தோன்று காட்சி "சுடர்விட் டுள" னென்ப தான்ற வங்கிப் புறத்தொளி யாயன்பில் ஊன்ற வுள்ளெழுஞ் சோதியாய் நின்றனன்; என்று காண்பார்க் கிதுபொரு ளென்றதாம். | 836 | (இ-ள்) தோன்று...என்பது - "தோன்று காட்சி சுடர்விட்டுளன்" என்பதன் பொருளாவது; ஆன்ற வங்கிப் புறத்தொளியாய் - அமைந்த அக்கினியிற் புறவொளியாய்க் காணப்பட்டு; அன்பில்....நின்றனன் - அன்பின் உறைப்பினாலே அதனுள் அழுந்திக் காண உள்ளே எழுகின்ற சோதியாய் நின்றனன்; என்று...என்றதாம் - அவன் ஒளிவழியே பொருந்திநின்று காண்பவர்களுக்கு இதுவே பொருள் என்று கூறியருளியபடியாம். (வி-ரை) தோன்று காட்சி - காட்சியிற் றோன்றும் என்க. "அரிய காட்சியர்"(2724) என்றும், "மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென"(2729) என்றும் கூறியவாற்றாற் காட்சியில் பேரொளியாய்த் தோன்றுதல் பெறப்பட்டமையால் ஈண்டுச் "சுடர்விட்டுளன் எங்கள் சோதி" என்ற பதிகப்பகுதியில் அச்சோதியின் தன்மையும் அது காட்சியிற் றோன்றுமாறும் கூறப்பட்டன; ஆதலின் கூறியது கூறலன்மை கண்டு கொள்க. சுடர் விட்டு உளன் - விடுதல் - தன்உள் அடங்கிவிடாது வெளியில் விரிந்து தோன்றுதல். என்பது - என்பதனுட்பட்ட பொருளாவது. ஆன்ற அங்கிப் புறத்தொளியாய் - அன்பில் ஊன்ற உள்ளெழுஞ் சோதியாய் - புறத்தொளியாயும் உள்எழும் சோதியாயும் என உம்மை விரிக்க; அங்கிப் புறத்தொளியாய் - அங்கியின் கண்ணேபற்றி அதனை ஒளிதரச் செய்யும் ஒளிப்பொருளாய்; அங்கி - அக்கினி; நெருப்பு; ஐம்பூதங்களுள் ஒன்றாகவைத்து எண்ணப்படுவது. அங்கி என்றதனுள் சூரியனையும் சந்திரனையும் ஏனைப் புறவொளிப் பொருள்கள் எல்லாவற்றையும் அடக்கிக் கொள்க. என்னை? புறஒளி யெல்லாம் தீயின் கூறாவனவாதலின் அங்கியின் ஒளித்தன்மை பெற்ற அங்கிப் புறத்தொளிகள் எல்லாம் கொள்ளப்படுமென்க; புறவிருளும் அகவிருளும் என இருள் உலகில் இரண்டாதற்கேற்ப அவற்றைப் போக்கும் ஒளிகளும் இரண்டாவன; "இவ்வுலகத்து முன்னாட் டங்கிரு ளிரண்டன்" (பாயிரம்); "ஒருபொருளுங் காட்டா திருளுருவங், காட்டும், இருபொருளுங் காட்டா திது" என்பன காண்க. ஆனால் இவ்வொளிகள் தொகையால் இரண்டாயினும் வகையால் ஒன்றே என்பார் "அங்கிப் புறத்தொளியாய் - உள்ளெழுஞ் சோதியாய்" என்றார்; அங்கிப் புறத்தொளியாய் நின்றவன் இறைவனே என்பது "நீறாகி நீறுமிழு நெருப்பு மாகி"; "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி" என்பனவாதி திருவாக்குக்களால் அறியப்படும்; ஆனால் அவ்வாறு புறத்தொளியாய் நிற்குநிலையில் கண்டிதமாய், ஏகதேச விளக்கமுடையதாய், மிகுதல் குறைத லுடையதாய், ஒன்றனைப் பற்றி விளங்குவதாய்க் கண்ணாகிய