பாடல் எண் :2740
பாவுற்ற "பாராழி வட்டத்" திருப்பாட்டி னுண்மை
காவற் றொழிலானெனுங் கண்ணனுங் காவல் பெற்ற
தியாவர்க்கு மேலாய வீசனரு ளாழி பெற்று
தமேவுற்ற சீருற்ற தென்றனர் வேத வாயர்.
842
(இ-ள்)> பாவுற்ற.....உண்மை - திருப்பாசுரத்திற் பொருந்திய "பாராழி வட்டம்" என்று தொடங்கும் திருப்பாட்டின் உண்மையாவது; காவல்...பெற்றது - உலகங் காக்கும் தொழிலை மேற்கொண்டுள்ள விட்டுணுவும் அக்காவல்தொழில் கிடைக்கப்பெற்ற வரலாறாவது; யாவர்க்கும்.....சீருற்றது - எல்லார்க்கும் முதல்வராகிய சிவபெருமானருளும் சக்கரமும் பெற்றுப் பொருந்திய சிறப்பைப் பெற்றபடியாம்; என்றனர் வேதவாயர் - என்று அருளினார் வேதங்களை வெளிப்படுக்கும் திருவாக்கினை யுடைய பிள்ளையார்.
(வி-ரை) பாவுற்ற.....உண்மை - இத்திருப்பாட்டினால் "பாராழி வட்டம்" என்று தொடங்கும் திருப்பாசுரம் ஒன்பதாம் திருப்பாட்டின் கருத்தினை எடுத்து உரைத்தபடி. பாவுற்ற - பா - திருப்பாசுரம். தன் சிறப்புப்பற்றி இவ்வாறு கூறினார். "பாவெனப் படுவதுன் பாட்டு" என்றது காண்க; பா உற்ற பாட்டின் நல்லிலக்கணம் முற்றும் பொருந்திய என்றலுமாம். பரம்பிய - எங்கும் பரந்த சிறப்புடைய என்ற குறிப்புமாம்.
காவற் றொழிலான்......பெற்றது - தொழிலான் எனும் - படைப்புக் காப்பு அழிப்பு என்ற முத்தொழில்களுள் காத்தல் என்ற தொழிலைச் செய்பவன் என்று சொல்லப்படும். உலகம் அவ்வாறு முகமனால் கூறினும் உண்மையில் அவன் செய்கிறதில்லை என்பார் எனும் என்றார்.
கண்ணனும் காவல் பெற்றது - உண்ணின்றியக்குதலால் அவன் ஆணைவழியே நின்றும் அவன் தந்த சக்கரத்தின் துணைகொண்டும் செய்கின்றான் என்ற தன்மையால் அவ்வாறுபசரிக்கப்படும் தன்மையும் வாய்த்தது என்பது கண்ணனும் என்ற இழிவு சிறப்பும்மையின் குறிப்பு.
காவல் பெற்றது - காக்கும் தொழிலின் தன்மை அடையப்பெற்றது.
யாவர்க்கு மேலாய ஈசன் - முதல்வன் "யாவர்க்கு மேலா மளவிலாச் சீருடையான்"(திருவாசகம்); சீருற்றது அவன் அருளப்பெற்ற சீர் உற்றதன் துணை என்க. "மூவிலை யொருதாட் சூல மேந்துதல், மூவரும் யானென மொழிந்த வாறே" (திருவொற் - ஒருபா - 6); "மூவர்நின் சந்நிதி முத்தொழில் செய்ய வாளா மேவண்ணல்" (திருவிளை. புரா) முதலியவையும் காண்க.
ஈசன் - ஈசத்துவமாகிய முதன்மைக்குண முடையவன்; ஏனையோர் எல்லாரையும் தன் ஆணை வழி நிற்கச் செய்பவன்.
அருள் ஆழி - அருளும் ஆழியும். அருளாவது அவனது காத்தற்றொழில் இனிது செல்லும்படி சங்கற்பித்தல்; "அருள் செய்தல் பேணி" என்பது பதிகம். ஆழி - சக்கரம். பாராழி வட்டம் - என்றவிடத்து, வட்டஆழி சூழம் பார் என ஆழி - ஆணைச் சக்கரம் என்ற குறிப்பும் தந்து நிற்பது காண்க.
பெற்றது - பெற்ற வரலாறு; பெயர்.
சீருற்றது - சீருற்றதனால் காவல் பெற்றதாம் எனக் காரணப் பொருள்பட நின்றது.
கண்ணன் - கிருட்டிணன் என்ற ஓரவதாரத்தின் வந்த பெயர் விட்டுணு என்ற பொதுப்பொருளில் வந்தது. "நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்டவர்" (தனது உரைவிடமாகிய நீரினையுடைய கடலினை விட்டு ஏறிவந்து தன் நெஞ்சினை இறைவனுக்கு இடமாக வைத்துக் கொண்டு தியானித்த திருமால்) என்றது பதிகம். "நாகப்பள்ளி கொள்வா னுள்ளத்தான்" (அப்பர் - ஆரூர்); (திருமாலினால்) தியானிக்கப்படுபவன்; "தியேயன்". தியாதா - தியானிக்கின்றவன்; (மால்); "நாராயண: பரோத் தியாதா" என்பது வேதம்.
