பாடல் எண் :2727
"வெந்த சாம்பல் விரை"யென் பதுதம்
தந்த மில்லொளி யல்லா வொளியெலாம்
வந்து வெந்தற மற்றப் பொடியணி
சந்த மாக்கொண்ட வண்ணமுஞ் சாற்றினார்.
829
(இ-ள்) வெந்த...என்பது - "வெந்த சாம்பல் விரைஎனப் பூசியே" என்று பதிகத்து மூன்றாந் திருப்பாட்டிற் கூறும் முதற்பாதப் பகுதியினில்; தமது....வெந்து அற - தமது அழிவில்லாத நித்தியமாகிய சிவவொளியல்லாத மற்ற ஒளிப்பொருள்களெல்லாம் சிருட்டிக் கிரமத்தில் தோன்றிச் சங்காரக் கிரமத்தில் வெந்து நீறாகி ஒழிய; மற்று - வேறாகிய; அப்பொடி - அந்தச் சாம்பலை; அணிசாந்தமா....சாற்றினார் - இறைவர் அழகாகிய சந்தனமாக மேற்கொண்ட வண்ணத்தினையும் எடுத்துக் கூறினார்;
(வி-ரை) "வெந்த சாம்பல் விரை எனப் பூசியே" என்பது பதிகப் பகுதி. இதனாற் சிவபெருமான், மாசங்காரத்தினிறுதியில் நீறாய்க் கிடந்த உலகத்தைத் தமது திருமேனியிற் றாங்கிநின்ற தன்மை பேசப்பட்டது. வெந்த சாம்பல் - வெந்ததனால் பெற்ற நீறு, ஆறு சென்ற வியர் என்புழிப்போல; வெந்த என்பது காரணப் பொருளில் வந்தது.
விரை - கலவைச் சாந்து; "சுண்ணவெண் சந்தனக் சாந்து" (தேவா) "சாந்தமுந் திருநீறு" (திருவிசை). சிவதருமம் பல; அவற்றுள்ளே சிறந்தது பூசனையாம்; அப்பூசனையினுட் செய்யப்படும் உபசாரங்களுட சிறந்தன ஐந்து அங்கங்கள். அவையாவன: அபிடேகம், விரை, விளக்கு, அருச்சனை, நிவேதனம் என்பன; அவற்றுள் விரையாவது இலேபனமும் சுகந்தமுமென்று இருவகைப்படும்; அவற்றுள் இலேபனமாவது பனிநீரும் பச்சைக்கர்ப்புரமுங் குங்குமப்பூவுங் கோரோசனையும் புழுகுங் கத்தூரியுங் கலந்த மலாக்காச் சந்தனத்தைத் திருமேனி முழுவதுஞ் செறிவாகச் சாத்துதலாம்; சுகந்தமாவது முல்லை, இருவாட்சி, பிச்சி(சாதி), மல்லிகை, பனிநீர், மருக்கொழுந்து, வெட்டிவேர் என்னும் ஏழினையுந் தொடுத்துத் திருவுருத் தெரியாவண்ணம் அலங்கரித்தலாம் எனவரும் ஆகமவிதிகள் ஈண்டுக் கருதத்தக்கன.
"சிவதருமம் பல; வவற்றுட் சிறந்ததுபூ சனை;யதனுள்
அவமில்பல வுபசாரத் தைந்துசிறந் தனவவற்றைத்
தவமலியப் பதினாறு மண்டலந்தண் டாதியற்றிற்
கவலையறப் பயனிம்மைப் பிறப்பிடையே கைகூடும்"
(28) "ஆங்கவைதா மபிடேக மரியவிரை விளக்குமனுத்
தாங்குமருச் சனைநிவே தனமாகும்....." (29)
"....விரையிரண்டாந் தளராத விலேபனமுந்
தயங்குசுகந்
தமுமென்ன" (33)
"காசில்பனி நீர்பச்சை கருப்பூரங் குங்குமப்பூ
மாசறுரோ சனைபுழுகு மான்மதநா வியுங்கலந்த
வாசிகந்த மலாக்காச்சந் தனமிலே பனமதனைத்
தேசவிருந் திருமேனி முழு துஞ்செறி தரக்கொட்டல்" (34)
எனவரும் பேரூர்ப்புராணம்(மருதவரைப் படலம்) காண்க.
விரை எனப் பூசியே - பூசியே என்பது உபசாரம். மாசங்காரத்துள் இறைவரை ஒழித்தொழிந்த எல்லாமும் நீறாக; அந்நீறு தங்குதற்கு வேறு இடமின்மையின் ஆண்டு அழியாது நிற்கும் இறைவர் திருமேனிமேற் கிடத்தலே பூசுதலென் றுபசரித்துக் கூறப்படும்.
