பாடல் எண் :2717
தென்னவன் மாறன் றானுஞ் சிரபுரத் தலைவர் தீண்டிப்
பொன்னவில் கொன்றை யார்தந் திருநீறு பூசப் பெற்று
முன்னைவல் வினையி னீங்கி முதல்வனை யறியுந் தன்மை
துன்னினான் வினைக ளொத்துத் துலையென நிற்ற லாலே.
819
(இ-ள்) தென்னவன் மாறன்தானும் - அரசனாகிய பாண்டியன்தானும்: சிரபுரத் தலைவர்...பெற்று - சீகாழத் தலைவராகிய பிள்ளையாரால் தீண்டிப் பொன்போன்ற கொன்றையினைச் சூடிய சிவபெருமானது திருநீற்றைப் பூசப்பெற்றதனால்; வினைகள்...நிற்றலாலே - இருவினைகளும் ஒத்துப் பொருளைச் சமன்செய்து காட்டுந் துலாக் கோல்போல நிற்கப்பெற்றதனாலே; முன்னை...துன்னினான் - முன்னைக் கொடிய வினையின்றும் நீங்கியயவனாய் முதல்வனை அறியும் தன்மை பொருந்தினான்.
(வி-ரை) தீண்டிப் பூசப் பெற்று - திருக்கையாற் றீண்டிப் பூசும் பேறு பெற்றதனால்; "திருக்கையாற் றடவ" (2663); இது பரிசதீக்கை என்ற குறிப்புப் பெறத் தீண்டி என்றெடுத்துக் கூறினார். பெற்றுத் - துன்னினான் - என்று முடிக்க. பெற்று - பெற்றதனால்; வினையெச்சம் காரணப்பொருளில் வந்தது.தானும் - உம்மை உயர்வு சிறப்பு.திருநீறு பூசப்பெற்று - "நீறு - ஈந்தார்" (2755) எனப் பின்னர்க் கூறுவதனுடன் இதனை ஒப்புநோக்குக. அஃது தீக்கை முடிவில் பாதபங்கயமும் சூட்டியருளும் நிலை. முன்னர்த் திருக்கையாற் றிருநீறு பூசியது தீக்கைக்கு உரியனாக்கும் நிலை.
முன்னை வல்வினையும் நீங்கி - முன்னை - வினை - "முன்செய்த தீவினைப் பயத்தினாலே" (2498) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.இது முன்னுடம்பால் ஈட்டப்பட்டுப் புத்திதத்துவம் பற்றுக்கோடாக நின்று அனுபவத்துக்கு முகந்து கொண்ட பிராரத்த வினை. வல்வினை என்றது எதிர்விலக்கலாகாத வலிமையுடைமை பற்றி: விலக்கலாகா மையாவது சைவச் சார்பிற் பிறந்தும், அம்மையார் அமைச்சனார் முதலிய அன்பானிறைந்த சைவச்சார்பு படைத்தும், "பாண்டி நாடே பழம்பதி யாகவும்" (திருவா) என்று போற்றப்படும் சைவப் பாண்டிநாட்டின் அரசாட்டிசியின் உரிமை பெற்றும் மதிமயங்கிச் சமண்சார்பு பற்றி ஒழுகியதன்றி சைவத்திற்குக் கேடு சூழவும் துணைநிற்கச் செய்த வலிமை.
வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே - முதல்வனை அறியுந் தன்மை துன்னினான் - என்று கூட்டுக. துலை என - துலை - தராசின் இரு தட்டினும் இடும் ஒத்த அரு பொருள்களுக்கு வந்தது; ஆகுபெயர். ஏனைப் பொருள் ஒன்றுமிடாத துலைத் தட்டுகள் எனினுமொக்கும்; வினைகள் - நல்வினை தீவினையாகிய இரண்டும். வினைகள் ஒத்தல் - இருவினையொப்பு எனப்படும். அஃதாவது நல்வினைப் பயனாகிய இன்பம் வருங்கால் அவ்வின்பத்து ளழுந்திவிடாமலும், தீவினைப் பயனாகிய துன்பம் வருங்கால் அத்துன்பத்துளழுந்திவிடாமலும் இரண்டனையும் ஒன்றுபோலவே இறைவனதாணையால் வந்தன என்று எண்ணி நுகரும் உயிரறிவன் பக்குவநிலை; "அடுக்கி வரினுமழிவீலான்" "இடுக்கண் வருங்கா னகுக" "இன்பத்து ளின்பம் விழையாதான்" என்று பொய்யாமொழியார் உலகநிலையின் வைத்துக கூறிய தன்மைகள் வேறு; இங்குக் கூறிய பக்குவநிலை வேறு. முன்னவை உலகில் துன்பங்கள் வந்துழி அவற்றாற் சோர்வுற்று மனமழிந்துவிடாதபடி மக்கள் மேற்கொள்ளும் முயற்சியாகிய சாதனங்கள்; இங்குக் குறித்தது வினைவயத்தானும் திருவருளாலும் உயிர் அடையும் பரி பக்குவ நிலை. "உணக்கிலாததோர் வித்து மேல்விளை யாமலென் வினையொத்தபின், கணக்கி லாத்திருக கோல நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே" (திருவா) என்ற கருத்து.
முன்னை வல்வினையும் நீங்கி - என்றும், வினைகளொத்துத் துலை என நிற்றல் - என்றும், முதல்வனை யறியும் தன்மை - என்றும் கூறியவை மூன்று நிலைகள். இவை முறையே சத்திநிபாதம் என்றும், இருவினையொப்பு என்றும், மலபரிபாகத்தின் விளைவு என்றும் ஞானசாத்திரங்களுட் கூறப்படும். முன்னை வல்வினை என்றது சமண்புக்கிருந்தபோது செய்துகொண்ட தீவினை என்றலும் பொருந்தும். வல்வினை என்றது சரித நிகழ்ச்சிக் குறிப்பு. சத்திநிபாதம் என்பதுபற்றி மாதவச் சிவஞான முனிவர் மாபாடியத்துட் கூறுமாறு காண்க (8-1): "பக்குவமாதற் பொருட்டு மலத்திற்கு அனுகூலமாய் நின்று நடாத்திய திரோதானசத்தி, மலம் பரிபாகமெய்திய வழி, அக்கருணை மறமாகிய செய்கை மாறிக் கருணையெனப்படும் முன்னைப் பராசத்தி ரூபமேயாய் ஆன்மாக்கள்மாட்டுப் பதிதலாகிய சத்திநிபாதமும், சோபானமுறையான் மந்ததரம்,
மந்தம், தீவிரம், தீவிரதரம் என நால்வகைப்பட்டு நிகழுமெனக் கொள்; எனவே சத்திநிபாதத்துக்குக் காரணம் மலபரிபாகம் என்பதூஉம், அதுவும் அவ்வாறு பலவேறு வகைப்பட்டு நினழுமென்பதூஉம் பெறப்பட்டன.
"சத்திநிபாதம் என்னும் சொல்லியல்பு சத்தியினது வீழ்ச்சி என்றவாறு. நி என்பது ஏற்றமாக என்னும் பொருள் குறித்து நின்றதோ ரிடைச்சொல்: ஓ ரவைக்களத்தின் நடுவே ஒரு கல் வந்து வீழ்ந்தால் அவ்வீழ்ச்சி அவ்வவைக்களத் துள்ளாரை ஆண்டுநின்றும் அகல்விக்கும்; அதுபோலச் சத்திநிபாதம் நிகழ்ந்தமாத்திரையே அஃது அவ்வான்மாவை மனைவி மக்கள் முதலிய உலகத்துழனியின் அச்சநிகழ்ந்து அவ்வுலக வாழ்க்கையினின்று வெரீஇப் போந்து உண்மைக் குரவனை நாடிச் செல்லுமாறு செய்வித்தலின் அவ்வொப்பு தோன்றச், சத்தி நிகழ்ச்சி என்னாது சத்தி வீழ்ச்சி யென்றோதப்பட்டது.
