பாடல் எண் :2716
மாசுசே ரமண ரெல்லா மதியினின் மயங்கிக் கூற
ஆசிலா நெறியிற் சேர்ந்த வரசனு மவரை விட்டுத்
தேசுடைப் பிள்ளை யார்தந் திருக்குறிப் பதனை நோக்கப்
பாசுரம் பாட லுற்றார் பரசம யங்கள் பாற.
818
(இ-ள்) மாசு...கூற - அழுக்கு மிகுந்த அமணர்கள் எல்லாரும் (முன் கூறியபடி) மதிமயங்கிககூற; ஆசிலா...விட்டு - குற்றத்தை நீக்கும் நெறியில் சேர்ந்த அரசனும் அவ்வமணர்களை விட்டு; தேசுடை...நோக்க - (சிவஞான) ஒளியுடைய ஆளுடைய பிள்ளையாருடைய திருவுள்ளக் குறிப்பு யாதோ என்று தெரியும்படி அவரை நோக்க; பாசுரம்...பாற - பரசமயங்களால் நேர்ந்த மயக்கம் அழியும்படி திருப்பாசுரத்தினைப் பாடியருளலுற்றனர்.
(வி-ரை) மாசு சேர் - மாசு - அகத்தும் புறத்தும் மிகச்சேர்ந்த அழுக்கு. உண் மாசு - உண்மைஞான மின்மையானும், பொய் - வஞ்சனை முதலிய தீக்குணங்களுண்மையானும் மிகுவதாயிற்று; புறமாசு - உடல் கழுவாமை வெயிலினிற்றல் முதலியனவாய் செய்தக்கவல்லாத புறசயல்கள் செய்தலானும் செய்தக்க புறச்செயல்களில்லாமையானும் மிகுவதாயிற்று ; "துன்னுமுழு உடற்களாற் சூழுமுணர் வினிற்றுகளால், அன்னெறியிற் செறிந்தடைந்த வமண்மாசு கழுவுதற்கு"(2549) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. சேர் - மிகும். அவர் வழக்குக்களால் நாளும் மிகுவதாயிற்று என்பது.
மதியினில் மயங்கிக் கூற - மதிமயக்கம் காரணமாக அவ்வாறு கூற, மதிமயக்கம் - முன் இரண்டு பாட்டுக்களாலும் விரிக்கப்பட்டது; பிள்ளையார் இடும் ஏடு நீரினிலும் வெற்றிபெறும் என்பதனை மறுகினிற் கண்ட சாதாரண மாந்தரும் முன்னிகழ்ச்சிகளின் முடிவினால் உணர்ந்து கூறினர். 2704, 2705 பார்க்க. அவ்வாறிருப்பவும் கலைஞானமுடைமையோடு முன் அனுபவத்தால் கண்கூடாகக் காண்பதும் பெற்ற அமணர் "இட்டால் வந்தது தாணும்" என்று ஐயப்பாடு பெற அம்முடிவு இனிக்கண்டறியும் பொருளாகக் கூறியது அவர்கள் மதிமயங்கிய காரணத்தாலாயது என்று அரசன் உணர்ந்தான் என்பதாம்.
ஆசிலா நெறியிற் சேர்ந்த அரசனும் அவரை விட்டு-ஆசு இலா நெறி - குற்றத்தை இல்லையாகச்செய்யும் நெறி; சிவநெறி. மாசுசேர் என்று அமணரைக் கூறியதற்கேற்ப அவரினின்றும் நீங்கி அரசன் சேர்ந்த இச் சிவநெறி அக்குற்றமேயன்றிப் பிறவியாகிய தீமையினையும் இல்லையாகச் செய்வதாம் என்று இவ்வாறுரைக்கப்பட்டது; அது ஆசுசேர் நெறியாதலின் இஃது அவ்வாறு குற்றமிலாத - குற்றமற்ற நெறி என்றுரைப்பினுமமையும். சேர்ந்த - என்றதனால் அந்நெயினை விட்டு இந்நெறியிற் சேர்ந்த கொள்கைபற்றிய புடைபெயர்ச்சி குறிக்கப்பட்டது.
அவரை விட்டு - "அறிவிலாப் பிணங்களைநா மிணங்கிற் பிறப்பினொடு மிறப்பினொடும் பிணங்கிடுவர்; விடுநீ" (சித்தி-12-2); இதனோடு அமணரின் சார்பும் தொடர்பும் அறவே நீக்கப்படுதலின் முடிவாக இங்கு அவரை விட்டு என்றார்.
