பாடல் எண் :2719
அலரும் விரைசூழ் பொழிற்காழியு ளாதி ஞானம்
மலருந் திருவாக்குடை வள்ளலா ருள்ள வண்ணம்
பலரு முணர்ந்துய்யப் பகர்ந்து வரைந்தி யாற்றில்
நிலவுந் திருவேடு திருக்கையா னீட்டி யிட்டார்.
821
(இ-ள்) அலரும்...வள்ளலார் - பூக்கள் மலர்தலால் உளதாகும் மணம் சூழ்ந்த சோலைகளையுடைய சீகாழியீல் அவதரித்த சிவஞானம் மலரும் திருவாக்கினையுடைய வள்ளலாராகிய பிள்ளையார்; உள்ளவண்ணம்....உய்ய - உண்மைப் பொருள் நிலையினைப் பலரும் அறிந்து உய்யும்படி; பகர்ந்து வரைந்து - அருளிச்செய்து எழுதுவித்து; நிலவுந் திருவேடு - என்றும் அழியாத மெய்ப்பொருளினை உடைய அத்திருவேட்டினை; யாற்றில் - வைகையாற்றிலே; திருக்கையால் நீட்டி இட்டார் - தமது திருக்கரத்தினிலே நீட்டி இட்டருளினர். இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
(வி-ரை) இப்பாட்டுச் சில பிரதிகளில் "வெறியார் பொழில்" என்ற (844=2742) பாட்டின்கீழ்க காணப்படுகின்றது; அதுவும் ஓரமைதியுடையதென்று தோன்றுகிறது; சரிதத்தொடர்பும் யாப்புத்தொடர்பும் பிறவும் கருதுக.
ஆதிஞானம் - ஆதியினது ஞானம்; ஆதி - சிவன்; ஆறாம் வேற்றுமைத்தொகை. ஆதியினால் அருளப்பெற்ற ஞானம் என மூன்றனுருபும் பயனும் உடன் தொக்க தொகையாகக் கொள்ளலுமாம்; ஆதியாகிய - எல்லா ஞானங்கட்கும் மேலாகிய - ஞானம் எனப் பண்புத்தொகையாக்கி யுரைப்பினு மமையும்.
ஆதிஞானம் மலரும் திருவாக்கு - மலர்தல் - வெளிப்பட்டு விரிதல். வாக்கு - வாக்கினின்று வரும் அருளிப்பாடு; ஆகுபெயர்.
அலரும் விரைசூழ் பொழிற்காழி - மலர்களினின்றும் அலரும்போது மணம் விரிந்து எங்கும் பரவுதல்போலப் பிள்ளையாரது வாக்கினின்றும் வெளிப்பட்டுச் சிவஞானமணம் உலகெங்கும் விரிந்து கமழும் என்ற குறிப்புப்படக் கூறிய கவிநயம் காண்க ; இதனை இறைச்சிப்பொருள் என்க. "நாயினே னிருந்து புலம்பினா லிரங்கி நலம்புரி பரமர்தங் கோயில், வாயினே ரரும்பு மணிமுருக் கலர வளரிளஞ் சோலைமாந்தளிர்செந், தீயினே ரரும்பும் பெரும்பற்றப் புலியூர்" (கருவூர்-திருவிசைப்பா-3) என்புழிப்போலக் காண்க. பொழில் - உலகம் என்ற பொருட்குறிப்பும் தருவது காண்க. "பொழிலேழுந் தாங்கி நின்ற"; "ஏழ்பொழிலு மேல்மலையு மாயினான் காண்" (தேவா).
வள்ளலார் - பகர்ந்து - வள்ளலாதலின் எனக் காரணக் குறிப்புப்பட வோதினார்.உள்ளவண்ணம் - உள்ளவண்ணத்தை - மெய்ப்பொருள் நிலையினை; இரண்டனுருபு விரிக்க.
பலரும் உணர்ந்துய்ய - " மன்னவ னறியும் பான்மை " யால் (2718) பலரும் உணர்ந்துய்ய என்றது , "மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்" என்றபடி மன்னவன் வழிநிற்கும் உலகுயிர்கள் அவன் அறிந்த பான்மைகண்டு உணர்ந்து உய்ய. மன்னனொருவனை உய்வித்தால் அவன் வழியே பல்லுயிரும் உய்யும்; அவற்றை வேறு தனித் தனி உய்விக்க வேண்டா என்பது குறிப்பு. பலரும் - "பலர்புகழ் மன்னவன்" (2718) என்று குறித்த, அவன்வழி யவர்களாகிய பலரும் என்க. அங்கு வைகைக்கரையினின்ற அமணரல்லா வேனையோரும் அவர் வழியாகிய உலகரும் " பூதபரம்பரை பொலிய" (1899).
உய்யப் பகர்ந்து - பலரும் உய்க என்று திருவுள்ளஞ் சங்கற்பித்து. பாவித்து எடுத்துச்சொல்லி; ஆசாரியனது உபதேசத்தின் முன் அவனது சத்பாவனை இன்றியமையாது வேண்டப்படும். "திகழும் வாக்கால் பாவனையால் மிகுநூலால்" (சிவப் - 8).
வரைந்து - வரையச் செய்து; வரைவித்து. பிறவினைவிகுதி தொக்கது. "வருமறைச்சொற் றிருப்படிதக மெழுதுமன்ப" ராகிய (2806) சம்பந்த சரணாலயரால் எழுதுவித்து என்க.
திருஏடு யாற்றில் - இட்டார் - என்று கூட்டுக. யாற்றில் நிலவும் என்று சொற்கிடக்கை முறைபற்றியே கொண்டு, யாற்றோடு சென்றொழியாது எதிர்சென்று, அன்று முத லின்றளவும் இனிமேலும் என்றும், உயிர்களுக்கு உண்மைகாட்டி நிலவும் என்றலுமாம்.
நீட்டி - நீளச் செல்லுமாறு பணித்த என்பதும் குறிப்பு. நீளுவித்து என்க.இட்டார் - இடுதல் - சேர்த்துதல்.