"மாலா யவ" னென்ன வருந்திருப் பாட்டின் மாலும் தோலா மறைநான் முகனுந் தொடர்வா மமரர் ஏலா வகைசுட்ட நஞ்சுண் டிறவாமை காத்த மேலாங் கருணைத்திறம் வெங்குரு வேந்தர் வைத்தார். | 843 | (இ-ள்) மாலாயவன்.....திருப்பாட்டில் - "மாலாயவனும்" என்று தொடங்கும் திருப்பாசுரப் பாட்டின்கண்; மாலும்....நஞ்சு - திருமாலும் வெற்றி பொருந்திய வேதங்களில் வல்ல பிரமனும் அவர்களைத் தொடர்வாகும் தேவர்களும் பொருந்தமாட்டாதபடி சுட்ட விடத்தினை; உண்டு....கருணைத் திறம் - தாம் உண்டு அவர்கள் சாவாதபடி காத்த மேலாகிய பெருங்கருணையின் வெற்றிப்பாட்டினை; வெங்குரு வேந்தர் வைத்தார் - சீகாழித் தலைவராகிய பிள்ளையார் அறிய வைத்தருளினார். (வி-ரை) பாட்டில் - கருணைத் திறம் - வைத்தார் - என்று கூட்டுக. திறம் - வைத்தல் - திறத்தினை அறியக் காட்டுதல். மேலாங் கருணைத்திறம் - திறம் - திறத்தினை - மேம்பாட்டினை; மேலாம் - பெரிதாகிய; பிறர் எவர்க்கும் அரிதாகிய; தலைமையாகிய. பேரருளுடைமை - இறைவரது எண்குணங்களுள் ஒன்று; இது முதன்மை குறிக்கும். தோலா மறை - தோலா - தோல்வியில்லாத; வேறெந்த நூலாலும் மறுக்க முடியாத; "மறைவல்ல நான்முகனும்" என்பது பதிகம். தொடர்வாம் அமரர் - தொடர்ந்த தேவர்; தொடர்தல் - (அவர்களுள்) அடங்கி அவராற் பயன் பெறுதல். அமரரும் - என்று எண்ணும்மை விரிக்க. இவர்கள் வருணன்-சூரியன் முதலியோர். மாலும் - மறை நான்முகனும் - அமரரும் ஏலா வகை சுட்ட - நஞ்சு உண்டு - காத்த என்றதனால் வேதங்களுள்ளும், அவற்றை உபப்பிரம்மணம் செய்யும் மாபுராணங்களுள்ளும் சிவனையேயன்றி மால் - பிரமன் முதலாகிய தேவர்களும் உடன் போற்றப்படினும், மால் முதலிய ஏனைத் தேவர்க்கெல்லாம் முதல்வன் சிவனேயாம் என்பது அவற்றின் கருத்து என விடமுண்ட சரிதம் அவற்றுளெல்லாம் பேசப்பட்டதனால் விளங்கும் என்று காண்க. இக்குறிப்புப் பெறத் தோயாமறை என்றார். "மறைவல்ல" - (பதி). ஏலாவகை - ஏலுதல் - பொருந்துதல்; பொறுத்தல்; தாங்கிக் கொள்ளுதல். சுட்ட - கருக்கிய; தீய வைத்த. நஞ்சுண்டு - உண்டதனால். இறவாமை - அன்று அந்த நஞ்சினால் சாவாதபடி. மற்றபடி அவர்கள் காலாந்தரத்தில் இறத்தற்குரியவர்களேயாம். சிவபெருமான் விடமுண்ட வரலாறு: ஒரு காலத்தில் அமிர்தமுண்டு நீண்ட ஆயுள் பெறும்பொருட்டுத் தேவர்களும் அசுரர்களும் திருமாலைத் தலைவராகக்கொண்டு, மந்தரமலையை மத்தாக நாட்டி, வாசுகியைக் கயிறாகக் கொண்டு, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது வருத்த மிகுதியால் வாசுகி விடத்தினைக் கக்கிற்று; அந்த நஞ்சு உறுத்துக் கொடியதாயெழுந்து பொங்கி அவர்களை மேனிகருகத் தீய்த்தது; அவர் ஓலமிட்டு ஓடிச் சிவபெருமானிடம் வேண்ட அவர் அவ்விடத்தினைச் சிறிதாக ஆக்கிக் கொணரும்படி ஆலாலசுந்தரரை ஏவினார். அவர் அவ்வாறே அதனைச் சிறிதளவிலாகத் திரட்டிக் கொணர அதனைச் சிவபெருமான் உண்டருளினார். தேவர்கள் வேண்டுதலின்படி அம்மையார் திருக்கரத்தினால் அதனை இறைவரது கழுத்தளவில் தடுத்து நிறுத்தியருளினார். இறைவரது எரிபோன்ற சிவந்த திருமேனியில் கண்டத்தில் அந்த நஞ்சு சிறிது கருமைகொண்டு விளங்கிப், பிறைசூடுதல் - கங்கை தாங்குதல் - போலச் சிவனது பெருங்கருணையின் வெற்றிப்பாட்டினையும் முழுமுதற் றன்மையினையும் மேம்பாடாக விளக்கிக் கொண்டு நிற்கிறது. இவ்வரலாறு மாபுராணங்களெல்லாவற்றினும் பேசப்பட்டுள்ளது. "பொங்கி நின்றெழுந் தகட னஞ்சினைப், பங்கி யுண்டதோர் தெய்வமுன் டோசொலாய்"(குறுந்); இவ்வாறு இறைவர் விடமுண்ட பின்னர்த் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் எழுந்த அமுதமுண்டு நீண்டகாலம் ஆயுள் பெற்று வாழ்ந்து காலாந்தரத்தில் தத்தம் காலவெல்லை கூடியபோது இறந்தும், மீளப் பிறந்தும் வருகின்றனர். ஆனால் எமது முதல்வராகிய சிவபிரான் ஏனையோரைச் சாகச்செய்யும் நஞ்சினை உண்டும் தாம் இறந்துபடாமல் நித்தியராக விளங்குகின்றார். இதனானும் "வேத முதல்வன் முதலாகி"ய தன்மை விளக்கப்பட்டமை காண்க. வெங்குரு - சீகாழியின் நான்காவது பெயர்; அசுரர் வழிபட்டமையால் இப்பெயர் போந்ததென்பர். இறைவரது முழுமுதற் றன்மையைப் பிள்ளையார் இங்குப் புராணங்கள் மூலமாக எடுத்து உபதேசித்த குறிப்புப்பெற வெங்குரு வேந்தர் என்ற இவ்வாற்றாற் குறித்தார்.
|
|
|