படுபொரு ளின்றி நெல்லிற் பதடிபோ லுள்ளி லார்மெய் யடுபவர் பொருளை "யத்தி நாத்தி"யென் றெழுதி யாற்றிற் கடுகிய புனலைக் கண்டு மவாவினாற் கையி லேடு விடுதலும் விரைந்து கொண்டு வேலைமேற் படர்ந்த தன்றே. | 814 | (இ-ள்) படுபொருள் இன்றி - உள்ளே உண்மை தோன்றும் போருள் இல்லாததால்; நெல்லிற் பதடிபோல் - நெற்பதர்போல; உள்ளிலார் - மெய்மையாகிய உள்ளீடில்லாத அமணர்; மெய் அடுபவர் - மெய்பொருளைப் பொய்ப்பொருள் என்று கூறுவோராய; பொருளை அத்தி நாத்தி என்று ஏட்டில் எழுதி; -ஆருகதநூலுட் கூறும் பொருளின் தொகுதியை அத்தி நாத்தி என்று ஏட்டில் எழுதி - யாற்றில்....கண்டும் - ஆற்றில் விரைந்து ஓடும் நீரினைக் கண்டும்; கையில் ஏடு அவாவினால் விடுதலும் - கையிற் கொண்ட ஏட்டினைப் பேராசையினாலே விடுதலும்; விரைந்து...அன்றே - அப்பொழுதே அதனைக்கொண்டு வேலையின் முகநோக்கி விரைந்து சென்றது. (வி-ரை) படுபொருள் - உள்ளிருந்து தோன்றுதற் காதாரமாகிய உயிர்ப் பொருள். இன்றி - இல்லாமையால்; பதடி - பதர். உள் இலார் - உள் - உட்பொருள்; உண்மை. மெய் அடுபவர் - உண்மையை மறுப்பவராகி ; வினைமுற்றெச்சம். மெய் அடுபவர் அத்திநாத்தி என்றெழுதி - அத்தி - உள்ளது - உண்டு; நாத்தி - இல்லாதது - இல்லை; எனவே உள்ளது என்றதனைத் தாமே உடன்மறுத்துக கூறுபவர் என்பதாம். அத்தி நாத்தி - அமணர்களது மூலமந்திரம். ஆற்றிற் கடுகிய புனல் - வேலைமேற் படர்ந்தது - இந்த இரண்டு கருத்துக்களையும் முன்பாட்டில் கூறியது காண்க. கடுகிய - கடுகிச் சென்ற; விரைந்த. கண்டும் பார்த்தும். உம்மை சிறப்பு. புனலையும்பார்த்தனர்; அது கடுகிச் சென்றதையும் பார்த்தனர்: அவ்வாறு கண்டும் அமைந்துவிடாது விடுத்தனர்.முன்னர் எரியும் தீயைக் கண்டு இது நம் ஏட்டினை எரித்துவிடும் என்றறியாது இட்டுத் தோல்வியுற்றனர். அதுபோலவே இங்குப் புனலும் கடுகியது கண்டும், இது ஏட்டினை உடன்கொண்டு இழுத்துச் சென்றேவிடும் என்றறியாது என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மையாக்கி உரைப்பினு மமையும்; இப்பொருளில் தீ எரிந்ததுபோலப் புனல் கடுகியது கண்டும் என்க. அவாவினால் - அவா - தகாத ஆசை: பேராசை என்ப. ஆசை வெட்கமறியாது என்பது பழமொழி. ஒரு தோல்வி கண்டபோது அதுகொண் டமைந்துவிடாது மேலும் மேலும் தோல்வியைத் தேடிக்கொள்வதனால் நாணமில்லாது முயலுதல் அவாவினால் வருவது. இக்கருத்தே பற்றிப் பின்னர் "நாணிலா வமணர் தம்மை நட்டாற்றில் விட்டுப் போக"(2714) என்பது காண்க. கையில் ஏடு - கையிற் கொண்ட ஏடு: ஏட்டைப் புனலில் விடுதலும் என்று விரித்துக் கொள்க. வேலைமேற் படர்ந்து அன்றே - வேலை மேல் - வேலையை நோக்கி. வேலை -கடல் : மேல் - முகமாக. வேலை - காரியம் என்று கொண்டு புனல் தன்னுட்பட்ட பொருள்களை ஈர்த்துச் செல்லும் இயல்புடையதாதலின் தன் வேலையைச் செய்தது என்ற நகைக்குறிப்புப் படக் கூறியதும் காண்க. இழுத்துச் சென்ற புனலைப் பற்றிய இக்கருத்தினையே தொடர்ந்து பின்னர் "நட்டாற்றில் விட்டுப் போக" என்று ஈர்த்துச் செல்லப்பட்ட ஏட்டினைப்பற்றிக் கூறுவது காண்க. மெய்அடுபவர் - உடல் வருத்தும் செயல்களைத் (சுடுபாறை கிடத்தல் -மயிர் பறித்தல்) தவமென்று செய்பவர் என்ற குறிப்புமாம். இனி, ஈண்டு, உள்இலார் - (முன் உற்ற தோல்வியால்) உள்ளம் அழிந்தவர் என்றும், மெய்அடுபவர் - உண்மையை கொல்பவர் என்றும், கையில் ஏடு -கை - ஒழுக்கம் எனக் கொண்டு ஒழுக்க நிலையற்ற பொருள் கொண்ட ஏடு என்றும் குறிப்புக்கள் காண்பர் திரு.வ.சு.செ. அவர்கள். படர்ந்தது - படர்தல் - செல்லுதல்; அப்புனல் என்ற எழுவாய் அவாய்நிலையான் வந்தது. அன்றே - அதுபொழுதே.
|
|
|