தேசு உடைப் பிள்ளையார் - தேசு - சிவஞானப் பேரொளி; "பேருணர்விற் பொலிகின்ற பிள்ளையார்" (2669); தேசு - திருநீற்றினொளியுமாம்.
மாசுசேர் அமணர் - ஆசிலா நெறி - தேசுடைப் பிள்ளையார் - புறச்சமயத் தீமையும், அதனைப் போக்கும் சாதனமாகிய நெறியும், அதனை விளைத்துத்தரும் ஆசாரியரும், அவர்க்கு உள்ளே துணைநின்று அருளும் சிவனருளும் கூறப்பட்ட நயம் காண்க. இவ்வாறு இங்குக் கூறியது இனி அரசன் ஞானேபதேசம் பெறும் பக்குவமுடயனாதல் குறிக்க என்க. மேல்வரும் இரண்டு பாட்டுக்களாலும் இக்கருத்தினை ஆசிரியர் விளக்குதல் காண்க.
திருக்குறிப்பு - திருவுள்ளக் குறிப்பு. நோக்குதல் - அதனை இன்னதென்றறியும் கருத்து விளங்க அவரைப் பார்த்தல்.
திருக்குறிப்பினை நோக்குதல் - "பிள்ளையாரும் அருகர்நீரும் விதித்தஏடு இடுக " (2711) என்று முன்னரே ஆணை தந்த அரசன் ஈண்டுப் பிள்ளையாரது திருக்குறிப்பினை நோக்கியதென்னையோ? எனின், முன்னர் "ஏடு இடுக" என்று ஆணை தந்தது இரு திறமும் ஒட்டி இசைந்த வாதத்தினை அவர் இசைந்தவாறே நிகழ்த்துவிக்கும் அரசன் என்ற முறையில் அரசன் என்ற நிலையில் நின்று செய்த செயல்; ஈண்டு அவ்வாதத்தினுள் அமணர் முந்திக்கொண்டு தமது தோல்வியை நிச்சயப்படுத்திவிட்டார் ஆதலான் அதன்மேல் பிள்ளையார் செயல் வேண்டப்படாமலே வாதத்தின் முடிவு கூறலாகும் என்ற நிலையினை அரசன் உளங்கொண்டனன்; ஆனால் "மாறுகொண் டவரு மிட்டால் வந்தது காணும்" (2724) என்று அமணர் கேட்டதனால் தனக்கு வேண்டாவிடினும் நடுநிலை நின்று அச்செயலிற் பிள்ளையாரது திருவுள்ளக் குறிப்பினைத் தெரிய வேண்டினன் அரசன். அற்றாயின் ஏடு நீரும் இடுக என்று கூறி விடாமல் நோக்கியறிய முற்பட்டது யாது கருத்து எனின்? தீய அமணர் சார்பு விட்டுப் பரிபக்குவமடைந்தமாணவகன் என்ற நிலையினை அடைந்தமையால் ஆசாரியரது திருக்குறிப்பினை எதிர்நோக்கி விண்ணப்பித்தபடி என்க. இது "முன்னைவல் வினையுநீங்கி முதல்வனை யறியும் தன்மை துன்னினான் வினைக ளொத்துத் துலையென நிற்ற லாலே"(2717) என அரசனது நிலையினை யிருவினை ஒப்பும் மலபரிபாகமும் வந்த தன்மைபற்றி ஆசிரியர் அறிவிப்பது காண்க; அது பற்றியே அவனுக்குப் பிள்ளையார் ஞானோபதேசம் செய்தமையும் உணரப்படும்.
பாசுரம் - திருப்பதிகம்; "வாழ்க அந்தணர்" என்ற பதிகத்திற்குச் சிறப்புப் பெயர்.
பரசமயங்கள் பாற - பாறுதல் - அழிதல்; இங்கு அழிதல் என்றது பரசமயங்களின் தீமைகளும் மயக்கமும் ஒழிந்து மறுக்கப்படுதலேயன்றிச் சமயங்கள் அழிதல் என்பதன்று. இது முன்னரும் விளக்கப்பட்டது; மேலும் உரைக்கப்படும். 2718 முதல் 2741 வரை வரும் பாட்டுக்கள் காண்க.
