ஆறுகொண் டோடு மேட்டைத் தொடர்ந்தெதி ரணைப்பார் போலத் தேறுமெய் யுணர்வி லாதார் கரைமிசை யோடிச் சென்றார் பாறுமப் பொருண்மேற் கொண்ட பட்டிகை யெட்டா தங்கு நூறுவிற் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார். | 815 | (இ - ள்) ஆறு... போல - அவ்வாறு-அவ்-ஆறு-ஈர்த்துக்கொண்டு ஓடும் ஏட்டினைத் தொடர்ந்துபோய் எதிரே ஓடாமல் அணைப்பவர்போல; தேறும்...சென்றார் - தெளியும் உண்மையறிவு இல்லாத அமணர் ஆற்றின் கரையின்மேல் ஓடிச் சென்றனர்; பாறும்...பட்டிகை - அந்த அழியும் பொருளை மேற்கொண்ட அவ்வேடு; எட்டாது - கிட்டாது: அங்கு...போனது - அங்கு கீழ்நோக்கி நூறு விற்கிடை அளவு தூரத்தின் எல்லைக்குமேல் போய்விட்டது; நோக்கிக் காணார் - அவ்வெல்லையில் கண்ணால் பார்க்கவும் மாட்டாராயினர். (வி-ரை) ஏடு எதிர் அணைப்பார்போல - கரைமிசை ஓடிவந்தார் - ஆற்றுடன் ஓடிய ஏட்டினை எதிர்சென்று அணைத்துக்கொண்டு வருபவர் போலக் கரையின்மேல் வந்தார்கள். திகைப்பினால் தாம் செய்வ தின்னதென் றறியாது இவ்வாறு செய்தனர்; தேறுமெய் உணர்விலாதார் - என்ற கருத்துமது. தேறித் தெளியத்தக்க உண்மையில் உணர்வு. தமது முன்னைய அறிவின்றியும் இதுவரை நிகழ்ந்த பலவற்றாலாயினும் உண்மை அறிந்துகொள்ள மாட்டாதார்களாகிய அமணர். பாறுதல் - அழிதல்; அப்பொருள் - அத்திநாத்தி என்ற மந்திரம். உண்மையின் முனநிற்கலாற்றமையின் அழியும் என்றார். மேற்கொண்ட - மேலே பொறிக்கப்பெற்ற - எழுதப்பட்ட.பட்டிகை - ஓலை. "பட்டோலை தீட்டும் படிபோற்றி" (போற்றிப் பஃறொடை 38); பட்டிகை - தோணி என்று கொண்டு இங்கு ஏட்டைக் குறித்தது என்பாருமுண்டு. நூறு விற்கிடை - விற்கிடை - ஒரு அளவை; வில் கிடக்கும் தூரம். நூறு விற் கிடை - சிறு பொருள்கள் கண்மறையும் தூரம். நூறு விற்கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார் - போனது - போயிற்றாதலின் அதனைக் கூர்ந்து நோக்கியும் காணாதாரயினர்; நோக்கி - நோக்கியும் : சிறப்பும்மை விரிக்க; போனது - போயினமையால் அதனை ; நோக்கி - கூர்ந்து பார்த்தும். விற்கிடக்கை-நோக்கிச் சென்றார் - என்பனவும் பாடங்கள்.
|
|
|