"ஆடும்" மெனவாந் திருப்பாட்டி னமைத்த மூன்றும் நீடும் புகழோ? பிறர்துன்ப நீக்குதற்கோ? வென்று தேடும் முணர்வீ ருவகுக்கிவை செய்த தீசர் கூடுங் கருணைத்திற மென்றனர் கொள்கை மேலோர். | 839 | (இ-ள்) ஆடும்....மூன்றும் - "ஆடும் எனவும், அருங்கூற்ற முதைத்து வேதம் பாடும் எனவும்" என்று பதிகப் பகுதி குறித்த பொருள்களாகிய ஆடும் என்றதும், அருங்கூற்றம் உதைத்து என்றதும், வேதம் பாடும் என்றதும் ஆகிய மூன்றும்; நீடும் புகழோ...உணர்வீர் - புகழுக்காகவோ? அன்றி உயிர்களுடைய துன்பம் நீக்குதற்கோ என்று ஆராயும் உணர்வுடையீர்களே!; உலகுக்கு....மேலோர் - இவைகளை ஈசர் செய்தது உலகின்மேல் வைத்த பெருங் கருணையின் திறம் என்று கொள்கை யான்மேம்பாடு செய்வாராகிய பிள்ளையார் அருளிச் செய்தனர். (வி-ரை) "ஆடும்" எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும் - ஆடும் எனவாம் - ஆடும் என்று தொடங்கும்; முதற் குறிப்பு. அமைத்த மூன்றும் - ஆடும் எனவும், கூற்றம் உதைத்து எனவும், வேதம் பாடும் எனவும் கூறியருளிய மூன்று பொருள்களும்; "உதைத்து வேதம் பாடும்" என்பது உதைத்துப் பாடும் என ஒருபொருள் பற்றி உரைக்க நின்ற வினையெச்ச முடிபாயவும் காணப்படுதலின், அஃது அவ்வாறு பொரள் கொள்ளப்படாது உதைத்து எனவும், பாடும் எனவும் இரண்டாகப் பிரித்துப் பொருள்கொள்ளுதல் வேண்டுமென்று காட்டுவார் மூன்றும் எனச் செவ்வெண்டொகை விரித்து ஓதினார். புகழோ? பிறர் துன்ப நீக்குதற்கோ? என்று தேடும் உணர்வீர் - "புகழல்லது பாவம் நீங்கக் கேடும் பிறப்பும் அறுக்கும் எனக் கேட்டீராகில்" என்ற பதிகப் பகுதியின் பொருள் விரித்தபடி; புகழ் - புகழோ?; அறுக்கும் - அறுக்கும் வகையோ? என்று இரண்டிடத்தும் ஐயவினா ஓகாரம் தொக்கது; புகழ் - தன்பொருட்டாற் செய்வது; பாவம் நீங்கக் கேடும் பிறப்பும் அறுக்கும் வகையோ? என்றது பிற உயிர்களின்பொருட்டுச் செய்வது; கேடு - இறப்பு; கேடும் பிறப்பும் - பிறவித் துன்பம். தேடும் - ஆராயும்; உணர்வீர் - பிறவிக்கஞ்சி வீடுபேறு காதலித்து ஆராயும் உணர்ச்சியுடையோர்களே!; விளிவேற்றுமை என்ற பெயர். இவை ஈசர் உலகுக்குச் செய்தது - என்க. உலகுக்கு - நான்கனுருபு கொடைப் பொருளில் வந்தது. செய்தது - செய்த காரணம்; கூடும் கருணைத் திறம் - கூடும் - முன் இயைபாகிய வேறு காரணமின்றித் தன்னியல்பிற் பொருந்திய; பேரருளுடைமை. திறம் - தன்மை; பெருமை என்றலுமாம். வினைத்திறம் பற்றிக் கூடும் என்றலுமாம். கூடுங் கருணைத் திறம் - இக்கருத்தினைச் "சொன்னவித் தொழில்க ளென்ன காரணந் தோற்ற வென்னின், முன்னவன் விளையாட் டென்று மொழிதலு மாமுயிர்க்கு, மன்னிய புத்தி முத்தி வழங்கவு மருளான் முன்னே, துன்னிய மலங்க ளெல்லாந் துடைப்பதும் சொல்ல லாகும்"(1 - 36) என்று சித்தியாரிலும், "ஏற்றவிவை யரனருளின் திருவிளையாட் டாக வியம்புவர்க, ளணுக்களிடர்க் கடனின்று மெடுத்தே, யூற்றமிக வருள்புரித லேதுவாக வுரைசெய்வ தொடுக்கமிளைப் பொழித்தன்மற்றைத், தோற்றமல பாகம்வரக் காத்தல் போகந் துய்ப்பித்த றிரோதாயி நிறுத்தலாகும், போற்றவரு மருளருளே யன்றி மற்றுப் புகன்றவையும் மருளொழியப் புகலொணாதே"(1-18) என்று