கண்ணன் (திருமால்) ஆழிபெற்ற வரலாறு மாபுராணங்களாற் பேசப்படும். திருப்பாசுரத்தில் விரிவாக அருளப்பட்டதனால் ஆசிரியர் அதனைச் சுட்டிக் கூறியமட்டில் அமைந்தனர்.
இந்திரன் ஒருகாலத்து அகந்தையொடுந் திருக்கயிலாயத்துக்குச் சென்றான். சிவபெருமான் ஒரு பூதகணநாயக னுருவங்கொண்டு அவன் எதிரே வந்தனர். அவரை யறியாமையால் அகந்தையினால் அவர்மேல் தனது வச்சிராயுதத்தை எறிந்தனன், அது துகளாயிற்று. சிவபெருமான் உருத்திர வடிவங்கொண்டு சினந்தவர்போற் காட்டினர். அவரது திருமேனியில் வியர்வை தோன்றிற்று. இந்திரன் கண்டு பயந்து வணங்கினான். இறைவன் சினநீங்கி அவனுக்கு அருளி, விடுத்தனர். இறைவர் அப்போது தாங்கிய சினத்தினைக் கடலில் எறிந்தனர். அது ஒரு அசுரஉருக்கொண்டு வருணனால் வளர்க்கப்பட்டுச் சலந்தரன் என்ற பெயர்கொண்டு வளர்ந்தது; அச் சலந்தராசுரன் சிவன்பாற்றோன்றியவ னாதலால் விட்டுணு பிரமன் முதலிய வேறெத்தேவரையும் மதியாது தானே அனேகம் அசுரர்கள் சூழ உலகிற் சுயாட்சி புரிந்து வந்தனன். விட்டுணு அவனிடம் அனேக ஆண்டுகள் போர்புரிந்து தோல்வியுற்றனர். இந்திரனும் ஏனைத் தேவர்களும் பயந்து திருக்கயிலையிற் புகலடைந்தனர். அங்குச் சிவபிரானுடன் போர்செய்யும்பொருட்டுச் சலந்தரன் சேனைகள் சூழ அகந்தையுடன் கயிலைக்கு வந்தான். சிவபிரான் ஒரு கிழ முனிவராக அவன்முன்னே வந்து அவனை எங்குச் செல்கின்றாயென்று கேட்டனர். அவன் நான் சிவனுடன் போர் செய்யச் செல்கின்றேன் என்றான். அவர், உனக்கு அவ்வலிமை யிருக்குமாகில் இந்தச் சக்கரத்தை எடுத்துக் தலையில் வைத்துக்கொள் என்று கூறித் தமது கால்விரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறினார். அவன் அதை மிக்க சிரமத்துடன் பேர்த்தெடுத்துத் தலையில் வைக்க அது அவனை இரு பிளவாக அறுத்துக் கொன்றது. அந்தச் சக்கரத்தைப் பெறும்பொருட்டு அனேக காலம் திருமால் திருவீழிமிழலையில் தினம் ஆயிரம்தாமரைமலர் கொண்டு இறைவரை அருச்சித்துத் தவங்கிடந்தார். ஒருநாள் இறைவரது அருளினால் அவற்றுள் ஒருபூக் குறைய அவர் தமது கண்ணைத் தோண்டிச் சாத்தினார்; இறைவர் வெளிப்பட்டு அவருக்குச் சுதரிசனம் என்ற அச்சக்கரத்தை அருளினார். அதன் துணையினால் திருமால் தமது ஆணைச் சக்கரம் உலகில் செலுத்திக் காவற்றொழில் புரிந்து வருகின்றார். இது திருமால் ஆழி பெற்ற சரிதம். விரிவு காந்தம் முதலிய மாபுராணங்களுட் கண்டு கொள்க. "தன்றவம் பெரிய சலந்தர னுடலந் தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத் திறையவன்"
(பிள். தேவா - புறநீர்மை - மிழலை - 9) "நீற்றினை நிறையப் பூசி நித்தலா யிரம்பூக் கொண்டு
வேற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் ணிறைய விட்ட
வாற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே" (நேரிசை - 8)
"சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்" (தாண்டகம் - 2)
"செருமேவு சலந்தரனைப் பிளந்தசுட ராழி
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி" (நம்பி -கலயநல் - 2)
"சலமுடைய சலந்தரன்ற னுடறடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ:
நலமுடைய நாரணன்ற னயனமிடந் தரனடிக்கீழ்
அலராக விடவாழி யருளினன்காண் சாழலோ"(18 -திருவா - சாழல்)
என்பனவாதி திருவாக்குக்களால் இச்சரிதம் வேத சம்மதமாகிய விளக்கமுடையதென்பது பெறப்படும்.
இச்சரிதமும், மேல்வரும் பாட்டிற் கூறும் விடமுண்ட சரிதமும் - இவை போல்வனவும் "வேதமுதல்வன்" என்ற திருப்பாட்டிற் கூறியருளியபடி பதினெண் புராணங்களும், "வேத முதல்வன் முதலாக" என்ற சிவபெருமானது முழுமுதற் றன்மையினை எடுத்துக்காட்டி வேதங்களுக்கு உபப்பிரம்மணங்களாதலை நிலைநாட்டுகின்றன. இங்கு வேதவாயர் - என்ற குறிப்புமிது.