கருதுங் "கடிசேர்ந்த" வெனுந்திருப் பாட்டி லீசர் மருவும் பெரும்பூசை மறுத்தவர்க் கோறன் முத்தி தருதன்மைய தாதல் சண்டீசர்தஞ் செய்கை தக்கோர் பெரிதுஞ் சொலக் கேட்டன மென்றனர் பிள்ளை யார்தாம். | 840 | இ-ள்)கருதும்.....பாட்டில் - கருதுகின்ற "கடிசேர்ந்த" என்று தொடங்கும் திருப்பாசுரத்தின் ஏழாந் திருப்பாட்டில்; ஈசர்....தன்மையதாதல் - சிவபெருமான் விரும்பி ஏற்று வீற்றிருந்தருளும் பெரும்பூசையினைச் சிதைவு செய்தவர்களைக் கொல்லுதல், துற்செயலாவதன்றி முத்திதரும் தன்மையுடைய நல்ல செயலாதலை; சண்டீசர் தம்....சொலக்கேட்டனம் - சண்டீசர் தமது சரிதத்தினால் தக்கவர்களாகிய பெரியோர் சொல்லக் கேட்டோம்; என்றனர் பிள்ளையார்தாம் - என்று பிள்ளையார் தாம் அருளிச் செய்தனர். (வி-ரை) கருதும் "கடிசேர்ந்த" எனுந் திருப்பாட்டில் - "கடிசேர்ந்த" என்று தொடங்கும் திருப்பாசுரம் ஏழாவது திருப்பாட்டின் கருத்தினை இப்பாட்டால் உரைக்கின்றவாறு. ஈசர்...முத்திதரு தன்மையதாதல் - முதல்வரது பூசையினைத் தடுத்து இடையுறு விளைத்தாரைக் கொல்லுதல் மாபாதகங்க ளைந்தனுள் முதன்மைபெற்ற கொலைப் பாவமாகாது; பாவப் பயனாகிய நரகமும் கொடாது; ஆனால் அது பசுபுண்ணியங்களினும் மேலாகிய சிவபுண்ணியமேயாகி, அதன் பயனாகிய முத்திதரும் தன்மையுடையதாகும் நிலை; ஆதல் - ஆதலை - ஆகும் நிலையினை என்று இரண்டனுருபு விரிக்க; ஆதல் - கேட்டனம் என்று கூட்டுக; கோறல் - கொல்லுதல்; கொல் என்ற பகுதி முதனீண்டு, தல் - தொழிற்பெயர் விகுதிபெற்ற பெயர். சண்டீசர்தம் செய்கை - செய்கை - செய்கையினால்; செய்கை காரணமாகக் காட்ட. தக்கோர் பெரிதும் சொல - தக்கோர் - உண்மை அறிந்து சொல்லும் தகுதியுடையோர். தகுதியாவது திருவருள் அறிவிக்க அறிந்து கூறும் பக்குவமுடைமை; அறிவார் - என்பது பதிகம். பெரிதும் சொல்லுதலாவது விளக்கமாக எடுத்துக்காட்டுதல். சண்டீசர் சரிதம் பதிகப் பாட்டினில் எடுத்துக்காட்டியது காண்க. பதி புண்ணியங்களுக்கும் பசுபுண்ணியங்களுக்கும் வேறுபாடு காட்டப்பட்டது. இனிப் பதிபுண்ணியங்களும் சிவநல்வினை - தீவினை இருவகைப்படும். இவற்றி னியல்பெல்லாம் மாபாடியத்துள் (8-1) இருவினை ஒப்பு என்பதனைக் கூறுமிடத்து விரிக்கப்பட்டன. ஆண்டுக் கண்டுகொள்க. தக்கோர் சொலக் கேட்டனம் - பிள்ளையார் காலத்துக்கு முன்பு வாழ்ந்த அறிவார் சொல்லியதனைத் திருமூலர் - மணிவாசகப் பெருமானார் - நக்கீரர் முதலியோர் திருவாக்குக்களால் அறிக; பிள்ளையாருடன் ஒருகாலத்து வாழ்ந்த அரசுகள் தேவாரமும் காண்க; இனி அவற்றை ஒட்டிப் பின்வந்த நம்பிகள் தேவாரத்தினும் திருவிசைப்பாத் திருப்பல்லாண்டினும், பதினொராந் திருமுறையினும் அவ்வாறே போற்றப்படுதல் காண்க. ஞானசாத்திரங்களாகிய திருக்களிற்றுப்படியார் (19) சிவஞானசித்தியார் (2 - சூ) முதலியவற்றுள்ளும் இவ்வுண்மை போற்றப்படுதல் காண்க. திருமுறைகளுள் கண்டவை சண்டீச நாயனார் புராணத்திறுதியில் தொகுக்கப்பட்டன. ஆண்டுக் கண்டு கொள்க. கோறல் முத்தி தரும் தன்மையதாதல் - கொலைப்பாதகச் செயல் எவ்வாற்றால் முத்திதரும் எனில் அன்பு காரணமாமென்க. இதன் இயல்பு சண்டீசர் புராணத்தினுள் 1264-ன் கீழ் " அன்பு தந்த வடியார் செய்தனவே தவமாம்" என்றவிடத்து உரைக்கப்பட்டது; ஆண்டுக் கண்டுகொள்க. "பாதகமே சோறு பற்றினவா"(திருவா); "பாதகத்துக்குப் பரிசு வைத்தான்"(பல்லா); "பாதக மென்றும் பழியென்றும் பாராதே, தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் - சேதிப்பக், கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே, தண்டீசர் தாஞ்செயலாற் றான்"(களிறு - 19). "மண்ணைக் கல்லிற் பிராணிபடும், வருத்த வேண்டா" என்று தந்நலங் கருதி இதோபதேசம் செய்த அமணர்க்குப் "பிரானுக் கானபணி, யாசி லாநல்லறமாவ தறிய வருமோ வுமக்கென்று" தண்டியடிகணாயனார் விடையிறுத்த வரலாறும் இவ்வுண்மையை விளக்குதல் காண்க. இதனால் முன்கூறிய (1899) பயன்கள் மூன்றனுள் இரண்டாவதாகக் கூறப்பட்ட "மிகுசைவத் துறைவிளங்கு"தல் பெறப்பட்டமை காண்க. |
|
|