சிவப்பிரகாசத்தினும் இக்கருத்தை விளக்கியவாறு காண்க. மூன்றும் - கூடும் கருணைத்திறம் ஆமாறு என்னை? எனிற் கூறுதும்: (1) ஆடும் எனவும் - ஆடுதல் ஐந்தொழிற் கூத்து. ஐந்தொழில் செய்தல் முதல்வனுக்கு இலக்கணம். "ஐந்தொழிலாவன தோற்றம் நிலை இறுதி மறைப்பு அருள் என்பன. இவ்வைந்தொழிலும் தூலம் சூக்குமம் அதிசூக்குமம் என்று மூவகைப்படும். அவற்றுள் தூலமாகிய தோற்றமும் இறுதியும் பிரபஞ்சத்தின் தோற்றமும் ஒடுக்கமும் என்பது வெளிப்படை. நிலை - தோன்றிய பிரபஞ்சம் ஒடுக்கம் வருங்காறும் நிலைபெறுதல். மறைப்பு - அருள் என்பன "பந்தமும் வீடும்" என்ற உணர்க. தோன்றிய பொருள் சங்கரிக்ப்படும் வரை தானே நிலைபெறும்; ஆதலின் நிலைத்தொழில் முதல்வன் காரியமென்றதென்னை? எனின், காலத்து ஒருங்கு தோன்றிய பொருள் இரண்டனுள்ஒன்று நெடுங்காலம் நிற்றலும் ஒன்று சிறிதுகால நிற்றலுமாகிய நிலை வேறுபாடுள்ளமையின் இந்நிலை வேறுபாடு இதற்கேதுவாகிய வினை வேறுபாட்டானாயிற்று.....அவ்விருவேறு வினையும் முதல்வனாணையானன்றி வாராமையான் நிலைத் தொழிலும் முதல்வனாற் செய்யப்படும் காரியமாதல் அறிக. இன்னும், தண்ணீர்க்குடம் நிலைபெறுதல் தாங்கிச் செல்வோனது முயற்சியின்றி அமையாதவாறுபோலத் தோன்றிய பிரபஞ்சம் ஒடங்குங்காறும் நிலைபெறச் செய்வதும் ஆகிய முதல்வனது ஆணையாகிய சங்கற்பமேயாம். மறைப்பாவது, குடங்கையில் ஏந்திய தீயின் சூட்டினை நிகழவொட்டாது தனக்கு மாறாகிய மந்திரமுச்சரிக்குங்காறுந் தடுத்து நிற்குங் குளிகைபோல, முதல்வனைச் சிறப்பியல்பான் உணரும் மெய்யுணர்வு தோன்றுங்காறும் அவனது பெருங்கருணை உயிர்கள் மாட்டு ஒருங்கே நிழாதவண்ணம் தடுத்து நிற்கும் அவ்வம் மலசத்தியின் வழி நின்று அவற்றை நடாத்துவதாகிய அவனது சங்கற்பமேயாம். "பந்தமுமாய் வீடுமாயினாருக்கு" என்புழிப் பந்தம் என்றதும் அது. இனிச் சூக்கும ஐந்தொழிலாவன, சங்கரித்த பின்னர் மேற்செய்யக்கடவனவாகிய தூல ஐந்தொழிற்கு யோக்கியமாம்படி கேவலத்தின்கண் நிகழ்த்துவனவாம். அதிசூக்கும மாகிய தோற்ற முதலியன ஐந்தும் அவ்வவ் விடய நுகர்ச்சிதோறும் கணந்தோறு நிகழ்தல் கண்டு கொள்க" (மாபாடியம் - 2 - சூ - 1-அ). "ஊன நடன மொருபா லொருபால ஞானநடந் தானடுவே நாடு" (திருவருட்பயன்) என்றருளிய திருநடனமிரண்டனுள் இங்குக் கூறியது ஒன்று. "மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத், தானந்த மாநடத்தே தங்கியிடு - மானந்தம், மொண்டருந்தி நின்றாடல் காணுமருண் மூர்த்தியாக், கொண்டதிரு வம்பலத்தான் கூத்து" (உண்மை விளக்கம் - 37); "எங்குந் திருநட்டம்"; "சிற்பரஞ் சோதிச் சிவானந்தக் கூத்தனைச், சொற்பதமா மந்தச் சுந்தரக் கூத்தனைப், பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை, யற்புதக் கூத்தனை யாரறி வாறே" (திருமூலர் திருமந்திரம் - 9 தந் - திருக்கூத்துத் தரிசனம்); "அவர்முன் றம்மைக் கண்டவா றெதிரே நின்று காட்சிதந் தருளி" (489); "நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே" (பிள். தேவா - ஆலவாய் - கௌசிகம் - 6) என்பனவாதி திருவாக்குக்களான் அறியப்படுகின்றபடி ஞானிகளுக்கு