பரசமயங்கள் என்று பொதுவாகக் கூறியதனால் புறப்புறம், புறம், அகப்புறம் என்ற முக்கூற்று அறுவகைச் சமயங்களின் நிலைகளும் குறிக்கப்பட்டன. "ஆறுவகைச் சமயத்தி னருந்தவரும் புக்கதற்பின்" எனப் பின்னர்க் கூறுதலின் அகச் சமயத்தார் தழீஇக்கொள்ளதற்குரியார் என்க. சமணத்தை முன்னரே சுரவாதம் - கனல்வாதம் - புனல்வாதம் என்ற மூன்றானும் வெற்றிகொண்டு சைவமேன்மை நாட்டினார்; ஆயின் அற்றைநாட் சமணத்தின் பொய்மை அற்புதச் செயல்கள்பற்றி நெருப்பினும் நீரினும் கொண்ட வெற்றியின்மூலம் காட்டப்பட்டதன்றி, அதன் கொள்கைகளின் கீழ்மைகள் மறுக்கப்படாது நின்றனவாதலின் அவற்றையும் ஏனைச் சமயங்களின் கொள்கைகளையும் மறுத்துச் சுத்தாத் துவித சைவ சித்தாந்தத்தின் உண்மைத் தன்மையினை நிலைநாட்ட வேண்டியதாயிற்று; இதுவே ஆளுடைய பிள்ளையாரது திருஅவதாரத்தின் தத்துவமாம். "பரசமய நிராகரித்து நீறாக்கும் புனைமணிப்பூண் காதலன்" (1917); அற்புதச் செயல் நிகழ்ச்சியால் காட்டப்படும் வெற்றி வேறு; உயர்வு தாழ்வுகளை எடுத்துக் காட்டி நிலைகாட்டுதல் வேறு. இதனை பின்னர் "எஞ்சலின்மந் திரவாத மன்றி யெம்மோ டெதிர்ந்துபொரும் பேசுவதற் கிசைவ தென்று" போதிமங்கையில், அன்பரது அத்திரவாக்கால் தமது தலைவன் இடிவீழ்ந்து இறந்தது கண்டபின்னரும், புத்தர் கூறிச் சாத்திர வாதத்தினை மேற்கொண்டு வந்தமையா லறிந்துகொள்க.
பாசுரம் பாடலுற்றார் பரசமயங்கள் பாற
- எனவே முன்அருளிய பதிகங்களாலும் அருட்செயல்களாலும் பரசமயங்களின் கொள்கைகளின் தாழ்வான தன்மைகளைச் சாத்திர வாதம்பற்றி எடுத்துக் காட்டப்படாமல் எஞ்சிநின்றன என்பதும், அதனையே முன்வைத்து இத்திருப்பதிகம் அருளிச் செய்யப்பட்டதென்பதும் போதருதல் காண்க. திருக்குறிப்பு என்றதும்; இது பரபக்க நிராகரிப்பு எனப்படும். சிவாகமங்களுள்ளும், சிவஞானசித்தியார் பரபக்கத்துள்ளும், சங்கற்நிராகரணத்துள்ளும் இதன் விரிவெல்லாங் கண்டுகொள்க. இத்திருப்பதிகத்தால் இவ்வாறு பரபக்க மறுப்பு மட்டுமேயன்றிச் சைவவுண்மைத் திறத்தினை நாட்டுதலாகிய சைவத் தாபனமும் (நீறாக்குதல்) உடன் செய்தருளினர் பிள்ளையார் என்பதும் (2718) கண்டுகொள்க.
பரசமயங்கள் - "இச்சமயங்களெல்லாம் புறப்புறச் சமயமும், புறச்சமயமும், அகப்புறச் சமயமும் ஆம். அவற்றுள் புறப்புறச் சமயம்: உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதமென அறுவகைப்படும்; புறச்சமயம்: தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும்; அகப்புறச் சமயம்: பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும்; (அகச்சமயம் - பாடாணவாத சைவம், பேதவாத சைவம், முதற் சிவாத்துவ சைவ மீறாக அறுவகைப்படும். அவை பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர வவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.) இவையெல்லாம் அகம் புறம் என்று இரண்டாய் அடங்குமாறும் ஒர்ந்துணர்க.
"ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதரீறாகிய அறுவரும் வேதஞ் சிவாகம மிரண்டனையும் நிந்திக்கும் நாத்திகராயினும், ஒரு நூலென்றும் பிரமாணமென்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான் அவர் சமயம் புறப்புறச் சமயமென வேறுவைத் தெண்ணப்பட்டன;
"தார்க்கிகர் முதற் பாஞ்சராத்திரிகளீறாகிய அறுவரும், வேதம் பிரமாணப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர் தன்னாற் பிராமாணீயங் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும்; மீமாஞ்சகர் கருமகாண்டமாகிய வேதமாத்திரைக்கே பிரமாணங்கொண்டு ஞானகாண்டமாகிய உபநிடதங்களை இகழ்தலானும்; ஏகான்ம வாதிகள் ஞானகாண்ட மாத்திரைக்கே பிரமாணங்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும்; ஏனை மூவரும் வேத வாக்கியங்களிற் றத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணங் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணமெனக் கோடலானும்; இவ்வறுவருஞ் சிவாகம நிந்தகராகலானும் இவர் சமயம் புறச்சமயமென வேறுவைத் தெண்ணப்பட்டன;
"பாசுபதர் முதலிய ஐவரும், வேதஞ் சிவாகம மிரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணங் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபத முதலிய நூல்கட்குச் சிறப்பு வகையாற் பிரமாணங் கோடலானும்; வேதஞ் சிவாகம மிரண்டினும் ஆகாவென விலக்கப்பட்டனவற்றை ஆசரித்தலானும்; ஐக்கியவாத சைவர் வேதஞ் சிவாகம மிரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணங்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவராயினும் எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதனுண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும் அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச்சமயமென வேறுவைத் தெண்ணப்பட்டன;.
"ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மை யெல்லாஞ் சித்தாந்த சைவரோ டொப்பக்கொள்ளும் அந்தரங்க உரிமையுடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறுந் தன்னியல்பு பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர் அவர் சமயம் அகச்சமயமென வேறுவைத் தெண்ணப்பட்டன;
"இவ்வாறு நால்வகைச் சமயங்கட்குஞ் சித்தாந்த சைவத்தோடுளதாகிய வேற்றுமைத் தாரதம்மியங் கண்டுகொள்க.
"அகச்சமயமாறனுட்சிவாத்துவிதசைவ மாவதுநிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனப்படும்; அங்ஙனங் கொண்ட சிவாத்துவித சைவர் கருத்துணராதார் சிவாத்துவித சைவமாவது யாதோ எனவும், "நிகழ்சிவாத் துவிதாந் தத்துக குலவின ரளவளாவா" என்றமையின், இறுதிக்கண் எடுத்தோதப்படும் சுத்தசைவம்போலு மெனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொகுளுணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றித் கருத்து வகையாற் சித்தாந்த சைவத்தின் வேறன்மையிற் சுத்தசைவஞ் சித்தாந்த சைவத்துளடங்மென்றுணர்க. அற்றாகலினன்றே "நிலவுல காய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக, குலவினாளவ ளாவாக் கொள்கைய தாகி" என, ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காதொழிந்ததுவுமென்க.
"இனி, இவ்வாறன்றிப் பாடாண வாதத்திற்கும் பேதவாதத்திற்குந் தம்முள் வேறுபாடு சிறிதாகலின் அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி அகச்சமயமாறெனக் கோடலுமொன்று. இங்ஙனமாகலான் "மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்" என்றதூஉம் பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையுமெனக் காண்க. பாசுபதர் முதலியோர் கலைக்குமேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் "வித்தையாதி யெய்து தத்துவங்க ளேய்வர்" எனக் கோடல் பொருந்தாமையறிக. ஐக்கியவாத சைவர் கலைக்.குமேலுள்ள தத்துவங் களுண்டெனக் கொண்டராயினும், மூலமலம் உண்டென்ப தறியாமையின் முலுமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்த தத்துவ புவனங்களிலெய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேற் சுத்த வித்தைக்குக்கீழ் விஞ்ஞானாகலர்க்குரிய தானமேயாமாகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே "வித்தையாகி...தத்துவங்க ளேய்வர்" என்றறிக. "புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்" என்புழியும் அகச்சமயமென்றது "ஏக னனேக னிருள்கரும மாயை யிரண்டு" என்னும் ஆறுபொருளுங் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாமெனவும், புறச்சமயமென்றது அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்துகொள்க" - எனவரும் சிவஞானபோத அவையடக்கத்தின் மாபாடியத்துள் மாதவச் சிவஞானமுனிவ ருரையும் ஈண்டுச் சிந்திக்க.
