பாடல் எண் :2733
மன "மேதுக்க ளா" லெனும் வாய்மைதான்
தன்ன தொப்புவே றின்மையிற் சங்கரன்
இன்ன தன்மையை யேது வெடுத்துக்காட்
டன்ன வாற்றா லளப்பில னென்றதாம்.
835
(இ-ள்) மன்னும் "ஏதுக்களால்" எனும் வாய்மைதான் - நிலைபெற்ற "ஏதுக்களாலும் எடுத்தமொழி யாலுமிக்குச் சோதிக்க வேண்டா" என்று அருளிய உண்மையாவது; தன்னது ஒப்புவேறு இன்மையின் - தனக்கு உதாரணமாக் காட்டக்கூடிய பொருள் வேறொன்று மில்லாமையால்; சங்கரன் இன்ன தன்மையை - சங்கரன் தனது முன்கூறிய வண்ணமு மாண்பும் உடைய தன்மையினை; ஏது எடுத்துக்காட்டு.....அளப்பிலன் என்றதாம் - ஏதுக்களினாலும் நிறுத்தும் உதாரணங்களாலும் அவை போன்ற பிற அளவைகளாலும் அளக்கப்படாதவன் என்றருளியபடியாம்.
(வி-ரை) ஏதுக்களால் - எனும் - "ஏதுக்களாலு மெடுத்த மொழியாலுமிக்குச் சோதிக்க வேண்டா" என்ற பகுதி; வாய்மை - அதனாற் குறிக்கப்படும் உண்மை. வாய்மை - என்றதாம் - என்று கூட்டுக.
தன்னது ஒப்பு வேறின்மையில் - தன்னது - தனக்கு. அது . ஆறனுருபு நான்கனுருபின் பொருளில் வந்த உருபுமயக்கம்; ஒப்பு இன்மையின் - இன் - ஏதுப்பொருளில் வந்தது. "தனக்குவமை இல்லாதான்"(குறள்); "ஓருவமனில்லி"(தேவா); "பெருமைக்கு நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றி, னருமைக்கு மொப்பின்மை யான்" (திருவருட்பயன்) என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.
இன்மையின் - அளப்பிலன் - என்று கூட்டுக.
சங்கரன் இன்ன தன்மையை - அளப்பிலன் என்க. சங்கரன் -
இன்பஞ் செய்பவன். "இன்பஞ் செய்தலிற் சங்கர னெம்பிரான், இன்ப மாக்கலிற் சம்பு"(காஞ்சிப் புரா); "ஆட்பா லவர்க்கருளும் வண்ணமும் - மாண்பும்" உயிர்களுக்கு இன்பஞ் செய்தற் பொருட்டேயாம் என்று குறிக்க இப்பெயராற் கூறினார்; இக்கருத்தை மேல்வரும் பாட்டிற் றொடர்ந்து கூறி விரித்தல் காண்க. இன்ன தன்மை - வண்ணமும் மாண்பும்; பண்பு ஒன்றாகலின் ஒருமையாற் கூறினார். முன்னரும் "இன்ன கேட்க" என்றது காண்க.
தன்மையை - தன்மையைப்பற்றி.
ஏது - எடுத்துக்காட்டு - அன்ன ஆற்றல் - எடுத்துக்காட்டு -
கருதலளவையால் அறிதற்குரிய ஐந்து அங்கங்களுள் இவை இன்றியமையாதன; இவை கூறப்படவே ஏனையவும் அடங்கும். எடுத்துக்காட்டு - உதாரணம்; பதிகத்தினுள் "எடுத்த மொழி" என்பதுமிது; உதாரணம் கூறுதற்கு ஒப்பாம் பொருள் வேறின்மையால் திருட்டாந்தம் என்ற அங்கம் குறைவுபடும்; படவே அவ்வளவையால் அளப்பு இலன் என்றபடி.
அன்ன ஆற்றால் - கருதலளவையின் பாற்பட்ட வகைகளெல்லாமும் கொள்க. சிவஞானசித்தியார் - அளவை - என்ற பகுதியில் இவை விரிக்கப்பட்டன. தருக்க நூலினுள்ளும் காண்க; உரையளவையான் அறிதல்பற்றிப் பதிகத்தின் ஏழாவது திருப்பாட்டினுள்ளும் அதன் விரிவுரையாகிய 2738-ம் பாட்டினும் கூறுதல் காண்க. காட்சியளவையா லளப்பின்மை பற்றி இரண்டாவது பாசுரத்தினும் அதன் விரியாகிய 2724 - 2726 பாட்டுக்களினும் கூறியமை காண்க.
அளப்பிலன் - அளப்பு - அளவுபடும் தன்மை. இது "மிக்குச் சோதிக்க வேண்டா" என்ற பதிகப் பகுதியிற் கூறியருளிய ஆணையாகிய முடிபுக்குக் காரணங்காட்டிய வகையாற் பொருள் விரித்தவாறு.