"மலபரிபாகமாவது மலந் தனது (மறைத்தற்) சத்தி தேய்தற்குரிய துணைக்காரணங்க ளெல்லாவற்றோடும் கூடுதலேயாம்"; ஈண்டுத் துணைக் காரணங்கள் என்றவை சிவபுண்ணியங்களும் அவற்றான் வரும் தூயவுடம்பு முதலிய கருவிகளும் ஆம். இங்குச் சிவபுண்ணியப் பேறாகப் பிள்ளையாரது திருநோக்கம், பரிசம் முதலியவை நிகழ்ந்தமையால் இத் துணைக்காரணங்களாகிய தூயவுடம்பு முதலியவற்றை அரசன் அடையப்பெற்றனன் என்பார்" மாறன் றானுஞ் சிரபுரத் தவைர் தீண்டி....திருநீறு பூசப் பெற்று" என்றதும் காண்க.
இருவினை ஒப்பு - "இசைந்த, விருவினை யொப்பி லிறப்பி றவத்தான், மருவுவனா ஞானத்தை வந்து" (8/1 வெண்பா) என்றவிடத்து" ஒருவனுக்குப் பந்த முறுத்துதற்கட் பொன்விலங்கும் இருப்பு விலங்கும்போலத் தம்முட் சமமாகச் புண்ணிய பாவங் களிரண்டுந், தம்மைப்போலக் கெடுதலில்லாத அத்தவங்களின் பயனாகிய பதமுத்திகளை அனுபவித்து வைகும் ஆண்டே தானே ஞானநெறியைத் தலைப்படுவன். அவை அங்ஙன நேராகாவிடின் மீள நிலத்தின்கண் வந்து பிறந்து வினையொப்பு நிகழ்ந்து குவன் றிருவருள் பெற்று ஞானத்தைத் தலைப்படுவன் என்க. "...ஈண்டுக் கூறப்பட்ட இருவேறு புண்ணியங்களுள், இசைத்துவரு வினைகளெல்லாம் பசுக்களை நோக்கிச் செய்யப்படுதலின் பசுபுண்ணியம் எனவும் பெயர் பெறும்..." இனி, இறப்பிறவத்தால் நிகழும் இருவினையொப்பாவது யாதெனிற் கூறுதும்; சஞ்சிதமாய் ஈட்டப்பட்டுக் கிடந்த இருவினைகளும் பக்கவமுறையானே பயனாய் வரும் வழி, நல்வினையுன் மிக்கதாகிய பரிமேத வேள்விப் புண்ணியமும், தீவினையுண் மிக்கதாகிய பிரமக் கொலைப்பாவமும ஒருங்கே பக்குவமெய்திப் பயன்படுதற்கண் ஒத்தனவாயின், அவை தம்முள் ஒன்றானொன் றடிக்கப்பட்டுச் சுந்தோபசுந்த *சுந்தோபசுந்த நியாயமாய்க் கெட்டொழியுமாகலின் அவை அவ்வாறு தம்முள் ஒத்தலே இருவினையொப்பெண்பர் ஒருசாரார். சஞ்சிதாமாய்க் கிடந்த புண்ணிங்களும் பாவங்களும் மிகுதி குறைவின்றித் தம்முள் ஒத்தல் இருவினையொப்பென்பர் ஒருசாரர். மிக்க வினையிரண்டுந் தம்முளொத்துக் கெட்டனவாயினும் அவையொழித்தொழிந்த புண்ணிய பாவங்கள் தத்தம் பயனைத் தருதற் கிடையீடின்மையானும், இருவினைகண் முழுதுந் தம்முளொக்குமாறில்லை:ஒக்கமெனினும் அதுபற்றி நீங்குமாறின்மையான் விஞ்ஞானாகலராவாரன்றி முத்தியெய்துதல் கூடாமையானும் இவ்வாறு பௌட்கரத்துளெடுத்தோதி அவிவிரண்டனையும் மறுத்தலானும், ஈண்டோதிய இருவினையொப்புக்கு அவை பொருளல்லவென்றொழிக."
