சொன்ன "வையக முந்துயர் தீர்கவே" என்னு நீர்மை யிகபரத் திற்றுயர் மன்னி வாழுல கத்தவர் மாற்றிட முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர். | 825 | (இ-ள்) சொன்ன....நீர்மை - சொல்லிய வையகமுந் துயர் தீர்கவே என்னும் அருள் ஆசியின் கருத்தாவது; இகபரத்தில்...மாற்றிட - இம்மையிலும் மறுமையிலும் நிலைத்து வாழும் உலகத்தவர்களாகிய உயிர்கள் துன்பநீங்கியிடவாகும்;முன்னர்......மொழிந்தனர் - இக்கருத்துக்கள் பட முதலில் திருஞான சம்பந்தர் மொழிந்தருளினர்.இந்நான்கு பாட்டுக்களானும் ஆசிரியர்பெருமான் "வாழ்க வந்தணர்" என்ற திருப்பாசுர முதற் றிருப்பாட்டுக்கு உரை வகுத்தருளினார்; திருப்பாசுரப் பாட்டின் அடிகளைத் தனித்தனிப் பிரித்து அவை இன்ன கருத்துடையன என்று விளக்கி இவ்வாறு பிள்ளையார் மொழிந்தனர் என முடித்துக்காட்டியது உரைத் திறம். இவ்வாறு பாட்டுத்தோறும் கண்டுகொள்க. பாட்டின் உரை முடிகின்றநிலை குறிப்பதற்கு ஞானசம்பந்தர் மொழிந்தனர் (2723); வாழ்த்தினார் சண்பை ஆண்டகை யாரவர் (2725); பூந்தராய் வேந்தர் அருளினார் (2729); என்றனர் சண்பை காவலர் (2731); சண்பை அரசர் அருளினார் (2735); என்றனர் கொள்கை மேலோர் (2736); என்றனர் பிள்ளையார்தாம் (2737); என்றுரை செய்தனர் யாவும் ஓதாதுணர்ந்தார் (2738); என்றனர் வேதவாயர் (2739); வெங்குறு வேந்தர் வைத்தார் (2740); என்றனர் வேதவாயர் (2739); வெங்குறு வேந்தர் வைத்தார் (2740); என்றனர் ஞானமுண்டார் (2741); சண்பையர் வேந்தர் (2742) எனப் பன்னிரண்டு திருப்பாட்டுக்களுக்கும் பாட்டுக்கொன்றாகப் பன்னிரண்டு முடிபுகள் காட்டிப் பிள்ளையாரது திருப்பெயரைப் பன்னிரண்டு வகையாகக் கூறிப் போற்றிய திறமும் கண்டுகொள்க.புறத்தேயொளிதரும் சூரியர்கள் பன்னிருராதலின் அக்குறிப்புப்பட அகஒளி தரும் ஞானசூர்யராகிய பிள்ளையாரும் சிவஞான விளக்கம் செய்யும் ஈண்டுப் பன்னிரு வகையாற் போற்றப்பட்டனர் என்க.* "மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற, பொங்கிய விருளை யேனைப் புறவிருள் போக்கு கின்ற, செங்கதி ரவன்போ னீக்குந் திருத்தொண்டர் புராணம்(10); திருக்கோயில்களினும் திருமடங்களினும் திருவெம்பாவை திருப்பொற்சுண்ணம் என்ற திருவாசகங்களை ஓதி வழிபடுங்காலத்துப் பாட்டுத்தோறும் மணிவாசகப் பெருமானைப் புகை ஒளி அமுது காட்டிப் பூசிக்கும் சைவமரவு வழக்கு இக்குறிப்பினைத் தருவது. அம்மரவு வழமை ஆசிரியர் இங்கக் காட்டியருளிய திறமும் காண்க. "நகுபா சுரமுத லுரைசெய் தாலினா னவிலுரை யாசிரியன், நீடிய பரசமயக்குழி வீழ்ந்தவர் நீப்பப் போதனைசெய் நிலையாற் போத காசிரி யன்னிவை நிகழ்தொறு நிகழ்தோறும், ஆடிய ஞானத் திறனுற லான்ஞா னாசிரியனு நீ" (சப் - பரு-9); "புவியிற் பத்திசெய் மார்க்க மறிந்தவரார்...