பாடல் எண் :2736
ஈண்டு "சாதுக்க" ளென்றெடுத் தோதிற்று
வேண்டும் வேட்கைய வெல்லாம் விமலர்தாள்
பூண்ட வன்பினிற் போற்றுவீர்! "சார்மி"னென்
றாண்ட சண்பை யரச ரருளினார்.
838
(இ-ள்) ஈண்டு...ஓதிற்று - இங்குச் "சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே" என்று ஓதியருளியதனால்; வேண்டும்....போற்றுவீர்....விரும்புகின்ற வேட்கைகளாகிய எல்லாம் இயல்பாகவே பாசங்களினீங்கிய இறைவரது திருவடிகளையே மேற்கொண்ட அன்பினாலே போற்றுகின்றவர்களே; சார்மின் - வந்து சாருங்கள் என்று சண்பைத் தலைவராகிய பிள்ளையார் அருளிச்செய்தனர்."மன்னும்" என்பது முதல் இந்நான்கு திருப் பாட்டுக்களானும் "ஏதுக்களாலும்" எனற ஐந்தாம் திருப்பாட்டின் விரிவுரை நான்கு பகுதிகளாக வைத்து விரித்தருளியவாறு.
(வி-ரை) "சாதுக்கள்" என்றெடுத்து ஓதிற்று - "சாதுக்கள் மிக்கீரிறையே வந்து சார்மின்களே" என்றோதிய பதிகப் பகுதியின் பொருளாவது என்க.
வேண்டும்.....போற்றுவீர் - சாதுக்களின் தன்மையும் சொற்பொருளும் கூறியது; தம்மை முழுதும் இறைவர்பாலிற் சார்த்தித் தமக்கென வொருசெயலு மில்லாதவர்.
வேண்டும் வேட்கைய எல்லாம் - பெறவேண்டிய விருப்பங்கள் சென்று உள்ள பொருள்கள் எவையும்.
பூண்ட அன்பினில் விமலர்தாள் போற்றுவீர் - என்க. பொருந்திய அன்பினுடன் இறைவர் திருவடிகளைப் போற்றுதலேயாம் என்று கொண்டு வாழ்வீர்காள். "வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ, வேண்டு மயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய், வேண்டி நீயா தருள்செய்தாய் யானு மதுவே வேண்டினல்லால், வேண்டும் பரிசொன் றுண்டென்னி லதுவு முன்றன் விருப்பன்றே', (திருவா); "இன்றோ ரிடையூ றெனக்குண்டோ வெண்டோண் முக்க ணெம்மானே, நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ விதற்கு நாயகமே"(திருவாசகம்); "கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்....ஓடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார், கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்"(143) என்பனவாதி திருவாக்குக்களில் இக்கருத்து விளக்கப்பெறுதல் காண்க; இனி, இவ்வாறன்றி " இதுவோ வெமையாளு மாறீவ தொன்றெமக் கில்லையேல் அதுவே வுனதின்னருள்" (பிள். தேவா - திருவாவடுதுறை); "பேச்சில ரொன்றைத் தரகிலராகி லிவரலா தில்லையோ பிரானார்" (நம்பி. தேவா - திருப்பாச்சில்) என்றவாறு வேண்டுமவற்றை யெல்லாம் இறைவர்தாள் போற்றியே பெறுவர் என்றுரைப்பினு மமையும்.
சார்மின் - சாதுக்களாகிய மிக்கீர்! [பெரியோர்களே!] விரைந்து சாருங்கள் இறையே - விரைவில்.
இந்நான்கு பாட்டுக்களின் தொகைப்பொருளாவது, முன் "ஆட்பாலவர்க்கு" என்ற பாட்டில் ஆட்பாலவர்க்கு இறைவர் அருளும் திறங்களும் அம்முதல்வனது மாட்சிமையும் தற்போதத்துக்கொண்டு ஒருவர் கேட்க மற்றொருவர் சொல்ல அளவு படாது. மலங்கள் சாராது இறைவர்தாளின் அடங்கிநின்று இவற்றைக் கேட்க என்றார்; இப்பாட்டினால் அவ்வாறு இறைவர்தாளின் அடங்கிக் கேட்டு உணர்வதெவ்வாறென விளங்க அருளியவாறு. முதல்வனை ஏது - உதாரணங்களால் சோதிக்க வேண்டா. அவன் புறத்தொளியாய் நின்று புறப்பொருள்களை விளக்கியும், அன்பில் ஊன்றியவழி அகத்துஉள்ளே எழும் சோதியாய் நின்று விளக்கியும், எஞ்ஞான்றும் உதவுகின்றான்; அந்த அகத்துச் சோதியைக் குரு போதித்தபடி ஞானக்கண்ணாலே கண்டு இடையறாது பொருந்தி அவனேதானாக ஏகனாகிப் பணிசெய்து வாழ்ந்தால் பிறவிநெறி விலகி, எல்லாம் அவன் சார்பேயாகும்; அப்போது "அவனே தானே யாகிய அந்நெறி, யேக னாகி யிறைபணி நிற்க, மலமாயை தன்னொடு வல்வினை யின்றே" (போதம் - 10) என்று ஞானநூலுள் உரைத்த நிலைபெற்றுப் பிறவிநெறி நீங்கிச் சிவநெறி வாழ்வு தலைப்பட்டு நிகழும் என்பதாம்.
இவ்வாறு அவர்தாளி னடங்கி அவனருளா லல்லது ஒன்றையுஞ் செய்யானாகவே அஞ்ஞான கன்மங்கள் பிரவேசியா; அப்போது அம்முதல்வனே இவனுள் நின்று எல்லாம் கண்டும்காட்டியும் செலுத்துவானாதலின் இவன் அவனது சீபாதங்களை யணைந்து நிலைபெறும் என்ற சிவஞானபோத (11 - சூத்) உண்மையும் ஈண்டுப் போதருதல் காண்க. எனவே போதம் 8-9 சூத்திரங்களில் விரித்த சாதனமும், 10 - 11 விரித்த பயனும் இத்திருப்பாட்டால் உபதேசிக்கப்பட்ட திறங் கண்டு கொள்க.