புறஇந்திரியத்தாற் காணப்படுவதாய் உள்ளதாம்; அவ்வொளியின் வெளித் தோற்றத்தினுள் அதனை ஒளிதரச் செய்யும் முதல்வன் மறைந்து அடங்கி நின்பன். மற்றை உள்ளொளியோ எனில் கண்ணாற் காணப்படாது எண்ணெய்-விறகு முதலிய பற்றுக்கோடு வேண்டாது அன்பினில் மனத்துள் ஊன்றிக் காணக் காண்பது; புறவொளிபோல வேறு ஒன்றினைப் பற்றாது தானே ஒளி தருவது; ஒன்றினுள் அடங்கிவிடாது தானே மேலே எழுவது; குறைவுபடாதது; அந்திலையிற் புறத்துக் காணாது இஃது உள் எழுவது என்றிவ்வாறு ஒற்றுமையும் வேற்றுமையும் உடன்காட்டுவார். அங்கிப் புறத்தொளியாய் என்றும், அன்பினில் ஊன்ற உள்ளெழுஞ் சோதியாய் என்றும் அடைமொழிகளால் விளக்கிக் கூறினார். நின்றனன் - முன் கூறியவாறு வெளிப்படும் நிலையின் வேறுபாடுகளே யன்றிப் பொருள்நிலைமையில் ஒன்றும் மாறுபாடின்று என்பதாம். ஆன்ற அங்கி - ஒன்றினைப் பற்றிப் பொருந்திநின்றே வெளிப்படும் தீ; ஆன்ற - பொருந்திய. ஏன்று காண்பார்க்கு - இவ்வாறு பகுத்து உணர்ந்து அறியப்பெறுவார்களுக்கு; ஏன்று காண்பார்க் கிதுபொருள் என்றமையால் அவ்வாறு காணாத ஏனையோர்க்கு இப்பொருள் காண இயலாதென்பதும் பெறப்படும். ஏன்று காண்பார் - ஏலுதல் - பொருந்துதல்; திருவருன் வயப்படுதல் என்க.
இது பொருள் - இது பொருளாம்; பொருள் - பெயர்ப் பயனிலை. அன்பில் ஊன்ற - எழும் - அன்பு நிலைக்களமாக அழுந்தியறிய வெளிப்படும். "உறவு கோனட் டுணர்வு கயிற்றினால், முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே"(தேவா) என்ற நிலை. முன் கருதலளவையான் அளப்பிலன் ஆயினும் இவ்வாறு காண்பார்க்குக் காட்சியளவைக்குள் நின்று தோன்றுவன் என்றவாறு; "மறையினா லயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றுங் குறைவிலா வளவினாலுங் கூறொணா தாகி நின்ற, இறைவனார் கமல பாதம்"(சித்தியார் - பாயிரம் - 5) என்ற அருணந்தி சிவாசாரியார், " அருளினா லாக மத்தே யறியலா மளவினாலுந் தெருளலாஞ் சிவனை ஞானச் செய்தியாற் சிந்தை யுள்ளே, மருளெலா நீங்கக் கண்டு வாழலாம்" என்றருளிய கருத்தும் இது; "முகத்துக் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள், அகத்துக் கண்கொண்டு பார்ப்பதே யானந்தம்"(திருமந்திரம்); "கழல் மனத்துக், கொண்ட கருத்தி னக நோக்குங் குறிப்பே யன்றிப் புறநோக்குங், கண்ட வுணர்வு துறந்தார் போல்"(தண்டியடிகள் புராணம் - 1) முதலிய திருவாக்குக்களின் கருத்தும், "அலகில் சோதியன்" என்று முதல் பாட்டில் விளக்கமாய்க் காட்டியருளிய கருத்தும் காண்க. உள் எழும் சோதி - அகத்துட் டோன்றும் அளவில்லாது ஓங்கும் சிவ(ஞான)ஒளி; "எங்கள் சோதி" என்பது பதிகம். |
|
|