அருண்ஞானக் கண்ணாலே கண்டு திளைக்கும்படி கொடுத்து நிற்கும் ஞானநடனமாகிய அருட்கூத்து மற்றொரு வகையாம். "காத்தும் படைத்தும் கரத்தும் விளையாடி" எனவும், "ஐயா நீ யாட்கொண்டருளும் விளையாட்டி, னுய்வார்க ளுய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்" எனவும் வரும் திருவாசகத் திருவாக்குக்கள் இப்பாசுரக் கருத்தை விளக்கி நிற்றலும் காண்க. இனி (2) அருங்கூற்றம் உதைத்து என்ற செயலும் உயிர்களின்மேல் வைத்த அருளால் ஆயது. மார்க்கண்டர்க்காகக் கூற்றுவனை உதைத்து உருட்டிப் பின் உயிரும் கொடுத்த சரிதம் எல்லாப் புராணங்களாலும் விளக்கமா யறியப்படுவதாம். "மார்க்கண்டர்க் காக மறலிபட்ட பாட்டையுன்னிப், பார்க்கிலன்பர்க் கென்ன பயங்காண் பராபரமே" (தாயுமானார்); கால பாராயணக் குறுந்தொகையுள் அரசுகள் இயமன் றூதுவரைத் "தமர் நிற்கிலுஞ், சுருக்கெனா தங்குப் பேர்மின்கண் மற்றுநீர், சுருக்கெனிற்சுட ரான்கழல் சூடுமே" என ஆணையிட்டமையும் காண்க. இனி (3) வேதம் பாடும் எனவும் - வேதாகமங்களை இறைவர் புனருற்பவமாகிய சிருட்டியில் அருளிச்செய்து உலகுயிர்கள் அறிந்து அவ்வழியொழுகி உய்யும் பொருட்டுப் பாடுகின்றார் என்பது ஆன்றோர் நூற்றுணிபு. "வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" (அரசு. தேவா); "வேத முகந்திசை தோண்மிகு பன்மொழி கீதம்" (பொன் - அந் - 19); "ஓவா வோசை முழுதுநின் வாய்மொழி" (திருஒற்றியூர் ஒருபாவொருபஃது - 2); "ஒப்பிலா மணிவாய் வேதம், பல்லிடை யெழுத்து நாவிற் பரமவா கமத்தின் பேதம், நல்லிதழ் மனுவின் விஞ்சை" (கந்தபுராணம் - சூரன் வதை - 426). உலகக் கிவைசெய்த தீசர் கூடுங் கருணைத்திறம் - உலகம் கண்டு சிந்தித்து உணர்ந்து உய்யும் பொருட்டு ஐந்தொழிற் கூத்து ஆடுதலானும், மார்க்கண்டர்க்காகக் கூற்றனை உதைத்தது அவர்பொருட்டேயன்றி உலகோர் அதன் உண்மை உணர்ந்து தம்மை வந்தடைந்து சாவாமையும் பிறவாமையும் பெற்றுய்தற் பொருட்டாதலானும், வேதம் பாடுதல் உலகோர் விதிவிலக்குகளை அறிந்தொழுகவும் சிவநெறி நின்று உய்யவும் ஆதலானும் இவை உலகுக்குச் செய்தது கருணைத் திறம் என்றார். பெருங்கருணைத் திறமாவது - "முதல்வ னாவான் முற்றுணர் வுடைமையின் உலகத்துயிர்கள் படுந் துன்பமுழுவதும் உணர்ந்தோனாயும்; பேராற்றலுடைமையான், உயிர்களை யெல்லாம் ஒருங்கே வீடு பேறடைவிக்க வல்லனாயும்; சிவன் சங்கரன் முதலிய பெயர்களானு மறியப்படுவதாய், விருப்பு - வெறுப்பின்றி, எல்லாவுயிர்கண்மாட்டும் ஒப்பநிகழ்வதாய்த், தொடர்புபற்றாது, பிறர்துன்பங் கண்டுழி அதனை அக்கணமே நீக்குதற்கு விளையும் மனவெழுச்சியாகிய பெருங்கருணை யுடைமையான், அவற்றை ஒருங்கே வீடு பேறடைவித்தற்கண் ஒருப்பாடு மிக்குடையனாயும் உள்ளான் என முதல்வன திலக்கணம் பேசப்படும். அங்ஙனமாகவும் உயிர்கள் யாவும் ஒருங்கே வீடுபேறடையாமற் றடுத்து நிற்பன உயிர்க் குற்றமாகிய மலசத்திகள் ஆதலின் உயிர்கள் முதல்வனைச் சிறப்பியல்பான் உணரும் மெய்யுணர்வு தோன்றுங்காறும் முதல்வன் தனது சங்கற்பத்தான் அவ்வம் மலசத்தியின் வழிநின்று அவற்றை நடாத்துதலும் மறைப்பு எனப்படும் அவனது கருணைத்திறமாதல் காண்க. |
|
|