பாடல் எண் :2739
"வேத முதல்வ" னெனுமெய்த் திருப்பாட் டினினேர்
ஆதி யுலகோ ரிடர்நீங்கிட வேத்த "வாடும்"
பாத முதலாம் பதினெண் புராணங்க ளென்றே
ஓதென் றுரைசெய்தனர் யாவு மோதா துணர்ந்தார்.
841
(இ-ள்) "வேத முதல்வன்"......திருப்பாட்டினில் - "வேத முதல்வன்" என்று தொடங்கும் உண்மைத் திருப்பாட்டிலே; நேர் - நேர்பட வரும் பொருளாவது: ஆதி....பாதம் முதலாம் - பரம பிரமாணமான வேதத்தால் குறிக்கப்படும் முதற்கடவுள் உலகுயிர்கள் தத்தம் பிறவித்துன்பம் நீங்கவும், அறிந்து ஏத்தவும் திருக்கூத்தாடுகின்ற திருவடிகளையுடைய சிவபெருமானேயாம்; அவரே முதற்கடவுளாவர்; பதினெண் புராணங்கள் - (அவ்வுண்மையைத் தெளிய விளக்குவன) பதினெண்புராணங்களாம்; என்றே ஓது - என்று துணிந்தே அவற்றை ஓதுவாயாக; என்றனர் யாவும் ஓதாதுணர்ந்தார் - என்று கூறியருளினர் எல்லா ஞானங்களையும் ஓதாது உணர்ந்தவராகிய பிள்ளையார். (வி-ரை) வேத முதல்வன்.......நேர் - வேத முதல்வன் என்று தொடங்கும் திருப்பாசுரத்தின் பொருளைக் கூறியபடி. ஆதி - முதல்வன்; உலகோர் இடர் நீங்க ஏத்த ஆடும் பாதம் - முன்"ஆடும் எனவும்" என்ற திருப்பாசுரத்தில் "உலகுக்கிவை செய்தது ஈசர் கூடுங் கருணைத்திறம்"(2737) என நாட்டப்பட்டமையின் அதனையே முடிந்த பொருளாக எடுத்து அனுவதித்துக்கொண்டு ஈண்டு உலகோர் இடர்நீங்கிடவும் ஏத்தவும் ஆடும் என்றருளினார். ஆடும் - என்பது (2737) முன்பாட்டின் குறிப்பு.
உலகோர் - "உலகுக்கு"(2737); இடர் நீங்கிட ஏத்த - துன்ப நீங்கவும் ஏத்தவும் என எண்ணும்மை விரிக்க. முன்பாட்டிற் கூறியவற்றுள் (2737 - பாசுரம் - 6) "அருங்கூற்ற முதைத்த"லால் துன்பநீங்குதலும், "வேதம் பாடுத"லால் ஏத்துதலும் பெறப்பட்டன என்பது குறிப்பு.
பாதம் - "ஆடும் என்பதற்கேற்பப் பாதம் என்றார். பாதம் என்பதுபசாரம்; அருளே திருவடி என்க. பாதம் - பாதத்தையுடைய முதல்வன்.ஆடும் என்பது அருள் கூடும் கருணைத் திறம் - என முன்(2737 - பாசுரம்-6) கூறி முடித்தமையும் காண்க.
ஆதி, உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் பாத முதலாம் என்ற முடிபு வேதங்களுக்கும் மாபுராணங்களுக்கும் ஒக்குமென்பார் நேர் - என்றார். வேதம் பொதுநூலாதலின் எல்லாக் கடவுளரையும் முகமனால் எடுத்தியம்பினும் அவரையெல்லாம் இயக்கும் முழுமுதல்வனாகிய சிவபெருமானைத் திருவுருத்திரத்தினுள் இருதயத்தில் தலைமையாக வைத்துப் போற்றும். அதுபோலவே வேதங்களை உபப்பிருங்கணம் செய்யும் புராணங்கள் பதினெட்டும் தலைமைபற்றிப் பத்துப் புராணங்களுள் சிவனது முதன்மையினைப் போற்றி, ஏனை எட்டனுள் சிவனால் இயக்கப்பட்டுத் தந்தொழில் நடாத்தும் விட்டுணு - பிரமன் - அக்கினி-சியன் இவர்களை முகமனால் தலைவர்களாக எடுத்துக் கூறும். திருப்பாசுரமும் "வேத முதல்வன் முதலாக விளங்கி - உலகத்தவர் ஏத்தல் செய்ய." என்றும், "பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த, சூதன் ஒலி மாலை" என்றும் இக்கருத்தைக் கொண்டதென்ற காட்டுமுகத்தால் ஆசிரியர் வேத முதலாப்.....பாட்டில் நேர் - என்று காட்டியருளினார். புராணங்கள் நேர் - (கூறும்) என்க.
உலகோர்இடர் நீங்கிட ஏத்த - நீங்கிடவும் ஏத்தவும். இடர் நீங்கிட - இடர் நீங்கும் பொருட்டு என்றலுமாம். "ஏதப்படாமை உலகத்தவ ரேத்தல் செய்ய" என்ற திருப்பாசுரப் பகுதியை விளங்கவைத்தவாறு.
என்றே ஓது - ஏகாரம் தேற்றம். ஓது - அவற்றை வெறும் கதைகள் என்று எண்ணிப் புறக்கணிக்காமல் ஓதுவாயாக என்று ஆணை தந்தருளினர் என்க.
புராணங்கள் நேர் என்றே ஓது - சொல்க என்றலுமாம். "கலிக்கோவை" - (பதிகம்) புகழ்மாலை. பதிகம் கலி விருத்தம் - கலி நிலைத்துறையாதலும் குறிப்பு.
