தமக்குத் "தந்தையர் தாயிலர்" என்பதும் அமைத்திங் கியாவையு மாங்கவை வீந்தபோ திமைத்த சோதி யடக்கிப்பின் னீதலால் எமக்கு நாதர் பிறப்பில ரென்றதாம். | 830 | (இ-ள்) தமக்கு...என்பதும் - மேல் அத்திருப்பாட்டில் இரண்டாம் பாதத்தில் தமக்குத் தந்தையாரெடு தாயிலர் என்பதன் கருத்தும்; இங்கு யாவையும் அமைத்து - தமதொளியல்லா வொளிப்பொருள்க ளெல்லாவற்றையும் சங்கரித்த பின் தமக்குள்ளே ஒடுக்கி; பின் ஈதலால் - பின்னரும் புனருற்பவத்தில் மீளவும் அவற்றை உளவாக்குதலால்; எமக்கு...என்றதாம் - எமது இறைவர் பிறப்பில்லாதவர் என்று கூறியபடியாம். (வி-ரை) தமக்குத் தந்தையார் தாயிலர் - "தந்தையா ரொடுதாயிலர்" என்ற பதிகப்பாட்டுப் பகுதி. என்பதும் - இது முன்சொன்ன கருத்தைத் தொடர்ந்து கொண்டு விரித்தலால் உம்மை இறந்தது தழுவியது. இங்கு அமைத்து - என்க. இங்கு என்ற சுட்டு தம்மிடத் தொடுங்கிய நிலையினின்றும் வருவிக்கும் சிருட்டிநிலை குறித்தது. "இங்கு மங்கு மென்பதும்" (திருவா). யாவையும் - ஐந்து கலைகளினுட்பட்ட எல்லாப் புவனங்களும் புவனாதிபதிகளும். "ஒளியெலாம்" என முன்பாட்டிற் கூறியதைத் தொடர்ந்து கொண்டார். ஆங்கு - சிருட்டிமுறையில் தோற்றிய அவ்வாறே; வீந்தபோது - சங்கரிக்கப்பட்டபோது. இமைத்த சோதி - வெளிப்பட்டு ஒடுங்கித் தொழிலற்றிருக்கும் சிவசக்தி; சங்காரஞ் செய்த தமது நெற்றி நாட்டத் தொரு சிறுபொறி என்ற குறிப்பும் தருவது. அடக்கிப் பின் ஈதலால் - ஒடுங்கச் செய்து பின்னரும் புனருற்பவம் செய்தால். "ஒடுங்கி மலத்துளதாம்" (சிவஞானபோதம் - 1சூ); "ஒடுங்குதற் கேதுவாய் நின்ற கடவுளினின்றும், சகசமலம் நீங்காமையால், அது நீங்குதற்பொருட்டு மீளத் தோன்றுவதாம்" என ஆண்டு உலகின்மேல்வைத்துக் கூறியது உலகினைக் கொண்டு பதிப் பொருளுண்மையினை அறிவிக்கும் முறையால் என்க; இங்கு அவ்வாறு ஒடுக்கியும் மீளச் சிருட்டித்தும் இயற்றுபவர் மாசங்காரத்தைச் செய்யும் முதல்வராகிய சிவபெருமான் எனப் பதியுண்மையும் இலக்கணமும் நாட்டியவாறு. "நீடுமெய்ப் பொருளினுண்மை நிலைபெறுந் தன்மை யெல்லாம், ஏடுற வெழுதி"(2694) என்று சமணர் ஒட்டினாராதலின் இவ்வாறு மெய்ப்பொருள் கூறியதாம். "ஒடுங்கிய சங்காரத்தின் அல்லது உற்பத்தியில்லை" என்று சிவஞானபோதத்துள் விரித்தலும் காண்க. அடக்குதல் - பிறந்து இளைத்தலால் இளைப்பாற்றும் பொருட்டுத் தம்முள் ஒடுக்குதல். பின் ஈதலால் - "அந்தம் ஆதி" என்ற முதற்சூத்திரக் கருத்து. "சங்காரமே முதல்" என்க. எமக்கு நாதர் - ஆண்மாக்களாகிய எங்களுக்குத் தலைவர். நாதர் பிறப்பிலர் - முன் அந்தம் - இறப்பு - இல்லாமை கூறினார்; ஈண்டுப் பிறப்பு - ஆதி - யில்லாமை கூறுகின்றார். "சராசரமாகிய எப்பொருளும் தன்னிடத்திற் றோன்றி யொடுங்கத் தானொன்றிற் றோன்றி யொடுங்காது நிற்றலிற் பிறப்பிறப்பிலர் என்றார்". தந்தை தாய் - என்பன தோன்றுமிடம் என்ற மாத்திரை குறித்து நின்றன.
|
|
|