பாடல் எண் :2722
"ஆழ்க தீய" தென் றோதிற் றயனெறி
வீழ்க வென்றது ; வே "றெல்லா மரன்பெயர்
சூழ்க" வென்றது தொல்லுயிர் யாவையும்
வாழி யஞ்செழுத் தோதி வளர்கவே.
824
(இ-ள்) ஆழ்க.... என்றது - ஆழ்க தீயது என்று ஓதியருளியதன் பொருளாவது வேதாகமங்களுக்குப் புறமாயுள்ள நெறிகள் வலிமையற்றொழிக என்றதாம்; வேறு....என்றது - வேறாக எல்லாம் அரன் நாமமே சூழ்க என்ற அருளியது; தொல்லுயிர்....வளர்கவே - தொன்றுதொட்டு வரும் உயிர்கள் எல்லாம் வாழ்வு தரும் திருவைந்தெழுத்தை ஓதி வளர்க என்னும் பொருட்டாம்.
(வி-ரை) ஆழ்க தீயது என்று ஒதிற்று அயனெறி வீழ்க என்றது - இஃது "ஆழ்க தீயது" என்ற பதிகப் பகுதியின் கருத்தை விளக்கிற்று; தீயது - தீமைபயக்கும் அயல் நெறிகளின் தொகுதியை; இவை வேதங்களை உடன்படாத புறப்புறம், புறம் என்று வகுக்கப்படும்; இவை திருநீறு அக்கமணி யாகிய சாதனங்களை யுடன்படாமையால் தீயது என்றும் ஆழ்க என்றும் ஒதுக்கப்பட்டன. இவை இவ்வாறு பலவாயினும் அவற்றால் வரும் தீமை சிவநிந்தைத சிவசாதன நிந்தை என்ற ஒன்றேயாதலானும்; இவை எல்லாம் ஒன்றுபோலவே முற்றும் மறுத் தொதுக்கப்படுவனவாதாலனும் தீயது என ஒருமையாற்சுட்டிக் கூறினார்; இதனை அறிவுறுத்தவே "ஆழ்க தீயது என்றோதிற்று...வேறெல்லா மரன்பெயர் சூழ்க" என்றது எனப் பிரித்துக்காட்டி உரைவகுத்தருளினர் ஆசிரியர் இக்கருத்துக்களை அறியாது இந்நாளில் இத்திருப்பாட்டை ஓதுபவர்கள் "ஆழ்க தீயதெல்லாம்" என்று பிழையாகப் படிக்கின்றனர்; அது தவறு. தீயது - ஆணவமல விளைவு மறைப்பு.
வேறு - அயனெறி வீழ்க என்ற கருத்துக்கு வேறாக என்க. முன் சொன்னது தீமையைப் போக்குதல்; மேற்சொல்வது அதன்பின் நன்மையை ஆக்குதல். இவையிரண்டும் பாசநீக்கமும் சிவப்பேறுமாக போதம் 10-11 சூத்திரங்களிற் றனித்தனி கூறப்படும் இருவேறு நிலைகள்.
எல்லாம் - எல்லா வுயிர்களும்; சேதனப் பிரபஞ்சம் என்பர்; ஒதி வளர்தற்குரியவை அவையேயாதலின். "உயிர் யாவையும்" என்றது ஆசிரியர் காட்டும் பொருள்.
அரன் பெயர் - சிவனது திருநாமத்தை உட்கொண்ட சீபஞ்சாக்கம் என்னும் திருவைந்தெழுத்து. "ஆலைப் படுகரும்பின் சாறு போல வண்ணிக்கு மைந்தெழுத்தின் நாமத் தான்காண்", "துஞ்சும் போதுநின் னாமத் திருவெழுத் தஞ்சுந்த தோன்ற வருளுமையாறரே" (தேவா).
சூழ்க - சூழ்தல் - அழுந்த எண்ணுதல்; "ஓதி வளர்க" என்றது ஆசிரியர் கண்ட பொருள்.
வாழி - வாழிய என்றது வாழி என நின்றது.உயிர் - வளர்கவே - உயிர் வளர்தலாவது சிவத்தன்மை பெற்றுப் பொலிவடைதல்; கட்டுற்றுச் செத்தும் பிறந்தும் உழவாது கட்டு நீங்கிச் சிவத்தன்மையுள் நிறைவாகி நிலைபெறுதல். வளர்க - சூழ்க என்றதன் கருத்து.வீழ்கவென்று வேறெல்லா மரன் பெயர் - என்பதும் பாடம்.