பாடல் எண் :2732
அன்ன வாதலி "னாதியார் தாளடைந்
தின்ன கேட்கவே யேற்றகோட் பாலவும்
முன்னை வல்வினை யும்முடி வெய்துமத்
தன்மை யார்க்" கென்ற னர்சண்பை காவலர்
834
(இ-ள்) அன்ன...ஆதலின் - உண்மைநிலை முன்பாட்டிற் கூறியவாறாதலின்; ஆதியார் தாள் அடைந்து - முதல்வருடைய திருத்தாள்களை அடைந்து; இன்ன கேட்கவே - இவ்வுண்மைகளைக் கேட்கலாயின்; அத்தன்மையார்க்கு -அத்தன்மை பெற்ற அடியார்க்கு; ஏற்றகோட் பாலவும்...முடிவெய்தும் - ஏற்ற மலமும் வாதனையும் ஆகிய பீடைகளும் பழைய வலிய வினைகளும் முடிவு பெறும்; என்றனர் சண்பை காவலர் - என்று சண்பை காவலராகிய பிள்ளையார் அருளிச்செய்தனர்.
இந்த இரண்டு பாட்டுக்களானும் "ஆட்பாலவர்க்கு" என்ற நான்காவது திருப்பாசுரத்திற்கு உரை விரித்தருளினர் ஆசிரியர்.
வி-ரை) இத்திருப்பாட்டுக் "கோட்பாலனவும் விளையுங் குறுகாமை யெந்தை, தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார்" என்ற பதிகப்பகுதியை விளக்கிக் கருத்துரைத்தது.
அன்ன ஆதலின் - அன்ன - அகரவீற்றுப் பலவறிசொல். உண்மை நிலைகளாகிய வண்ணமும் மாட்சிமையுமாகிய அவைகள் அத்தன்மையை உடையன. அகரம் முன் சொன்ன அந்த என முன்னறி சுட்டு. வண்ணமும் மாட்சிமையும் என்றிவை முன்பாட்டிலிருந்து வருவித்துக்கொள்க.
ஆதியார் தாள் அடைந்து இன்ன கேட்கவே - தாள் அடைந்து கேட்டலாவது திருவடி ஞானத்தால் உணரலுறுதல்; அதனியல்பாவது:--"ஐயா! வழியடியோம்; வாழ்ந்தோங் காண்; .....மடந்தை மணவாளா! - நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோம்; எய்யாமற் காப்பாயெமை"(திருவா. திருவெம்பாவை) என்றவாறு இறைவரது திருவருளை வழுத்தி நின்று "முதல்வரே! அடியேன் அறிவில்லாதேன்; தேவரீரது அருளினால் அடியேனை ஆட்கொண்டருளும் வகையினையும் உடைந்துய்யும் நெறியினையும் உணர வருளிச் செய்யும்" என்று கேட்கவே என்க; அடியார்களைப் பாடுக என்று திருவாரூர்ப் பெருமான் ஆளுடைய நம்பிகளை ஆணையிட்டருளியபோது, "இன்னவா றின்னபண் பென் றேத்துகே னதற்கி யானார்?; பன்னுபா மாலையாடும் பரிசெனக் கருள்செய் யென்ன", அதற்கு, இறைவர் "அல்லறீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கலால், தில்லைவா ழந்தணர்தம் மடியார்க்கு மடியேனென், றெல்லையில்வண் புகழாரை யெடுத் திசைப்பா மொழி" யென்றார் (344 - 355) என்றும்; அவ்வாறே திருத்தொண்டர் புராணத்தைப் பாடியருளும்படி அநபாயச் சோழர் கேட்க அதற் குடன்பட்டுச் சென்ற ஆசிரியர் சேக்கிழார் பெருமான். தில்லையம்பலவாணர் திருமுன்பு பணிந்து கைத்தல முச்சிவைத் துளமுருகி நைந்துநின்று "அடிகளே! உனதடியர்சீ ரடியனே னுரைத்திட வடியெடுத் திடர்கெடத் தருவாயெனத் திருவருளை யெண்ணி யிறைஞ்சிக்" கேட்கவே, "திருவருளினா லசரீரிவாக் குலகெலா மெனவடி யெடுத்துரைசெய்த பேரொலி யிலகுசீ ரடியார் செவிப்புலித் தெங்குமாகி நிறைந்ததால்" (திருத்தொண்டர் புராண வரலாறு - 20-21) என்றும் வரும் வரலாறுகள் இங்குச் சிந்திக்கத் தக்கன; அவ்வாறு கேட்கவே " ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் (அருளிய) ஆதிமாண்பும்" நம்பிகளும் ஆசிரியர் பெருமானும் உணரப்பெற்றருளினர் என்ற உண்மைகளும் காண்க; இவற்றுக்க அகச்சான்றாக "ஆரூர னாரூரி லம்மானுக் காளே", "அன்னவனா மாரூர னடிமைகேட் டுவப்பார்" என்றும், "வெருளின் மெய்ம்மொழி வானிழல்கூறிய பொருள்" என்றும் வரும் திருவாக்குக்களும் இக்கருத்தை ஆசரிக்கை மரபில் வலியுறுத்தி விளக்குதல் காண்க.
