பாடல் எண் :2730
"எந்தை யாரவ ரெவ்வகை யார்கொ"லென்
றிந்த வாய்மைமற் றெப்பொருட் கூற்றினும்
முந்தை யோரையெக் கூற்றின் மொழிவதென்
றந்தண் பூந்தராய் வேந்த ரருளினார்.
832
(இ-ள்) எந்தையாரவர்....வாய்மை - "எந்தையாரவ ரெவ்வகை யார்கொலோ" என்ற பதிகப்பாட்டின் இறுதியடியிற் கூறிய உண்மையாவது; மற்று எப்பொருள்....மொழிவது என்று - வேறு எந்தப் பொருளைப்பற்றிய சொற்பகுதிகளினுள்ளும் அநாதிமுத்த சித்துருவராகிய சிவபெருமானையே எவ்வகை மொழிகளாலும் செல்லப் படாது என்று; அந்தண்...அருளினார் - அழகிய குளிர்ந்த பூந்தராய்த் தலைவராகிய பிள்ளையார் அருளிச்செய்தனர்.
2727 முதல் 2730 வரை இந்நான்கு திருப்பாட்டுக்களானும் "வெந்த சாம்பல்" என்ற மூன்றாவது திருப்பாட்டின் உரையினை விரித்தருளினார்.
(வி-ரை) எந்தையாரவர்.....வாய்மை - "எந்தை யாரவ ரெவ்வகை யார்கொலோ" என்ற தேவாரப் பகுதியிற் கூறிய மெய்ப்பொருளாவது என்று விரித்துக் காட்டியபடி.
மற்று எப்பொருட் கூற்றினும் - இறைவரை யொழித்தொழிந்த வேறு எல்லாப் பொருளும் அவற்றைக் குறிக்கும் சொற்களினும். "உரையின் வரையும் பொருளின் அளவுமென், றிருவகைப் பட்ட எல்லை" (11-ம் திருமுறை - கோயினான்மணிமாலை); மற்று - வேறு; இறைவரின் வேறாகிய.
எந்தையாரவர் எவ்வகையார் கொலோ - "ஒன்றலா வொன்றால்" (போதம் - 1 - சூ. 3 - அதி) என்ற வெண்பாவின் கீழ் மாபாடியத்தினுள், "இலக்கணத்தால் வேறுபாடில்வழி இலக்கியம் பலவாதல் செல்லாதென்னுங் கருத்தான் ஒன்றலாவொன்று என வரையறுத் தோதினார். ஒன்றலா என்பது உருவும் அருவுமாகிய இருகூற்றுப் (சேதனப்) பிரபஞ்சத்துள் ஒன்றல்லாத என்றவாறு. ஒன்றென்பது இலக்கணத்தான் வேறுபாடில்லது என்னும் பொருட்டு. 'எந்தை யாரவ ரெவ்வகை யார் கொலோ' என்றது மது" என்று மாதவச் சிவஞான முனிவர் உரைவகுத்தது ஈண்டுக் கருகத் தக்கது. ஆண்டு உரு அரு என்பது தூல சூக்கும உடல் உடைய என்னும் பொருளில் வந்தது.
முந்தையோரை - எல்லாவற்றுக்கு முன்னாகியவரை; எந்தை என்ற மொழிப் பொருள் முன்னவர் - எல்லாவற்றையும் தம்முள் அடக்கிப் பின் ஈபவர் என விரித்த படி. "எந்தைதா னின்ன னென்று மின்னதா மின்னதாகி, வந்திடா னென்று சொல்ல சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே" (சித்தியார் - 1 - 44) என்றவிடத்து, அருவம் உருவம் அருவுருவ மென்னும் முக்கூற்றுள் இன்னனாவனென்றுதான் அம் முக்கூற்றும் படும் விருத்தி பரிணாமம் விவர்த்தனமென்பவற்றுள் ஒன்றிற்படுவன் படாவென்றுதான் கூறுதற்கோ ராசங்கையு மில்லை; ஆசங்கை யின்மையில் அதற்கு மறுமொழியாகிய பரிகாரமுமில்லை என்றும், அநாதிமுத்த சித்துருவாகிய எந்தைக்குத் தோற்றக்கேடுக ளின்மையானும், அவையின்மையின் அளவைகட்கு வரம்புபடாமையானும், அவன் முக்கூற்று ளொருகூற்றினும் வைத்து மொழியப்படா னென்பார் "எந்தைதான்....இன்னனென்று சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே" என்றும், கட்டுவீடுக ளிலனாகலின் எவ்வாறுமா மென்பார், 'பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளெல்லா மின்னதா மின்னதாகி வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்றமின்றே' என்றுங், கூறினார். "எந்தை யாரவ ரெவ்வகை யார்கொலோ" என்றருளிச் செய்த பாசுரமுமிது, என்றும்" உரைவகுத்தமையும் காண்க.
எக்கூற்றின் மொழிவது - வினா எதிர்மறைப்பொருளில் வந்தது; "எங்ஙனங் கூறுகேன்" என்புழிப்போலக் கொள்க.
இனி, எக்கூற்றின் - எவ்வகைக் கூற்றினும் - சொல்லினும் - என்க. முற்றும்மை தொக்கது; கூற்று - சொல்; எப்பொருட் கூற்றினும் - சித்து - அசித்து ஆகிய எப்பொருளைக் குறிக்கும் சொல்லானும்; எப்பொருளைக் குறித்துக் கூறினும் அது எந்தை யாரை மொழிவதாம் என்றுரைப்பாருமுண்டு. அஃதாமாறு: இந்திரன் மால் பிரமன் முதலிய தெய்வங்களைக் கூறினும் "யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வ மாகி யாங்கே, மாதொரு பாக னார்தாம் வருவர்" என்றபடி உண்ணின்று இயக்கும் தன்மையால் என்க. இனி இவ்வாறு எல்லாவற்றுள்ளும் நிறைந்து இயங்கும் முதன்மையானன்றி அங்காங்கி பாவத்தால் எல்லாம் தனக்குள் கூறுகளா யடங்கிநிற்கும் தன்மையாலுமாம் என்க. இத்தன்மையில் கூற்றின் என்பது - கூறு - பகுதி; பகுதியாகிய தன்மையால் என்று கொள்க. கூறுகளை மொழியும்போது அவற்றைத் தன் கூறாக உடையவனே மொழியப்படுகின்றான் என்பதாம்.
வெந்த சாம்பல் என்ற மூன்றாம் பாசுரப் பொருள் விரித்த இந்நான்கு திருப்பாட்டுக்களின் தொகைப்பொருளாவது: மாசங்கார காரணனாகவும் சங்காரத்தில் தான் அழியாது நின்று எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கிப் பின் மீள வுதிப்பிக்கு முன்னவனாகவும், தன்னை நினைப்பார்தம் வினைப்பொய்ம்மையும் இருளும் போக்குபவனாகவும் உள்ளவன் எமது முதல்வன்; அவனே எல்லாவற்றுள்ளும் நிறைந்து இயக்கும் தலைவன்; சராசரங்கள் யாவும் அவனது ஒரு கூற்றினுள் அடங்கும் என்பதாம்.
பூந்தராய் வேந்தர் அருளினார் - என்பது மூன்றாவது பாசுரத்தின் பொருள் விரித்தமை நிறைவு எனக் காட்டியபடி.