் பின்பற்றி என்ற குறிப்புமாம். வீதியில் ஒரு பக்கத்தில் பிள்ளையாரும் பரிசனங்களும் அரசனும் மாதேவி யாருமாகவும், மற்றொரு பக்கத்தில் வேறு கூட்டமாய் அமணருமாகவும் போந்தனர்.தென்னனும் தேவியாரும் உடன் செல - இருவரும் ஒருங்கு வர; அரண்மனையில் அரசனது நோய் நீங்கிய அளவும் மாதேவியாரும் மந்திரியாரும் அரசனது நேர் உடன்பாடின்றித் தாமே முற்பட்டு நின்று காரியஞ் செய்யவேண்டியதாயிற்று. அதன் மேல் நிகழ்ந்த அனல்வாதமும், இனி நடக்கவுள்ள புனல்வாதமும் அரசன் அவையினர் முன் டைபெற்று அரசனது நேர் அராசகாரியமாயின. இவற்றுள் மாதேவியார் உடனிருத்தல் வேண்டப்படுவ தின்றாயினும்,முன்னர் அரண்மனையில் அவையின் முன் அனல்வாதத்தில் உடனிருந்தமையும், ஈண்டு வைகைக் கரைக்கு உடன் வந்தமையும், அரச காரியங்கள் அரசனும் அரசியாரும் உடனிருந்து இயற்றும் முன்னைநாள் அரசாங்க வழக்கின் மரபு குறித்தது. இது முன்னைநாளின் கல்வெட்டுக்கள் பலவற்றாலும் அறியத் தக்கது. அவ்வாறு அரச காரியங்களில் உடனிருப்பவும் அரச காரியங்களி்ல் இருவரும் உடன் இல்லாது வேறாய் நின்றமையால், இங்கு அதனிலும் இருவரும் உடனிருந்து செல்லுதலை விதங்து கூறினார், உடன் - உடனாக; இணைந்து; ஒருசேர. திரண்டு செல்லும் புன்னெறி யமணர் - அமணருள் அரசனவையில் நின்ற சிலரேயன்றிர் புறத்து நின்ற ஏனையோரும் திரண்டு எண்ணாயிரவர்களாகக் கூடியவர்கள் என்க. வெறோர் புடை வர - வீதியல் பிள்ளையாருடன் பின்வரும் சைவத் திருக்கூட்டத்துடன்சேரகில்லாது வேறு ஒரு பக்கமாக அமணர் வர; அவ்வாறு சார்ந்துய்யும் விதியில்லாமையால் வேறோர் புடை வந்தனர். மன்னிய - புகழாலும் சிவச்சார்பு பெற்ற புண்ணியத்தாலும் நிலைபெற்ற; மீனாட்சியம்மையார் திருமணத்தில் குண்டோதரனுக்காக இறைவரது ஆணைப்படிக் கங்கையே வைகையாறாக வந்தது என்பது திருவிளையாடற் புராணத்தா லறியலாம,இதன் கரையில் இறைவர் மண்சுமந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. "அணியார் வைகைத் திருக்கோட்டி னின்றதோர் திறமுந் தோன்றும்"(தாண் - பூவணம்) என்று இதனைத் தமிழ்மறையும் போற்றியது. கரைமிசை மருவ - கரையின் மேலே பொருந்தும்படி; மிசை மருவ - என்பது (ஓலை) மேற்சென்று போருந்த என்ற குறிப்பும்படி நின்றது. |
|
|