விமலாநீ யவதாரஞ் செய்யாவிடி னெனமேய" (தால் - 10) என்று இக்கருத்துக்களைக் காட்டி மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சேக்கிழார் பிள்ளைத் தமிழிற் பாராட்டியமை காண்க. (வி-ரை) "சொன்ன வையக முந்துயர் தீ்கவே என்னும் நீர்மை - "வையகமுந் துயர் தீர்கவே" என்று பதிகத்துட் சொன்ன தன்மையின் கருத்து; சொன்ன - பதிகத்தினுட் சொல்லிய. நீர்மை - கருணைத் தன்மை. துயர் - இகத்திலும் பரத்திலும் பிறவித் துன்பமேயன்றி நிரதிசயஇன்பமில்லாத தன்மை. "சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போது" (தேவா); இகமும் பரமும் இரண்டும் பிறவியிற் படுதலின் துயர் என்றார்; துயர் மன்னி வாழ் உலகத்தவர் மாற்றிட - பிறவித் துன்பமே பொருந்தி வாழும் உரிர்கள், அதனை மாற்றிப் பிறவாத தன்மையுடைய சிவநெறி யடைந்திடும் பொருட்டு. மொழிந்தனர் - துயர் தீர்க என்று ஆசி மொழிந்தனர். இகத்துத் துயர் - பிணி சாக்காடு முதலியவற்றாலும், பரத்துத் துயர் - அலகை முதலியவற்றாலும் காணப்படும். முன்னர் - தொடக்கத்தில்; ஞானோபதேசமாகிய இவ்விருளிப் பாட்டின் மங்கல வாழ்த்தாகிய இம் முதற்பாட்டில். ஞானசம்பந்தர் மொழிந்தனர் - முதற்பாட்டின் உரை முடிந்தமை எழுவாயும் பயனிலையுமாகப் பிள்ளையாரது திருப்பெயருடன் வினைமுற்றுத் தந்து முடித்துக்காட்டினர். இவ்வாறே ஏனைய திருப்பாட்டுக்களினும் கண்டுகொள்க. இப்பதிகம் ஞானாசிரியராந் தன்மையில் வரும் உபதேசம் என்று குறிக்க இப்பெயராற் கூறினார். திருப்பாசுரம்முதற்றிருப்பாட்டின் தொகைப்பொருள் - ஆசிரியர் காட்டியருளியவாறு :- இத் திருப்பாசுரமாகிய மெய்ம்மொழிப் பயன் உலகுயிர் யாவையும் துன்ப நீங்கி இன்பவாழ்வடைதலேயாம்; அது சங்கரர்க்குச் சந்த கேள்விகள் முதல் அர்ச்சனை வழிபாடுகள் மன்னுதலாலன்றி நிகழாது; அவை மன்னுதலின் பொருட்டு, அந்தணர்களும் தேவர்களும் ஆனினங்களும் வாழ்க; அவ்வேள்வி யர்ச்சனை வழிபாடுகளின் பயனாய் விளைந்து அவற்றிற்குரிய நல்லுறுப்பாகிய மழையும் வீழ்ந்து பெருகுக; அவற்றைக் காக்கும் மன்னவன் ஓங்குக; அவற்றால் வரும் நலங்களை அடையவொட்டாது கேடுவிளைக்கும் அயனெறிகளின் தீமை ஆழ்ந்து அவை தத்தமக்குரிய நிலைகளில் அமைந்தொழிக; உயிர்கள் யாவும் சிவனாமமோதி வளர்க; இவ்வாறு உலகுயிர்கள் துயர் நீங்குக என்றதாம். தமக்கெனவன்றி உலகமின்புறும்படி வேள்வி யர்ச்சனை வழிபாடுகள் சங்கரர்க்கு இயற்றுவோர் அந்தணர்களாதலின் அவர்கள் முன்னும், அவ்வாழிபாடுகளைச் சிவனியதிப்படி ஏற்றுச் செலுத்துவோர் வானவராதலின் அவர்கள்அதன் பின்னும், வேள்வி வழிபாட்டுக்குரிய சிறந்த சௌவியங்களையும் திருநீற்றினையும் அளித்தலால் ஆனினம் அதன் பின்னும், வேள்வி வழிபாட்டின் பயனாய் வந்து