"அரிய காட்சிய" ரென்பதவ் வாதியைத் "தெரிய லாநிலை யாற்" றெரி யாரென, உரிய வன்பினிற் காண்பவர்க் குண்மையாம் பெரிய நல்லடை யாளங்கள் பேசினார்; | 826 | (இ-ள்) அவ்வாதியை "அரிய காட்சியர்" என்பது ஆதி தெரியலா நிலையால் - முன்பாட்டில் அரன் என்று கூறிய அந் ஆதியைப் பாசஞான பசுஞானங்களால் தெரியப்படாத நிலைமையுடைமை காரணமாக அரிய காட்சியர் என்று சொல்வது ஆம்; தெரியார் என - அவ்வாறு பாச பசு ஞானங்களால் தெரியமாட்டாதவர் என்று அறிந்து, காண்பதற்கு உரிய அன்பின்றிறத்தாலே காணும் பக்குவமுடைய அடியவர்களுக்கு; உண்மையாம்....பேசினார் - காண உள்ளனவாகும் நல்ல அடையாளங்களை அதன்மேல் எரியர் - ஏறுவர் - கரியர்-வாழ்க்கையர் என்றிவ்வாறு எடுத்துக் கூறியருளினார்; (வி-ரை) அரிய...... என-" அரிய காட்சியராய்" என்ற பதிகப் பகுதியின் உரை விரித்தவாறு: காட்சிக்குரியர் என்னில் அதுபொரு ளென்னவரும்: "அறிபொரு ளசித்தாம்: அறியாத தின்றாம்" என்றாற்போலக் (போதம் - 6 சூ) காட்சிக்குரியராயின் அழிபொருளாம். எவ்வாற்றானும் காட்சிப்படாரெனின் பயனின்றாம். ஆதலின், இவ்விருவகையுமன்றி உள்பொருளாய்ப் பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிதாய்ப் பதிஞானமொன்றானே காணப்படுவதாய் உள்ளது அந்த முதல்வனதியல்பு என்பார் காட்சியரியர் என்னாது அரியகாட்சியர் என்றார். பாசஞானத்தாற் காணபடாமை காட்சி நான்கனுள் இந்திரியக் காட்சி, மானதக் காட்சி, தன்வேதனைக் காட்சி என்ற மூவகைக் காட்சியினா லறியமாட்டாமையும், "வேத சாத்திர மிருதி புராண கலைஞானம் விரும்பசபை வைகரியா தித்திறங்கண் மேலாம், நாதமுடி வானவெலாம் பாசஞானம்" என்றதனால் வேத முதலிய சாத்திரங்களானும் காணப்படாமையுமாம். இந்திரியங்களும் மன முதலியவையும் மாயகாரியங்களாதலின் தமக்குக் கீழ்ப்பட்ட தத்துவப் பொருள்களைக் காட்டுதலின்றி மாயைக்கு அப்பாற்பட்ட இறைவனைக் காண்டற்குக் கருவியாகமாட்டா. இனி, இவ்வாற்றானன்றி, அறிவைத் தடைசெய்து நின்ற மலசத்திகளை இயம நியம முதலிய அட்டாங்க யோக சமாதியான் ஒருவாறு கெடுத்து ஓரிடத் தொருகாலத்திருந்தாங்கிருந்து மூவிடத்து முக்காலத்துப் பொருள்களையும் காண்கின்ற காட்சியாய் உயிரினோ டுணர்வு தெரிவது யோகக் காட்சி எனப்படும் நான்காவது காட்சியாம்; அதனாற் காண்பமெனின் இதனிலும் ஆன்மபோத முனைப்பு நிற்றலால் இத்தகைய காட்சிக்கும் அரியர் இறைவர் என்க. பின் என்னையோ இறைவன் காட்சிப்படும் நிலை? எனின், "ஊனக்கண் பாசமுண ராப் பதியை, ஞானச் கண்ணினிற் சிந்தை நாடி" (9 - சூ) என்ற சிவஞானபோதக் கருத்தினைப் "பாசஞா னத்தாலும் பசுஞா னத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞா னத்தாலே, நேசமொடும் உள்ளத்தே நாடி" (1), " கண்டசிவன் றனைக்காட்டி யுயிருங் காட்டிக் கண்ணாகிக் கரணங்கள் காணாமல்நிற்பன், கொண்டரனை