"தம்மை யேசிந்தி யா"வெனுந் தன்மைதான் மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென விம்மை யேநினை வார்த மிருவினைப் பொய்ம்மை வல்லிருள் போக்குவ ரென்றதாம். | 831 | (இ-ள்)தம்மையே...தம்மைதான் - "தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்" என்று கூறும் பதிகப்பாட்டின் பகுதியினது தன்மையாவது; மெய்ம்மையாகி.....தாமென - உண்மையாகி விளங்கும் ஒளி தாமே என்று கண்டு; இம்மையே....போக்குவர் என்றதாம் - நினைவார்களது இருவினைகள் தொடர்வதற்குக் காரணமாகிய பொய்ம்மையை விளைத்து நிற்கும் மலவிருளை இம்மையே நீக்குவார் என்றதாகும். (வி-ரை) தம்மையே சிந்தியா எனும் தன்மை. "தம்மையே சிந்தியா எழுவார் வினைதீர்ப்பரால்" என்ற பதிகப் பாட்டுப் பகுதியினால் போந்த பதியின் இலக்கணமாவது என்க. தம்மையே - ஏகாரம் பிரிநிலை. "இரண்டுற மனம் வையேல்" (பிள்ளை - தேவா); "பொதுநீக்கித் தனைநினைய வல்லார்"(அரசு - தேவா) முதலியவை காண்க. சிந்தியா எழுவார் - சிந்தியா. சிந்தித்து; சிந்தித்து எழுவார் என்க. "தொழுதெழுவாள்"(குறள்) என்புழிப்போலக் கொள்க; எழுவார் - பிறவிக் குழியினின்றும் மேல் எழுவார்; ஒடுங்கிக் கிடந்த கேவல நிலையினின்றும் உணர்த்துமுறைமைச் சகத்தில் வருதலே ஈண்டு எழுதல் எனப்பட்டது. மெய்ம்மையாகி விளங்கொளிதாம் என இம்மையே நினைவார் - சிந்தியா எழுவார் என்ற பதிகத் தொடருக்குச் சிந்திக்கும் ஆறு இதுவென ஆசிரியர் காட்டியவாறு. இறைவரை அழிவில்லாத மெய்ம்மையாகி விளங்கும் பேரொளிப் பிழம்பாக இடையறாது அழுந்தியறிதல் சாதனம் என்க. "அதன் கழல் செலுமே" (8-சூ) என்ற சிவஞானபோதச் சூத்திரக் கருத்துக்கள் ஈண்டுச் சிந்திக்கத் தக்கன. சிந்தியா எழுவார் என்ற தொடர் சிந்தை நாடி எனச் சிவஞானபோதத்தினுள் விளக்கப்பட்ட தென்க. மெய்ம்மையாகி விளங்கு ஒளிதாம் - மெய்ம்மை - அழிவில்லாது நித்தமாதல்; விளங்குதல் - பரஞ்சோதியாயும், சுயஞ்சோதியாயும், அலகில் சோதியாயும் விளங்குதல். "சோதியே சுடரே சூழொளி விளக்கே"(திருவா); தமக்கு மேற்பட்ட சோதி யில்லாதபடி எல்லா ஒளிகளுக்கும் அப்பாற்பட்டு விளங்குதலின் பரஞ்சோதி எனவும், பிறிதொன்றனால் விளக்கமு.றுதலன்றித் தானே விளக்கமுறுதலின் சுயஞ்சோதி யெனவும், அளவுபடாதிருத்தலின் அலகில் சோதி எனவும்படும். அவ்வாறு அகண்டமாய் நிற்றலால் சோதியே என்றும் இறைவரை நோக்கக் கண்டமாகவும் உலகத்து ஏனைய ஒளிகளை நோக்க அகண்டமாகவும் இருக்கும் சூரிய சந்திரர்களை ஒளித்து இயக்குதலின் சுடரே எனவும், கண்டமாகிய ஏனை ஒளிகளுக்குள்ளுமாய் நிற்றலின் சூழ் ஒளி விளக்கே எனவும் அங்ஙனம் கூறப்பட்டது. "ஒளியா யொளியத னொளியா யொளியத னொளியுந் தணிதரு மொளியாகி" (பேரூர்ப் புராணம் - நிருத்தப் படலம்); "ஒளியி லொளியி லொளியன்" (நெஞ்சு விடு தூது). இருவினைப் பொய்ம்மை வல்லிருள் - நல்வினை தீவினையாகிய வலிய இருள் என்றலுமாம்; இருவினையாகிய