தமது அந்தம் இல் ஒளி - தமக்கு அழிவில்லாமையால் தமது சிவவொளி அந்தமில் ஒளி எனப்பட்டது. தாம் எல்லாவற்றுக்கும் அந்தத்தைச் செய்யத் தமக்கு அந்தஞ் செய்ய வேறொருவருமில்லாதவர். "அந்தமாதி"(போதம் - 1).
அல்லா ஒளி எலாம் வந்து வெந்து அற - ஈண்டு அல்லா ஒளி என்றது சிவனை யல்லாத எல்லாப் பொருள்களின் ஒளி. ஒளி - ஒளியுடைப் பொருள் - சக்தி - என்ற பொருளில் வந்தது. வந்து - சிருட்டியின்கண்ணே பட்டுத் தோன்றி. வெந்துஅற - சங்கரிக்கப்பட்டு ஒழிய.
மற்று அப்பொடி - மற்ற அந்தச் சாம்பர்; மற்று - தாமல்லாத ஏனையவை.
அணி சந்தம் - அணியும் சாந்து; கொண்ட - ஏற்றுக் கொண்ட.
வண்ணம் - தன்மை; திருமேனி வண்ணம் என்றலுமாம்.
தமது அந்தமில் ஒளி அல்லா ஒளி எல்லாம் - வெந்தற - என்றதனால் இங்குக் கூறியது நிவிர்த்திகலை முதலிய பஞ்சகலைகளுட்பட்ட ஐவகைச் சங்காரத்துள் இறுதிக் கண்ணதாகிய மாசங்காரத்தை; அந்தமில் ஒளி - சிவசத்தி; அல்லா ஒளியெல்லாம் - அவ்வச் சங்காரத்துட்பட்டு ஒடுங்கும் தத்துவ புவனங்களின் அதிதெய்வங்களும் அவற்றின் சத்திகளும்; மாசங்காரத்தில் ஐவகைக் கலைகளுள் இறுதிக்கண்ணதாகிய சாந்தியதீத கலையிலடங்கிய தத்துவ புவனங்களும் தெய்வங்களும் எல்லாம் சிவனது அந்தமில் ஒளியினுள் ஒடுங்குவனவாதலின் எல்லாம் என்றதனால் ஈண்டுக் கூறியது சுத்தமாயா புவனாந்தஞ் சங்கரிக்கும் சங்கார காரணனாகிய பரமசிவனை; அயன்மா லொடுங்கூடக் குணதத்துவத்தின் வைகிப் பிரகிருதி புவனாந்தஞ் சங்கரிக்கும் குணிருத்திரனை யன்றென உணர்க;....இவ்வேறுபா டுணர்த்தற்கன்றே பொதுப்படச் சாங்கார காரணனையென் றொழியாது சங்காரணனாயுள்ள முதலையே என விதந்தோதியதும் என்க என்ற சிவஞானபோத முதற்சூத்திர மாபாடிய உரை கருதுக.
வந்து வெந்தற - தோற்றப்பட்ட அம்முறையே சங்காரக்கிரமத்தில் ஒடுங்கி.
பொடியணிதல் - பொடி சந்தமாக் கொள்ளுதல் புனருற்பவம் குறித்தது; மறு பயிர்க்குரிய விதைமுதலைக் கோட்டை செய்து சேமித்தல் போல மீளச் சிருட்டித்தற் பொருட்டுத் தாங்குதல் என்க.
மேல்வரும் பாட்டில் "அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ, திமைத்த சோதி யடக்கிப்பின் னீதலால்"(2728) என்று இக்கருத்தை விரித்தல் காண்க. "ஒடுங்கி மலத்துளதாம்" என்ற சிவஞானபோத முதற் சூத்திரமுங் காண்க; "வீந்த சுடலை விபூதி தரித்திருவர், கூர்ந்த தலைமாலை கொண்டவரார்" என்ற இரட்டையர் திருவேகம்ப ரம்மானை இதனைப் போற்றுதல் காண்க; "அவர்தமை விழியாற் றொல்லை நாளினீ றாக்கியும் புனைந்திடுந் தூயோன்" எனவரும் (ததீசியுத்தரப் படலம் - 13) கந்த புராணமும், "எலும்புங் கபாலமு மேந்தில னாகில், எலும்புங் கபாலமு மிற்றுமண் ணாமே" (2 - தந் - 371) என்ற திருமந்திரமும் காண்க.