யுளத்திற்கண் டடிகூடிற் பாசம் கூடாது" (5): "உளத்தவன்றா னின்றகலப் பாலே சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி" (7): "அருளின் வழிநின், றஞ்செழுத்தை விதிப்படி யுச்சரிக்க மதியருக்க னணையரவம் போற்றோன்று மான்மாவி லரனே" (8) என்பனவாதி திறங்களால் (8 - சூத்) விரித்த சிவஞானசித்தியார்த் திருவிருத்தங்களும், "தொடர்வரும் அருளி னாலே தோன்றுமா காணாராயின் உடையவ னடிசேர்ஞான முணர்தலின் றணைத லின்றே" (79) என்ற சிவப்பிரகாசமும் ஈண்டுக் கருதத்தக்கன. ஈண்டுத் " திரியக் காண்டல், இரட்டுறக் காண்டல், தெளியக் காண்டல் எனக் காட்சி மூவகைப்படும். அவை மூன்றும் அதிபக்குவமுடையார்க்குக் கேட்டல் மாத்திரையானே ஒருங்கு நிகழும்: ஏனையோர்க்குச் சோபான முறையாற் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் என்னும் மூன்றானும் முறையே நிகழ்வன ஆகலின் ஆன்மதரிசனத்தைப்பயக்கும் சிவரூபத்தின்பின் ஆனமசுத்தியைப் பயக்கும் சிவதரிசனம் ஒருதலையான் வேண்டப்படும்" என்றும், "பசுஞானத்தானும் பாசஞானத்தானும் அறியப்படாத முதல்வனை அம்முதல்வனது ஞானக்கண்ணானே தன்னறிவின்கண்ணே ஆராய்ந்தறிக: அப்பதிஞானத்தைப் பெறுமாறு யாங்ஙனமெனின், நிலமுதல் நாதமீறாகிய பாசக்கூட்டம் (காரியப் பிரபஞ்சம்) நின்றுழி நில்லாது பரந்து திரிதற்கண் அதிவேகமுடைய பேய்த்தேரி னியல்பிற்றாய்க் கழிவதென்றறிந்து நீங்கவே, அப் பதிஞானம் பிறவித்துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும். அங்ஙனம் விளங்கிய ஞானத்தான் ஞேயத்தைக் கண்ட காட்சி சலியாமைப் பொருட்டு அப்பொருள் பயக்குந்த திருவஞ்செழுத்து அவ்விதிப்படி அறிந்து கணிக்கப்படும் " என்றும்வரும் (9 - சூ) மாபாடியமும் கருதுக. இனி, இக்காட்சி யருமையாதலன்றி எளிமையாதற்கு "ஏகனாகி யிரைபணி நிற்ற"லும் (10) (அரன்) "காண வுள்ளத்தைக் கண்டு காட்டலும்" (11 - சூ) வேண்டப்படு மென்பது ஞான சாத்திரம். மேலும் இவ்வியல்பெல்லாம் சிவாகம முதலிய ஞானசாத்திரங்களால் அனுபவமுள்ள தேசிகர்பால் அடுத்துக் கேட்டுணரத்தக்கன. அவ் ஆதியை - அகரச் சுட்டு. முன்பாட்டில் "அரன்" என்று குறிக்கப்பட்ட அந்த என முன்னறிசுட்டு. அரன் - சங்காரகாரணன். அவனே ஆதி என்பது "அந்த மாதி" "சங்கர காரணனாயுள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம்" என்று சிவஞானபோத முதற்சூத்திரத்துள் நாட்டப்பட்டது காண்க. தெரியலா நிலையால் தெரியார் - தெரியலா நிலை - தெரிவிக்க மாட்டாத நிலைகள். இவைபிரம விட்டுணுக்கள் தெரியப்புக்க பசுபோத முற்பட்ட நிலைகளும், புத்தர், சமணர் முதலிய புறச்சமயத்தோர் காணமுயலு நிலைகளும், அத்தகைய பிறவுமாம். தெரியார் - தெரியப் படாதவர் எனச் செயப்பாட்டு வினையாகக் கொள்க. என - என்று அறிந்தவர்களாகி.