அவற்றிற்குரிய இன்றியமையாதஉறுப்பாகிய நீரினையும் உலக சாதனங்களையும் தருதலால்(மழை) தண்புனல் அதன் பின்பும், இவ்வெல்லாவற்றையும் காத்தற்கடன் பூணுதலால் வேந்தன் அதன் பின்னும், கேட்டில் வீழாமை முதற்கண் வேண்டப்படுதலின் தீயது ஆழதல் அதன் பின்னும்,தீமை ஒழிந்தபோது இன்பம் பெறும் சாதனமாகிய அரன்பெயர் சூழ்தல் அதன்பின்னும், துயர்தீர்தலாகிய பயயன் அதன்பின்னும் ஓதப்பட்ட வைப்பு முறை கண்டுகொள்க. இப்பாட்டுப் பின்வரும் ஞானோபதேசத்துக்கு முதற்கண் வைக்கப்பட்ட மங்கல வாழ்த்து எனக் காண்க. திருக்கயிலாயபதி நேரே குருவாய் எழுந்தருளி ஞானவமுதூட்ட உண்டு எண்ணரிய சிவஞானமுணர்ந்த கயிலாய பரம்பரையில் வந்த முதல்வராகிய பிள்ளையாரே இங்கு ஞானாசாரியார்; வைகைக்கரையே தீட்சாமண்டபம்; பாண்டியனே பக்குவமுற்ற நன்மாணவகர்; உரைத்தறிவுறுத்திய பொருள் மெய்ஞ்ஞானம்; "ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல், ஊனத் திரளை நீக்கு மதுவும் உண்மைப் பொருள்போலும்" (அண்ணாமலை - பிள் - தேவா); "மன்ற, பாண்டியன் கேட்பக் கிளக்குமெய்ஞ் ஞானத்தின்" (இருபாவிருபஃது - 2); "எல்லா மரனாமமே சூழ்க" என்றதனால் வணக்கமும், வாழ்க அந்தணர் என்றதனால் வாழ்த்தும், அரனாமமே என்றதனால் சாதனமும், துயர் தீர்கவே என்றதனாற் பயனும், கூறிய திறமும்; அரன் என்றதனால் சங்கார காரணனாகிய முதல்வனே முதல்வன் என்ற பதியுண்மையும் இலக்கணமும், எல்லாம் சூழ்க - வையகமும் துயர் தீர்க என்றதனால் பசுக்களின் உண்மையும் இலக்கணமும்; தீயது-துயர் என்றதனால் பாசவுண்மையும் இலக்கணமும் கூறிய திறமும் என்றிவ்வாறு சிவாகம ஞானபாத முடிபுகள் எல்லாம் பொருந்தக் குறிப்பாலுணர்த்தியருளிய வகையினால் பொருளியல்புரைத்தலும் என்று இது மூவகை வாழ்த்தும் ஆதல் கண்டுகொள்க. எல்லாம் - சூழ்க; வையகமும் துயர் தீர்க - சூழ்க - தீர்க - "கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள், இயலு மிடம்பா லெங்கு மென்ப" ஆதலின் மூவிடத்தினும் ஐம்பாலினுஞ் செல்வதாகிய இவ்வியங்கோள் பிள்ளையார் அருளிய அன்று நிகழ்காலத்திலே குறித்த அப்பயன் தந்ததுமன்றிப், பின்னர் எக்காலத்தும் சென்று அவ்வாறே அருட்பயன் தருவனவாம் என்று காட்டும் திறத்தால் ஆசீரியர் பின்னர், " எங்களை வாழ முன்னா ளேடுவை கையினி லிட்டார்" (புரா - 1230) என்று நினைவு கொள்ளக் கூறியருளுதலும் ஈண்டுக் கருதுக; மெய்த் திருவாக்காதலின் என்றும் எங்கும் ஒன்று போலவே பயன்றருமென்க. இறைவர்பால் உணர்வரிய மெய்ஞ்ஞானம் பெற்ற ஞானாசாரியர் அருளிய ஞான உபதேசத்துக்கு அவ்விறைவரது "மெய்ம்மொழி" பெற்ற ஆசிரியர் சேக்கிழார் பெருமானும் அவ்வாறே கயிலாய பரம்பரையில் வந்து உரைவகுத்தருளிய பெருமையும் தெய்வக் குறிப்பும் கண்டுகொள்க. |
|
|