கார்கெழு பருவம் வாய்ப்பக் காமுறு மகளி ருள்ளஞ் சீர்கெழு கணவன் றன்பால் விரைவுறச் செல்லு மாபோல் நீர்கெழு பௌவ நோக்கி நிரைதிரை யிரைத்துச் செல்லும் பார்கெழு புகழின் மிக்க பண்புடை வைகை யாறு. | 812 | (இ-ள்) கார்கெழு... செல்லுமாபோல் - கார்காலம் வந்தபோது விருப்பம் மிக்க மகளிரது மனம் சிறப்புடைய தமது கணவனிடம் விரைந்து செல்லுமாபோல; பார்கெழு...ஆறு - உலகில் புகழினான் மிக்க பண்புடைய வைகையாறு; நீர்கெழு...செல்லும் - நீர் மிக்க கடலை நோக்கி வரிசையாகிய அலைகளினால் ஆரவாரித்துச் செல்லும் (வி-ரை) இப்பாட்டு ஐயம்.* உவமை இந்த இடத்துக்கு ஏற்றதாகத் தோன்றாமையும், மகளிர் என்ற பன்மையும் கணவன் என்ற ஒருமையும் ஆக மயங்குதலும் உன்னுக; வைகை கடலுடன் சேராமையும் கருதுக. "கடல் ஒருவர்க்கு முதவாதவுவரியேன, மடுத்தறியாப் புனல்வைகை" (வாதவூ.உப.பட.) என்ற திருவிளையாடற் புராணக் கருத்துக் காண்க. இப்பாட்டின் கருத்து " ஆற்றினீர் கடுகவோடும்"(2711) என்று மேற்பாட்டில் கூறப்படுவதும் கருதுக. கார்கெழு பருவம் - கார்காலம் - இதுவரை ஆற்றியிருந்த சிறப்புப்பற்றி மகளிர் என்று பன்மையிற் கூறினார் என்றும், பன்மையாகவே கொள்ளினும் "ஏவல் இளையவர் தாய்வயிறு கரிப்ப" என்பதிற்போலத் தனித்தனித்கணவன்பால் என்றலுமாம் என்றும், ஆறுகள் எல்லாம் கடல்நோக்கிச் செல்லும் பொதுவியல்புபற்றிக் கூறினார் என்றும் இங்கு அடைகி காண்பாருமுண்டு. கற்பொடு பொருந்திக் கணவன்சொற் பிழையாது இல்லிருந்து நல்லறஞ் செய்தல் மகளிரது இயற்கை, முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது. எனவே முல்லை என்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று " (தொல் - போருள் - அக-5- ) நச்சினார்க்கினியர் உரை; " காரு மாலையும் முல்லை" என்பது சூத்திரம் .(மேற்படி - 6) உள்ளங் கணவன்பால் விரைவுறச் செல்லுதல் - "பின்வரும் கூடலாகிய குறிஞ்சித் திணையொழுக்கம் நிகழும்பொருட்டு; புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின்" என்பர் நச்சினார்க்கினியர்; "விரைவுற" என்பதும் பாடம். "மகளிர் உள்ளம் செல்வதற்கும் வைகை விரைந்து செல்வதற்கும் கார்ப்பருவம் ஒப்பக் காரணமாகும் குறிப்பும் காண்க. நீர்கெழு பௌவம் நோக்கி - செல்லும் - "பள்ளந்தா ழுறுபுனலில் கீழ்மேலாக" (திருவா) என்றபடி கீழ்நோக்கிச் செல்லும் நீர் மிக்க விரைவுடன் செல்லுதல் குறிப்பு. நோக்கிச் செல்லும்-என்றதனால் நோக்கமாகச் செல்லும் அளவேயன்றி அது கைகூடுவதில்லை என்ற குறிப்பும்போலும்.நிரை - திரை - இரைத்து - நிரை - வரிசையாக; திரை - அலைகளினால்; இரைத்தல் - ஓசைமிகுதல்; நிரை திரை இரைத்தல் - காமுறு மகளிர் உள்ளம் விரைவும் அலைவும் பதைப்பும் பொருந்தும் பண்புக்கு உவமை. செல்லுமாபோல் - செல்லும் - வினைபற்றிய உவமம். |
|
|