உரிய அன்பினிற் காண்பவர்க்கு - நால்வகையுள் தீவிரதர சத்திநிபாதமும் மலபரிபாகமும் அடைதற்குரிய அன்பு முதிர்ந்து காணும் அடியவர்களுக்கு, அன்பினில் - அன்பினாலே - அன்பு துணையாக; நான் காண்கின்றேன் என்பதின்றி அவன் காட்டுகின்றான் என்ற அன்புநிலை காரணமாக; "ஆர்வமுன் பெருக வாரா அன்பினிற் கண்டு கொண்டே" (777) என்ற நிலை; அன்பினுள்ளே அரனை வெளிப்படக் காண்பவர்க்கு என ஏழனுருபாக வைத்து உரைப்பினுமமையும். "உள்ளத்திற் றெளிகின்ற அன்பின் மெய்ம்மை யுருவினையு மவ்வன்பி னுள்ளே மன்னும், வெள்ளஞ்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண் விமலரையும்" (புரா - 1023). "நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால் நல்லசிவ ஞானத்தால் நானழிய - வல்லதானல் ஆரேனு மன்புசெயி னங்கே தலைப்படுங்கான் ஆரேனுங் காணா அரன்" -----(களிறு - 15) என அரிய காட்சியராகிய அரன் காட்சிப்படும் நிலையினை ஞானசாத்திரம் கூறுதல் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. "காட்டுவித்தா லாரொருவர் காணா தாரோ" (தேவா): "அப்படியு மந்நிறமு மவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணி னல்லால்" (தேவா): "அவனரு ளாலே யவன்றாள் வணங்கி" (திருவா) என்பனவாதி திருவாக்குக்கள் அக்காட்சி அவன் காட்டினாலன்றிக் காணற் கரிதாந்தன்மையை விளக்குவன. அவன் அவ்வாறு காட்டுதற்கு அன்பும் பக்குவமும் காரணமென்க. இவற்றினியல்புகளை முன்(2717) உரைத்தாம். அவனருளை நாடினர்க்கு அவனருட் சத்தியால் காட்சிப்படுவர் என்க. உண்மையாம் பெரிய-நல் அடையாளங்கள் - இவை இத்திருப்பாட்டில் மேல் (1) அங்கைசேர் எரியர் என்றும், (2) ஏறுகந் தேறுவர் என்றும், (3) கண்டழங் கரியர் என்றும், காடுறை வாழ்க்கையர் என்றும் கூறினவாம். உண்மை ஆம் - பெரிய நல் - உண்மை - உள்ளன - அழிவில்லாதன என்பது; பெரிய - தற்பரமாகிய - தமக்குமேற் பரமில்லாத; எல்லாவற்றையும் தமக்குள் அடக்கிய. நல் - நற்பயன் தரும். இம்மூன் றடைமொழிகளாலும் சத்தாந் தன்மையும், முமுநிறைவாந் தன்மையும், பேரின்பமும் பேரருளும் உடையராந் தன்மையும் குறிக்கப்பட்டன. அடையாளங்கள் - காட்சிப்படும் குறிகள். அடையாளங்கள் அவயவப் பகுப்புடைமை காட்டுதலால் ஏனையவைபோல முத்தொழிற் பட்டுக் கண்டமாய் அழியும் தன்மை வருமோ? என ஐயுறாமைப் பொருட்டு உண்மையாம்-பெரிய-நல்-என்று கூறினார். அரிய காட்சியர் என்றது சிவனது சொரூப நிலையினையும், எரியர் - ஏறுவர் - கரியர் - வாழ்க்கையர் என்றவை அவரது தடத்த வடிவங்களையும் குறிப்பன. பாசஞானங்களுக்கு அரிய காட்சியராயினும், சிவஞானங்களின் காட்சிக்கு இத்திருமேனிகளாகக் காணப்படுவர் என்பதாம். அடையாளங்கள் - "பிரமபுர மேவினார் தம்மை அடையாளங்கள ளுடன்சாற்றி " (1973) என்ற இடத்திற்போலவே ஈண்டும் கூறிய அடையாளங்களின் ஒற்றுமை கண்டு கொள்க. ஏறுகந் தேறுவர் - காடுறை வாழ்க்கையர் என்பன முறையே