பாடல் எண் :2725
"ஆயி னும்பெரி யா" ரவ ரென்பது
மேய விவ்வியல் பேயன்றி, விண்முதற்
பாய பூதங்கள் பல்லுயி ரண்டங்கள்
ஏயும் யாவு மிவர்வடி வென்றதாம்;
827
(இ-ள்) அவர் "ஆயினும் பெரியார்" என்பது - அம்முதல்வர் முற்சொன்ன அடையாள நிலைகளையுடையவதாகக் காணப்படுபவராயினும் அக்காட்சியுள்ளே யடங்காத பெருமையுடையவர் என்று சொல்லப்படுமியல்பாவது; மேய இவ் இயல்பேயன்றி - மேற்கொண்டருளிய முன்சொன்ன "எரிய" ரா யிருத்தல் முதலாகிய இயல்புகளை யுடைமையே யல்லாமல்; விண்முதல்...என்றதாம் - விண்முதலாகப் பரந்த ஐம்பூதங்களும் பலவுயிர்களும் அண்டங்களும் இன்னும் உளவாகிய யாவையும் இவர் பெரு வடிவில் பொருந்துவன என்று கூறியபடியாம் :
(வி-ரை) "ஆயினும் பெரியார்" என்பது - இது திருப்பதிகம் 2-வது திருப்பாட்டில் "ஆயினும் பெரியார்" என்ற சொற்றொடர்ப் பகுதியின் பொருள் விரித்தபடி. ஆயினும் - அகண்டாகாரசொரூபமா யிருப்பதன்றித் திருவுருக்கொண்டு வித்தையாடுபவன்போலக் கையிலே நெருப்பைத் தூக்குதலும், யானை குதிரை முதலிய நல்ல வாகனங்களிலேறாமல் மாட்டிலேறுதலும், சுடுகாட்டிலிருத்தலும், முதலிய இவை பரத்துவத்துக்கு இழுக்கன்றோ என ஐயம் நிகழுமாயினும், அடியார்க்கிரங்கிச சகளீகரித்தலேயன்றி எங்கு நிறைவாகிய அகண்டாகார வடிவமுடையவர் என்றதாம் என்பது இராமநாத செட்டியார் உரைக்குறிப்பு.ஆயினும் - மேற்கூறியவாறு சொரூபமும் தடத்தமுமாகிய வடிவுகளுடையாராயினும்.மேய இவ்வியல்பு - முன்பாட்டிற்கூறிய இந்த என்க. பெரியார் - அவற்றுள்ளுமடங்காது நீண்டு எங்கும் நிறைவாகியவர். இவ்வாறு ஆன்மாக்களை உய்யக்கொண்டருளும் பொருட்டு முன்கூறிய சொரூப தடத்த நிலைகளை மேற்கொண்டருளினும் அவ்வருளினைத் திளைக்கும் அன்பர்களது கருத்தினாலும் அளக்கலாகாதபடி நிற்பவர் என்பது ஆயினும் பெரியார் என்றதன் குறிப்பாகும். "கடலலைத்தே யாடுதற்குக் கைவந்து நின்றுங், கடலளக்க வாராதாற் போலப் - படியில், அருத்திசெய்த வன்பரைவந் தாண்டதுவு மெல்லாங், கருத்துக்குச் சேயனாய்க் காண்" (களிறு - 90) என்ற ஞானநூற் கருத்து ஈண்டு உய்த்துணர்தற்பாலது.
பாய - பரந்த; விண்முதல் - வான்முதல் நிலமீறாகிய ஐந்து; விண்முதல் என்றது தோற்றும்முறைபற்றிக் கூறியது.விண்முதல் பாய பூதங்கள் ஐந்தும், பல்லுயிர் என்னும் உயிர்களும், அண்டங்கள் - சூரிய சந்திரர்களாகிய அண்டங்களின் தெய்வங்களிரண்டும் ஆக அட்டமூர்த்தமாய் நின்றநிலை குறித்தது. "நிலனீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலனீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்"(திருவா). இவ்வாறன்றி அண்டங்கள் என்பதற்குச் சகல புவனங்களாகிய அண்டங்கள் என்பாருமுண்டு.
ஏவும் யாவும் - இவைகளேயன்றிப் பொருந்திய மற்று எல்லாப் பொருள்களும்.இவர் வடிவு - இவரது பெருவடிவினுள் அடங்கி அமைவன; எல்லாவற்றுள்ளும்நிறைந்திருப்பர் என்றலுமாம். பெருவடிவை விசுவரூபம் என்பர். முருகப்பெருமான் இந்திரன் முதலிய தேவர்கள் காணக்காட்டும் பொருட்டு ஒருமுறையும் (திருவிளையாட்டுப் படலம் - 88-90), சூரன் காணக்காட்டும் பொருட்டு ஒருமுறையும் (சூரன்வதை - 422-427) மேற்கொண்டு காட்டியருளிய இப்பெருவடிவத்தினியல்பு கந்தபுராணத்தினுள் பேசப்பட்டது காண்க.
"மண்ணளவு பாதலமெ லாஞ்சரண, மாதிரவ ரைப்புமிகு தோள்,
விண்ணளவெ லாமுடிகள், பேரொளியெ லாநயன, மெய்ந்நடுவெ லாம்,
பண்ணளவு வேதமணி வா, யுணர்வெ லாஞ்செவிகள், பக்கமயன் மால்
எண்ணளவு சிந்தையுமை, யைந்தொழிலு நல்கியரு ளீச னுயிரே"
- (கந்தபு - திருவிளை-பட-89); இதனைத் "தொல்லையொரு தனதுவரும்" என்பர் (மேற்படிஒ சூரன் வதை - 427); "இருநிலனாய்த் தீயாகி...." எனும் நின்ற திருத்தாண்டகமும், மறைகளுள்ளே இதயமாகிய திருவுருத்திரமும் இக்கருத்தையே விளக்குவன.பெரியார் - முன்கூறிய இயல்பின் அடங்காது நீள்பவர்.