பொய்ம்மையும் வலிய ஆணவமாகிய இருளும் என்றும் உரைக்க நின்றது; "இருள்சே ரிருவினையும் சேரா விறைவன், பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு"(குறள்) என்ற கருத்துக் காண்க; இறைவன் பொருள்சேர் புகழ் புரிதலே ஈண்டு "மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென, இம்மையே நினைவார்" எனப்பட்டது; பொய்ம்மையாவது நிலையாகவுள்ளதுபோலக் காணப்பட்டுச் சடுதியில் மறைந்துபோதல். அது காரியப்பிரபஞ்சத்தின் தன்மை. "பொய்ம்மாயப் பெருங்கடல்" என்பது இதுவே. போக்குதல் - தியான உறைப்பினாலே இருவினை ஒப்பும் மலபரிபாகமும் வரச் செய்து பக்குவப்படுத்தி மலத்துன்பத்தினின்றும் நீக்குதல்; வலிகெடச் செய்தல். "அவையே தானே யாயிருவினையிற், போக்கு வரவு புரிய ஆணையின், நீக்க மின்றி நிற்குமன்றே" (2 - சூத்) என்றதனால் விளக்கப்பட்ட பாசவுண்மையும் இயல்பும் சாதனமும் ஈண்டுக் கூறப்பட்டமை காண்க. இருள் - இருள் மலம் எனப்படும் ஆணவம்; "ஞானத்தின் கண்ணை மறைத்த கடியதொழி லாணவம்" (போற்றிப் பஃறொடை) என்றது காண்க. வல் இருள் - வலிமையாவது ஏனைப் பொருள்களையும் மறைத்து, அவ்வாறு மறைக்கும் தானொருபொரு ளுண்டென்பதனையும் அறிய வொட்டாது தன்னையும் மறைத்துச் சகசமாய் உடன் நிற்றல். "ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டும், இருபொருளுங் காட்டா திது" (திருவருட் பயன்). பொய்ம்மை - பொருளல்லவற்றைப் பொருளெனக் கொள்ளும் மருள். இருவினை - இருள் - கன்மம், ஆணவம் என்ற இரண்டையுமே கூறினார். மும்மலங்களுள் மாயையாவது - "விடிவா மளவும் விளக்கனைய மாயை, வடிவாதி கன்மத்து வந்து" (திருவருட்பயன்); "கட்புலனாற் காணார்தங் கைக்கொடுத்த கோலே போற், பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண்-முற்பாற், றனுகரண மும்புவன முந்தந்து" (முற்பால் - முதலுற்பவம் - மாபாடியம் - பக்கம் 113) என்பனவாதியாக வருவனவற்றால் மயக்கத்தை நீக்க இறைவன்தரும் உபகாரமாதலும், மலம் என்றுபசரித்துப் பேசப்படுமென்பதும் அறிக. "வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்வினை தானொழிந்தாற், றினைப்போ தளவுநில் லாது" என்றபடி இருவினைப் பொய்ம்மை வல்லிருள் போக்கவே அதன்பொருட்டுத் தரப்பட்ட மாயைப் புணர்ப்பும் உடனொழியு மாதலின் அதனை வேறு எடுத்துக் கூறாராயினர். தம்மையே என்றதனால் ஒன்றேபதி எனப்பட்ட தனிப்பொருளாகிய பதியுண்மையும் இலக்கணமும், எழுவார் - என்றதனால் அனேகமாகிய பசுக்களி னிருப்பும் இலக்கணமும், வினை - வல்இருள் - என்றதனால் பாசவுண்மையும் இலக்கணமும் பேசப் பட்டமை காண்க. மெய்ம்மையாகி விளங்கொளி தாமெனச் சிந்தியா எழுவார் - என்றதனாற் சாதனமும், பொய்ம்மை வல்லிருள் போக்குவர் என்றதனால் பாசநீக்கமாகிய பயனும் குறிக்கப்பட்டமையும் கண்டுகொள்க. இங்ஙனம் சிவஞானபோதத்துட் கூறப்படும் இயல்பெல்லாம் உபதேசிக்கப்பட்டமையும் காண்க. |
|
|