பரசமயங்கள் பாற - பாறுதல் - நூல்வழியால் மறுக்கப்படுதல்; ஈண்டுச் சமண சமயம் அளவையால் மறுக்கப்படுதல்பற்றி ஒருசிறிது காண்போம். சமணசமய உண்மைகள் எனக் கொள்வன; அருகளைச் சீவனாய்க் கூறுதலும் நித்தியமான இயற்கைஞானமுடையனென்றலும்; (ii) சீவன் சங்கோசவிகாச தன்மியா யிருப்பன் என்றலும்; (iii) பொருளின் தன்மையைப் பலபடக் கூறி அஸ்தி நாஸ்தி - உண்டு இல்லை என்றலும்; (iv) உலகம் ஒருவராற் படைக்கப்பட்டதன் றென்றலும் முதலாயின. (i) அருகக்கடவு ளியல்பு: பாவம் வராது அறத்தினின்றான் என்று அமணர்கள் கூறுதலின், பந்த முதலிய குற்றங்களினின்றும் விடப்பட்டு ஏனை முத்தர்போலச் சேர்க்கைஞானமுடயனேயன்றி இயற்கையாலே அனந்தஞான முதலியவை யுடையனன்று என்பது போதரும்; (ii) சீவன சங்கோசவிகாச தன்மி - அதாவது எடுத்த உடலினளவு பரிணமிக்கும் தன்மயுடையனாதல்; யானையின் உடலிற் பெருத்தும் எறும்பினுடலிற் குறைந்தும் நிற்றல்வேண்டும்; ஒருடலில் ஒரவயவம் குறையில் அவ்வளவில் அச்சீவன் குறைதல் வேண்டும்; பரகாயம் புகும் யோகியின் உயிர் எண்வகைச் சித்திகளுள் பிராகாமிய சித்தியனால் வேற்றுடம்பிற் புகும்போது தான் புகும அவ்வச் சரீரங்களின் அளவிற்கு விரிந்தும் சுருங்கியும் பரிணமித்தல் வேண்டும்; விளக்கு ஓரிடத்திலிருந்த படியே வீடு முழுதும் பரவினாற்போல இவ்வாறு விரியும் எனின் அது விகாரமாதலின் உயிர் சடமாய் அநித்தியமுமாம் ; ஆதலால் அவர் கொள்கை தவறு; (iii) அஸ்தி நாஸ்தி - ஒரு பொருள் உண்டுமாம் இல்லையுமாம்; ஒளியும் இருளும்போல ஒன்றற்கொன்று மாறுபாடாகிய உண்மையும் இன்மையுமாகிய தன்மைகள் ஒருகாலத்தில் ஒரு பொருளில் இருத்தல் இயலாது; இவ்வாறு கூறுதல் காட்சி விரோதம்; சூரியனுள்ள காலத்தில் அஃது இல்லை என்ற பொருள் தோன்றாமையும், பாம்புள்ள காலத்தில் பாம்பில்லை என்று பயமின்மையும் வேண்டும்; அதனால் இல்லை என்றலும், உண்டில்லை என்றலும் பொருந்தாது; ......இன்னும் அவர் கூறும் அனேகாந்தவாதத்தினுள்ளும் ஏழுபொருள் உளவென வகுத்துககூறுதலும் காண்க; (iv) உலகம் நித்தியமாதலின் ஒருவனாற் படைக்கப்பட்டதன்று; இயல்பாயுள்ளதாதலின் எனில்: யாது அவயவப் பகுப்புடையதாய்ப், பலவாய், அசேதனமாய்க் காணப்படும் அது அழியும்; அது ஒருவராற் படைக்கப்பட்ட காரியப் பொருளாம். உலகமும் அவ்வாறு அவன் அவள் அது என்ற அவயவப் பகுப்புடையது; தோன்றிநின்றழியும் தன்மையுடையது; அசேதனமாய்ப் பலவாயுள்ளது; ஆதலின் ஒரு முதல்வனாற் காரியப்படுத்தப்பட்டது. --என்றிவ்வாறு கண்டுகொள்க. (குறிப்பு: இவை பெரும்பாலும் ஸ்ரீமத் ஆறுமுகத் தம்பிரானார் உரையிற் கண்டவாறு தழுவி எழுதப்பட்டது).