ஆன"வற் றன்றியந்தண்" ணெனுந்திருப் பாட்டிற் கூடன் மாநாகர்ச் சங்கம் வைத்தவன் தேறத் தேறா ஈனர்க ளெல்லைக் கிட்டவே டெதிர்ந்து செல்லில் ஞானமீ சன்பாலன் பென்றனர் ஞான முண்டார். | 844 | (இ-ள்) ஆன அற்றன்றி....பாட்டில் - பதிகம் நிறைவாயின "அற்றன்றி யந்தண்" என்று தொடங்கும் திருப்பாட்டின்கண்; கூடல்.....தேற - நான்மாடக்கூடல் என்னும் மதுரையில் முச்சங்கங்களை நிறுவிய பாண்டியன் தேறவும்; தேறா.....ஏடு - தெளிவு பெறாத கீழ்களாகிய சமணர்கள் வாதத்திற் கூறிய எல்லையில் முடிவு காணும்படி இட்ட ஏடு; எதிர்ந்து....அன்பு - நீரில் எதிர்த்து மேற்செல்லுமானால் அதனால் உறுதிபெறப்படும் உண்மைப் பொருளாவது ஈசனிடத்து அன்பேதான்;என்றனர் ஞானம் உண்டார் - என்று சிவஞானவமுதுண்டருளிய பிள்ளையார் கூறியருளினார். (வி-ரை) ஆன - பதிகப்பகுதி நிறைவாயின. மேல்வரும் பாசுரம் திருக்கடைக்காப்பு ஆதலின் இதுவே பதிகநிறைவு என்க. "பாசுரஞ் சொன்ன பத்தும்" (12) என்பது காண்க. "பாடியவப் பதிகப்பாட் டான பத்தும் பாடனிரம் பியபின்னும், ....நீடுதிருக் கடைக்காப்பி லரிது வேண்டி நின்றெடுக்க" (2480) என்றமையால் இந்நியமம் கண்டுகொள்க; கருதும் - என்றும் (2738); பாவுற்ற - என்றும் (2740) அவ்வப் பாட்டுக்களுக்கு ஏற்ற அடைமொழிகள் தந்தோதியமையும் காண்க. "அற்றன்றி அந்தண்" எனும் - "அற்றன்றி யந்தண்" என்று தொடங்கும் பதினொராவது திருப்பாட்டு. கூடல் மாநகர்ச் சங்கம் வைத்தவன் - பாண்டியன். சங்கம் - தமிழ் முச்சங்கங்கள். சங்கம் - "அந்தண் மதுரைத் தொகை" என்பது பதிகம். இது பாண்டியர்களுக்குப் பொதுவாய்க் கூறும் அடைமொழி. இப்பாண்டியர் சங்கம் வைத்தவர் என்பதன்று; முன்னோருள் ஒருவர் செய்த சிறப்புச்செய்கை அம்மரபில் பின்வரும் எல்லோருக்கும் ஏற்றியுரைக்கும் நிலை காண்க. பாண்டியர்கள் தமிழ் முச்சங்கங்கள் நிறுவிய வரலாறு இறையனாரகப் பொருளுரையாலும் திருவிளையாடற் புராணத்தாலும் அறிக. வைத்தவன் தேற(வும்) தேறா ஈனர் எல்லைக் கிட்ட ஏடு - என்க. ஞானம் ஈசன்பால் அன்பே என்று இப்பாட்டின் உண்மையினை அரசன் தேறக் கூறியருளினார்; தேறா ஈனர் - சமணர்கள்; சுரத்திலும் தீயிலுமாக ஒருமுறைக் கிருமுறையும் சிவபெருமானது உண்மை தெளிவிக்கப்படினும் தெளியாது பின்னும் நீரில் ஏடு எதிர்ந்து செல்லும் வாதம் வேண்டி ஒட்டினார்களாதலின் இவ்வாறு கூறினார். எல்லைக் கிட்ட - வாதத்தின் முடிவாக ஒட்டியது. இவ்வொரு "தனிவாதில் அழிந்தோமாகில்" இனியும் வேறு வேண்டோம்; எங்களை "வெங்கழு வேற்று வானிவ் வேந்தனே" என்று வாதத்துக்கு எல்லை வகுத்தமை குறித்தது(2696); எல்லைக்கு - எல்லையாக; இட்டது - வகுத்தது; ஏடு - வாதத்தில் உண்மை காண இடும் ஏடு; இதனைக் "கரைக்கோலை" என்பது பதிகம். கரைக்கு - எல்லைக்கு. எதிர்த்து செல்லில் - மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் நீரின் வேகத்துட்பட்டுக் கீழ்நோக்கிச் சென்றுவிடாது எதிர்ந்து மேலே சென்றால். ஞானம் ஈசன்பால் அன்பு - செல்லில் அதனால் காண நாட்டப்பெறும் உண்மையாவது சிவனிடத்துச் செல்லும் அன்பே உறுதிப்பொருளாவது; "தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர் விரவும் பண்பு நோக்கில், பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே" என்ற பதிகக்கருத்து இது என்று காட்டியபடி. இப்பதிகப்பகுதி இச்சரித வரலாற்றுக்கு வலிய அகச்சான்றாய் விளங்குதல் காண்க. பெருமான் பெருமானு மன்றே - பெருமானே பெருமான் - தலைவர் - முதல்வர்; ஏனையோர் அல்லர்; ஆதலின் அவன்பா லன்பு செய்தல் கடன் என்ற பதிகக்குறிப்பை எடுத்துக் காட்டியவாறு கண்டுகொள்க. பாட்டில் - அன்பு - என்றனர் - என்று கூட்டுக. ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானமுண்டார் - ஞானமுண்டவராதலின் சிவஞானமே பொருள்; (ஏனைய எல்லாம் அவஞானம்) என முடித்து அருளினார் என்று காரணக் குறிப்புப்பட ஞானமுண்டார் என இவ்வாற்றாற் கூறினார்.என்ற அத்திருப்பாட்டில் - மாநகரத்துச் சங்கம் - வைத்தவன் தேற்ற - ஏடு நீரெதிந்து - அன்பே என்றனர் - என இப்பாட்டின் அங்கங்கும் பாடபேதம் கொண்டு இப்பாட்டினை முன்பின் பாட்டுக்களாகிய ஐஞ்சீர்க் கலிநிலைத் துறையாயன்றி வேறு - அறுசீர்விருத்தம் - ஆக்கி உரைப்பன சில பதிப்புகள்; அப்பாடம் சொற்பொருள் யாப்புப் பொருத்ததங்களின்மையாலும், பிறவாற்றாலும் சிறவாமை கண்டு கொள்க. |
|
|