இன்ன - ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்புமாகிய இவை; அகர வீற்றுப் பலவறிசொல். இகரம் - அணிமைச்சுட்டு.
அன்ன - இன்ன - தாளடையாது தன்முனைப்பின் ஆராய்ச்சியால் வினாயினார்ச்கும் விடையிறுப்பார்க்கும் சொல் அளவுபடாது சேய்மைப்படுதல் குறிக்க அன்ன என்று சேய்மைச்சுட்டாற் கூறிய ஆசிரியர், அவ்வாறன்றித் தாளடைந்து கேட்கவே கோட்பாலனவும் வினையுங் குறுகாது முடிவெய்துதலின் இவை உணர்தல் அணியவாதல் குறிக்க அணிமைச்சுட்டாற் கூறிய தெய்வக் கவிநலமும் காண்க.
கேட்கவே - ஏகாரம் பிரிநிலை; முன்னர்க் கேட்க என்று (2731) வாளாகூறிய ஆசிரியர் ஈண்டுக் கேட்கவே என்றருளிய கருத்துமது. பதிகத்தினும் "கேட்பான் புகில்...சிளக்க வேண்டா" என்றும், "கேட்க தக்கார்" என்றும் அருளியதன் பொருள் இவ்வாறு ஆசிரியர் காட்டியருளக் கண்டு கொள்க.
ஏற்ற கோட்பாலவும் முன்னை வல்வினையும் முடிவெய்தும் - ஏற்ற கோட்பால - ஏற்ற - சகசமாய்ப் பொருந்திய; கோட்பால - பால - அகரவீற்றுப் பலவறிசொல். கோள் - பற்றிக் கொள்ளுதல். அநாதியே செம்பிற் களிம்புபோலச் சகசமாய் உயிர்களைப் பற்றி நிற்கும் மூல ஆணவமலமும் அதன் எச்சமாய்ப் பின்னிற்கும் வாசனாமலமும் என்க. முன்னை வல்வினை - பண்டைப் பழவினை; மூலகன்மம்; "இருவினைப் பொய்ம்மை வல்லிருள் போக்குவர்" (2729) என்றவிடத் துரைத்தவை பார்க்க. முன்னர்க் கூறியது சாதனவகையும், ஈண்டுக் கூறியது மூலமல வாதனையும் மூலகன்மமும் ஆகிய இவை "முடிவெய்தி"ப் பற்றற வொழியும் பயன்வகையுமாதலின் கூறியது கூறலன்மையுணர்க.
ஆதியார் தாளடைந்து இன்ன கேட்க - என்றது திருவடி ஞானங் கைகாட்ட அதனுள் அடங்கிநின் றுணர்வதாகிய நிட்டைகூடல் என்னும் நான்காவது ஞானநிலை என்க.
ஏற்ற கோட்பால - முன்னை வல்வினை - இவற்றுக்கு, முன் கூறியவாறன்றி, (தொன்றுதொட்டனவாய்த் தம்மைவந் தடையும்) விரும்பத்தக்க நல்வினையும், பழமையான தீவினையும் என்றுரைத்தனர் முன்னுரைகாரர்கள்; அவை பொருந்தாமையறிக. கோட்பால என்பதற்குக் குற்றப்பகுதிகள் என்பது இராமநாதச் செட்டியார் குறிப்புரை; கோட்பாலவும் - கிரகங்களின்பாற் பட்டு விளையும் தோஷங்களும் என்று ஆண்டவன் தாளடைந்து கோளாலும் வினையாலும் விளையும் கெடுதல்கள் குறுகி இடர்ப்படுத்தாதவாறு முறையிடவேண்டுவது உயிர்களின் கடமை என்றபடி என்றுரைப்பாருமுண்டு; இவை ஈண்டைக் கேலாமை யறிந்து கொள்க.
அத்தன்மையார்க்கு - கேட்கவே அவ்வாறு தாளடைந்து கேட்கும் தன்மை யார்க்கு.
இந்த இரண்டு பாட்டுகளின் தொகைப் பொருளாவது இறைவர் தம்மை அடைந்தவர்க்கருளும் திறங்கள் எல்லையில்லன; ஆதலின் அவை ஆராய்ச்சி செய்தற்குரியனவல்ல; அற்றாகவே அவர் திருவடிகளில் அடைவு கொண்டு கேட்க. அவ்வாறு கேட்பார்க்கு கோட்பாலனவும் முன்னை வல்வினையும் முடிவெய்தும் என்பதாம்.
சண்பை - சீகாழியின் ஒன்பதாவது பெயர்