பின்பு "மாரறி வாராவர் பெற்றியே" யென்ப தியாருணர் வானுஞ்சென் றெட்டொணா மன்பெ ருந்தன்மை யாரென வாழ்த்தினார் அன்பு சூழ்சண்பை யாண்டகை யாரவர். | 828 | (இ-ள்) பின்பும்....என்பது - மேலும் அவர் பெற்றியே ஆர் அறிவார்? என்று கூறும் தன்மையாவது; யாருணர்வாலும்...தண்மையார் என - யாவருடைய உணர்வினாலும் சென்று எட்டுதற்கியலாத நிலைபெற்ற பெரிய தன்மையினையுடையவர் அவர் என்று; அன்பு....ஆண்டகையாரவர் - அன்பு சூழ்ந்த சண்பை ஆண்டகையராாகிய அப் பிள்ளையார்; வாழ்த்தினார் - வாழ்த்தியருளினர். இம்மூன்று திருப்பாட்டுக்களானும் "அரிய காட்சியராய்" என்ற தொடங்கும் திருபாசுரத்தின் இரன்டாவது திருப்பாட்டுக்குப் பேருரை வகுத்தருளினார் ஆசிரியர் பெருமான் (வி-ரை) "ஆரறிவர் ரவர் பெற்றியே" என்பது பதிகப் பாட்டுப் பகுதி.ஆரறிவார் - வினா; வேறு...ஒருவரும் அறியகில்லார் என எதிர்மறை குறித்தது; பெற்றி - "பெற்றி பிறர்க்கரிய பெம்மான்"(திருவா) என்றபடி முன்கூறியபடி உரிய அன்பினிற் காண்பவர் காணும் சில அடையாளங்களானன்றி அவர் தன்மையை முழுதும் அறியவல்லவர் எவருமிலர் என்பதாம். முன், அரிய காட்சியர் என்றார்; பின்னர் எரியர் முதலிய சில அடையாளங்களால் அறியப்படும் நிலை கூறினார்; அவற்றுளடங்காது நிற்கும் பெறுநிலையும் கூறினார்; இவற்றுள் முடிந்து விடுமோ அவர்நிலை என்னில் அன்று, யாவர்தான் அவர் பெற்றி முழுதும் அளந்தறிய வல்லவர் என வினாவினால் உறுதிப்பட எவராலும் இயலாது என்று முடித்துக்காட்டியருளினார். "இவர் தன்மை யறிவாரார்" என்று பாட்டுதோறும் வரும் திருப்பல்லவ ளீச்சுரப் பதிகம் இங்கு நினைவு கூரத்தக்கது. யார் - யாவர் என்றது யார் எனக் குறைந்து நின்றது.உணர்வாலும் - சிறப்பும்மை. சென்று எட்டொணா மன்பெருந் தன்மையார் - "உலகெலா முணர்ந் தோதற் கரியவன்"; மன்பெரும் - ஒருபொருட் பலசொல் மிகுதி குறித்தன. மிகப் பெரிய என்க. மன் - நிலைத்த என்றலுமாம்.வாழ்த்தினார் - இறைவரது தன்மையினை எடுத்துக் கூறும் வகையாய்ப் போற்றியருளினார். அன்பு சூழ் - அன்பின் றிறத்தால் இறைவரை இடைவிடாது துணிந்து நினைக்கும்; சூழ்தல் - நினைத்தல். அன்பு சூழ்ந்தவராதலின் வாழ்த்தினார் எனக் காரணக் குறிப்புப்பட உடம்பொடு புணர்த்தி ஓதினார். உரிய அன்பினிற் காண்பவர்க்கு என்றபடி அன்பு சூழவுள்ளவராதலின் என்றதும் குறிப்பு. ஆண்டகையார் அவர் - ஆண்டகைமை இறைவரது சிவஞானத்தை முழுதும் பெற்று அதனுள் நிலைபெற்று நிற்கும் வீரத் தன்மை. அவர் - என்ற சுட்டும் அத்தேற்றப் பொருள்பட நின்றது. "யாவ ராயினு மன்ப ரன்றி யறியொணாமுதல்" (திருவா. சென்னிப்பத்து). ஆரறிவா ரவர் பெற்றி - தாயுமானார் "அறிஞருரை"யில் இதனை விதந்தெடுத் தாண்டமை காண்க. இம்மூன்று பாட்டுக்களின் தொகைப் பொருளாவது:- அரிய காட்சியர் என்ற இரண்டாம் திருப்பாட்டுப் பதியுண்மையும், பதியிலக்கணமும் வகுத்துக் காட்டிற்று என்பதாம். சொரூப தடத்த இலக்கணங்கள் பேசப்பட்டன. "அரிய காட்சியர்" என்று இலக்கணம் கூறியவகையால், உள்பொருளுக்கன்றி இலக்கணம் கூறுதலின்மையால், பதிப்பொருளுண்மையும் உடன் கூறியபடி கண்டுகொள்க. எரியர் என்றது சங்காரத்தைக் குறித்தலின் அதனைச் செய்யும் சங்காரகாரணனாயுள்ள முதல்வனே உலகுக்கு முதல்வன் என்று கூறியதாம். (போதம் - 1 - சூத்.) இனி, "ஏறு உகந்தேறுவர்", "கண்டமும் கரியர்" என்றமையால் அவ்விறைவனே திதி கர்த்தாவாதல் குறிக்கப்பட்டது. அளவிலாற்றலையும் பேரருளுடைமையையும் கரியர் - வாழ்க்கையர் என்பவை குறித்தன. "அவையே தானே யய்" (போதம் - 2 - சூத்) என்ற கருத்துப் "பெரியார்" என்றதனாற் பெறப்பட்டது. "ஈறாய்...எட்டுத்திசை தானாய், வேறா யுடனானான்" (தேவா. வீழி. பிள்ளையார்); "ஒன்று யீல்லை யன்றி யொன்றில்லை; யாருனை யறியகிற் பாரே" (திருவா); "ஆரறிவா ரந்த வகளமு நிகளமும் ஆரறிவா ரெங்க ளண்ணல் பெருமையை" (திருமந்திரம்); அரிய காட்சியர் - என்றதனை "மறையினா லயனான்....குறைவிலா வளவினாலுங் கூறொணா தாகி நின்ற இறைவனார்" என்றும், எரியர் - ஏறுவர் - கரியர் - வாழ்க்கையர் என்றதனை "அருளினாவாக மத்தே யறியலாஞ் சிவனை ஞானச் செய்தியாற் சிந்தை யுள்ளே, மருளெலா நீங்கக் கண்டு வாழலாம்" என்றும் சித்தியாரும் பின்வரும் ஞானாசாரியர் விளக்குதல் காண்க. |
|
|