விடையேறி காடுடைய சுடலைப்பொடி பூசி எனக் கூறப்பட்டன. அங்கைசேர் எரியர் - என்பது தோடுடைய செவியன் என்பதுபோலச் சிவனது ஒரு அங்கத்தினையும் அதனில் ஏற்ற பொருளினையும் குறிப்பதுவும், "சாற்றியிடு மங்கியிலே சங்காரம்" (உண்மைவிளக்கம்) என்றபடி கையில் ஏந்திய எரி சங்காரத்தைக் குறித்தலால் அதன்பின் இறைவர் சத்தியுடன் கூடிநின்று புனருற்பவம் உளதாகும் அருளின் உண்முகமாக நிற்பதனை உணர்த்துலின் தோடு உடைய என்ற கருத்தைக் குறிப்பதுவும், "முத்தீ மருவாருங் குழலுமைபத் தினிவளர்ப்ப விடக்கரத்து வயங்க வேந்தி" (பேரூர்ப் புராணம் - கடவுள் வாழ்த்து) என்றபடி எரி ஏந்துதல் உலகோம்பு நிலை குறிப்பதுவும் காண்க. கண்டமுங் கரியர் - மதிசூடி என்றது போல அமுதவடிவம் குறித்தலும் காண்க. அரிய காட்சியர் - அடையாளங்கள் - இவை இவ்வாறு பதிவடிவாகிய சொரூப நிட்கள சகள நிலைகளை முன்னர் ஞானம்பெற்று இறைவனைத் தந்தைக்குக் காட்டும் இடத்தும், ஈண்டுப் பதியுண்மையினையும் பதி இலக்கணத்தையும் பாண்டியனுக்கு உபதேசிக்கும் இடத்தும் தொடக்கத்தில் பிள்ளையார் அருளியவாறு கண்டு, ஆசிரியர் சேக்கிழார் பெருமானும் தாமும் ஈண்டு எடுத்துக்காட்டியதன்றி இப்புராணத் தொடக்கத்தில் "உலகெலாமுணர்ந்தோதற் கரியவன்" என்றருளியமையும் கண்டுகொள்க. என்னை? "உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்" என்றது "அரிய காட்சியர்" என்ற சிவனது சொரூப நிலையினையும் - நிலவுலாவிய வேணியன் - சோதியன் - ஆடுவான் என்பன - "எரியர் - ஏறுவர் - கரியர் - வாழ்க்கையர்" என்பனவற்றாற் பெற்ற சிவனது தடத்தநிலையினையும் குறித்தவாறும் கண்டுகொள்க. இனி, "அகளமா யாரு மறிவரி தப்பொருள், சகளமாய் வந்ததென் றுந்தீபற"(திருவுந்தி - 1); "அகர வுயிர்போ லறிவாகி யெங்கு, நிகரிலிறை நிற்கு நிறைந்து" (திருவருட்பயன் - 2); "அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக", "அகளமய மாய்நின்ற வம்பலத்தெங் கூத்தன்"(களிறு- 1-4); "அகர முதல வெழுத்தெல்லாம்" (குறள்); "உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும்...கருணையின் வடிவு காணே"(சித்தி - 1-54) என்பனவாதியாக வரும் திருவாக்குக்களின் கருத்துக்களும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கன. ஞானஉபதேசமாதலின் அவைபோலவே ஈண்டும் அகர முதலாகத் தொடங்கிய மரபுநிலையும் கண்டுகொள்க. உரிய அன்பினிற் காண்பவர்க்கு - என்றதனால் அப்பும் உரிய பக்குவமுமுடையாரே காண்பர் என்பதும், ஏனையோர் காணார் என்பதும் பெறப்பட்டன. "அமணர் காண்கிலார்க ளாயினும், தென்னவனறியும் பான்மையால்" (2718) என்றதும் காண்க; முன்னைத் தவநிறைவாகிய அன்பு காரணமாகவே பிள்ளையார்தாமும் கண்டு பேசினார் என்பார் "அன்புசூழ் சண்பை யாண்டகையார்"(2726) என மேல் இப்பாட்டின் விரிவுரை முடித்தருளியமை காண்க. |
|
|