ஓதென் றுரைசெய்தனர் - ஓதாதுணர்ந்தார் - முரண் அணி. பிள்ளையார் இறைவர்பால் முன்னைத் தவத்தால் ஞானம் பெற்றனராதலின் இப்பிறப்பில் ஓதாதுணர்ந்தார் என்றவாறு; உணர்ந்தார் - என்ற குறிப்புமிது. யாவும் உணர்ந்தார் என்க. தவ முதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் (1967); "அகில, தேவருக்கு முனிவருக்குந் தெரிவரிய பொருளாகுந், தாவிறனிச் சிவஞான சம்பந்த ராயினார்"(1966); இவ்வாறன்றிப் புராணங்கள் யாவும் நேர் என்று கூட்டியுரைப்பினும் அமையும்.
பதினெண் புராணங்கள் - மச்சம் - கூர்மம் - வராகம் - வாமனம் - சிவமகா புராணம் - இலிங்கம் - பவிடியம் - காந்தம் - மார்க்கண்டேயம் - பிரமாண்டம் என்ற பத்தும் சிவபிரானை நேரே எடுத்துக் கூறுவன; விஷ்ணு புராணம் - பாகவதம் - கருடம் - நாரதீயம் என்ற நான்கும் விட்டுணுவைப்பற்றியும், பிரமம் பதுமம் என்ற இரண்டும் பிரமனைப்பற்றியும், ஆக்கினேயம் அக்கினியேப்பற்றியும், பிரமகைவர்த்தம் சூரியனைப்பற்றியும் கூறுவன. இவை, அரசனாணையின் வழிநின்று மந்திரத் தலைவர் முதலியோர் செய்வனவற்றை அவ்வவர் செய்தனவாகக் கூறுதல் போல, அவர்களை இயக்கும் சிவச்செயலை முகமனால் அவ்வவர்மேற் கூறுவனவாகக் கொள்க.
என்றே ஓதென் றுரைசெய்தனர் - "சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே" என்பது பதிகப் பகுதி. "பண்டைநற் றவத்தாற் றோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும் தொண்டர்"களாகிய சாமுசித்தர்களன்றி "மார்க்கர் கண்டநூலோதி வீடு காதலிப்பவர்"களாகிய ஏனையோர் யாவர்க்கும் வேதங்களின் பொருளுணரப் புராணங்களை யோதுதல் இன்றியமையாததென்றதாம். ஓது - ஓதிக்காதலிப்பவர் (சித்தி - பாயி) என ஞானநூலும் விதித்தல் காண்க.
ஒருவன் நான்கு வேதங்களையும் நன்குணர்ந்தானேனும் புராணத்தை நன்குணரானேல், அவ்வேதங்கள் தமது அர்த்ததங்களைப் பேதிப்பான் என்றஞ்சும் என்பர். அன்றியும் வேதம் 4 - அங்கம் 6 - மீமாம்சை 1 - நியாயம் 1 - புராணங்கள் 1 - தன்மநூல் 1 என்ற பதினான்குடன், ஆயுள் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், சிற்பம் என்ற உபவேதம் நான்கும் கூட்டிப் பதினெட்டு வித்தைகளையும் உலகோர் படிமுறையால் ஓதியுய்யும் பொருட்டுச் சிவபெருமான் அருளிச் செய்து பிரமனைப் படைத்து அவற்றை அவனுக்கு உபதேசித்தருளினார் என்று வரலாறு கேட்கப்படுகின்றது. "அட்டாதச வித்தைகளுக்கும் கர்த்தா சூலபாணி" என்பது காண்க.
திருப்பாசுரத்தினுள் "பூதமுதல்வன் முதலே முதலாக"; "உலகத்தவர் ஏதப்படாமை" என்றும், இப்பாட்டினால் உலகோர் இடர் நீங்கிட என்றும் கூறியவாற்றால் முன் (1899ல்) கூறிய பயன் மூன்றனுள் இறுதிக்கண் நின்ற பயன் பெறுதற்குரியராகிய "பூத பரம்பரை பொலிய" என்ற பயன் பெறப்பட்டமை கண்டு கொள்க.
ஈண்டு வேதம் என்றது வேதாந்தத்தை எனவும், வேதாந்தம் சிவத்தின் இயல்பை நுண்மை வழியில் அறிவுறுத்தும், அதனைப் பருமை நெறியில் அறிவுறுத்துவன புராணங்கள் எனவும், புராணக் கதைகளை உள்ளவாறே கொள்ளாது வேதாந்த முறைப்படி கொள்ளல் வேண்டும் எனவும் விசேட ஆராய்ச்சி உரை கொள்வாருமுண்டு.
இனி, இதன்மேலும், பலர் பலப்பலவாறு புராணங்களைப் பொய் என்றும் புனைந்துரைகள் என்றும் இகழ்ந்து கூறித் தாமும் இடர்ப்பட்டு அபசாரப்படுவதுடன் உலகோரையும் இடர்ப்படுத்தி யொழிவர். தன்மைநிலையானும், தவமை உருவகம் அருத்தவாதம் முதலிய நிலைகளானும் நூல்களைப் பொருள்கொள்ளும் வகைகளை அனுபவம் வல்ல தேசிகர்பாற் கேட்டுப் பயின்று ஞானநூல்களை ஆளுதல் முறை. புராண சரித வரலாறுகளை உண்மை ஞானநூல்களினும் எடுத்தாண்ட முறைகளும் கவனிக்கற் பாலன.