"இனி இவ்வாறாக; வேறு பொருள்படுதற் கேலாமையானும், சிவப்பிரகாசத்தில் (பொது - 2 - 30) "எதிர்வினையு முடிவினை யுதவுபயனா னேராக" என ஏனை வினைகள்போல ஆகாமிய வினையும் முடிவினையம் (பிராரத்தம்) ஒத்தல்வேண்டுமென் றோதுதலின் அஃதொத்தல் பிறிதோராற்றாற் பெறப்படாமையானும், மலபரிபாகக் குறி, சத்திநிபாதக்குறி, சிவபுண்ணியக் குறிகளெல்லாம் ஆன்மவறிவின்கண் விளங்கு மாறுபோல இருவினையொப்புக் குறியும் துன்னறிவன்கண் விளங்குமாறில்லையாயின் அது முத்திக்கேதுவதால் கூடாமையானும், ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பு மாதலின்றிப் புண்ணியபாவ மிரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்துவிடுவோன தறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறொப்ப நிகழ்தலே ஈண்டு இருவினையொப்பபென்றதற்குப நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.** "
"இனி, இருவினைகள் (1) பசு நல்வினை-தீவினை என்றுஞ்(2) சிவ நல்வினை-தீவினை என்றும் இருவேறு வகைப்படும். எனவே இருவினையொப்பும் அவ்வாறு "பசு நல்வினை தீவினைகள் தம்மு ளொத்தலாகிய இருவீனையொப்பென்றும், (2) சிவ நல்வினை தீவினைகள் தம்முளொத்தலாகிய இருவினையொப்பென்றும் இருவேறு வகைப்படு மென்பதூஉம் பெற்றாம். சிவநல்வினை தீவினைகள் தம்முளொத்தலாவது சிவ நல்வினையும் தீவினை வோலத் தமது முதலுபகாரத்தை மறந்து பிறவிக்கேதுவாய்ப் பசுபோதம் முனைத்துச செய்யப்படுவதொன்றெனத் தௌளி உவர்த்துவிடுவோனது அறிவின்கண் அவ்வாற்றானொப்ப நிகழ்வது, இவ்விருவகை யிருவினையொப்புள், முன்னையது பக்குவத்தா னிகழும் பசுபுண்ணியத்தினும் நிகழ்வனவாயுளவென மேற்கூறப்பட்ட அபுத்திபூர்வம் புத்திபூர்வமென்னும் பொதுச்சிவபுண்ணியத்தான் உண்டாவதாய், மலபரிபாகத்தைத் தோற்றுவிக்குமுகத்தானே மந்ததரமெனப்படும் முதற்சத்திநிபாதத்திற் நிகழும். பின்னையது, பலதிறப்படுவனவாகிய சத்திநிபாதத்தான் அவ்வாறே நால்வகைப்பட்ட முறையான் நிகழ்ந்து முடிவின்கண் ஞானத்திற் கேதுவாமென்றுணர்க.
"இனி, (1) ஞானத்திற்குக் காரணஞ் சரியை முதலியனவென்பதூஉம், (2) சரியை முதலியவற்றுக்குக் காணம் மந்ததர முதலிய சத்திநிபாதமென்பதூஉம், யாண்டும் விளங்கிக் கிடந்தன. இவையெல்லாவற்றிற்கும் (3) மூலகாரணமெனப்பட்ட பக்குவமாவது தமக்குரிய சோபானமுறையானன்றி யறியமாட்டாததோ ரியல்புடைய ஆன்மாக்களுக்கு அம்முறையான் நிகழும் அறியவல்லுதலேயா மென்பது மேல் ஆண்டாண்டுக் கூறியவாறுபற்றி உணர்ந்துகொள்க. (4) அவ்வல்லுதற்குக் காரணங் கேவலக்கிடையினும் நீங்காது உடனாய் நின்று நோக்கிவரும் முதல்வனது கருணைநோக்கத்தின் அடிப்பாடென அறிக" (மாபாடியம் - 8-1-பக்.431 -434).