பாடல் எண் :2744
திருவுடைப் பிள்ளை யார்தந் திருக்கையா லிட்ட வேடு
மருவுறும் பிறவி யாற்றின் மாதவர் மனஞ்சென் றாற்போல்
பொருபுனல் வைகை யாற்றி லெதிர்ந்துநீர் கிழித்துப் போகும்
இருநிலத் தோர்கட் கெல்லா மிதுபொரு ளென்று காட்டி.
846
(இ-ள்) திருவுடை....ஏடு - சைவ மெய்த்திருவையுடைய பிள்ளையார் தமது திருக்கையினால் இட்ட அவ்வேடு; மருவுறும்....போல் - பொருந்திவரும் பிறவியாகிய ஆற்றிலே மாதவர்களுடைய மனமானது எதிர்ந்து செல்லுமாறுபோல; பொருபுனல் வைகை ஆற்றில் - மிக்கு ஓடும் நீரினையுடைய வைகையாற்றிலே; இருநிலத்தோர்கட்கெல்லாம்....காட்டி - பெரிய நிலவுலகின் வாழ்வார்கட் கெல்லாம் இதுவே உண்மைப் பொருள் உடையது என்று எடுத்துக்காட்டி; எதிர்ந்துநீர் கிழித்துப் போகும் - கீழ் நோக்கிச் செல்லும் நீரின் ஓட்டத்தினை எதிர்ந்து நீரினடுவுள் அதனைக் கிழித்துக் கொண்டு மேனோக்கிப் போவதாயிற்று.
(வி-ரை) திருவுடை - திரு - வைச மெய்த்திரு; அருள்திரு; முத்தித்திரு. ஈண்டுத் திருப்பாசுரம் பாடி ஞானோபதேசம் செய்தவகையால் பரசமய நிராகரிப்பும் சைவத்தின் ஆக்கமும் செய்து சிவஞானத்தை அருளியமை குறிப்பு.
திருக்கையால் இட்ட ஏடு - "நிலவும் திருஏடு திருக்கையால் நீட்டி இட்டார்" (2719) என்று முன்கூறியபடி இட்ட; இடையில் திருப்பாசுர விரிவுரை கூறியருளியமையால் சரிதத் தொடர்ச்சி காட்ட முன் கூறியதனையே மீண்டுந் "திருக்கையால் இட்ட ஏடு" என்றருளினார்.
மருவுறும் பிறவி ஆறு - உயிர்களுக்குப் பிறவி ஒன்றன்பின் ஒன்றாக இடையறாது தொடர்பாய் வருதலின் பிறவி ஆறு என்று உருவகித்துக் கூறினார்; "பிறவாக அநாதி" என்று நூல்களுட் கூறும் மரபும் இது. மருவுதல் - இடையறாது தொடர்ந்து வினைக்கீடாக வந்து பொருந்துதல்.
பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றாற்போல் - மாதவர் சரியையாதி சிவநெறி நிற்போர். சிவநெறி நிற்றல் தவமெனப்படும்; ஏனையவெல்லாம் இவற்றிற்கனுகூலமாய் நிற்கும் அளவே தவமென் றுபசரிக்கப்படும்; அல்லாதன அல்லவாய் அவமெனப்படும். சிவநெறியே பிறவிவழிச் செல்லாது உயிர்களை மேலேறச் செய்யவல்ல தாதல் குறிப்பு. வினையும் பயனும்பற்றி எழுந்த உவமம்.
மாதவர் மனம் பிறவி ஆற்றில் எதிர்த்துச் செல்லுதலாவது மாதவர்களது மனம் ஏனையோர் மனம்போலப் புலன்வழிச் சென்று பிறவி ஏறவிடாது, புலன்களைத் தம் ஏவல்வழி நிற்கச்செய்து பிறவியைக் கடக்கவல்லனவாதல். "தம்மை யைந்து புலனும்பின் செல்லுந் தகையார்" (1207); இவ்வுவமம் மிகச் சிறந்தபொருளை விளக்குவது. இவ்வாறு உவமை காணுதல் ஆசிரியரது தெய்வக் கவிநலங்களுள் ஒன்று.
"நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில், அலைப்பட்ட வார்வமுதற் குற்றம் போலாயினார்"(634) என்றும், "நிலவியவிரு வினைவலையிடை நிலைசுழல்பவர் நெறிசேர், புலனுறுமன னிடைதடைசெய்த பொறிகளினள வுளவே"(734) என்றும் முன்கூறிய உவமைகளையும் ஆண்டுரைத்தன வற்றையும் காண்க. ஈண்டுக் கூறும் பொருட் கருத்தினை அவ்வுவமைகள் விளக்குவனவாம் என்பதும் கண்டுகொள்க.
இதுவே பொருள் என்க. பிரிநிலை ஏகாரம் தொக்கது. "நீடுமெய்ப் பொருளின் உண்மை நிலைபெறும் தன்மை எல்லாம்" எழுதுக என்று(2694) அமணர் கேட்டனராதலின் அந்த மெய்ப்பொருள், முப்பொருள் நிச்சயமாம் சிவஞானமாகிய அழியாத மெய்ப்பொருள் என்றலுமாம்.
பொருள் என்று காட்டிப் போகும் - என்று கூட்டுக. சமணர் ஒட்டிய வகையால் எதிர்ந்து ஏகுதலினால் காட்டிற்று. பிள்ளையார் ஈண்டு உபதேசமுகத்தால் திருப்பாசுரம் இதுபொருள் என்று கூறியருளியபடி அப்பாசுரம் வரைந்த ஏடும் மெய்ப்பொருள் காட்டிற்று என்ற நயமும் காண்க.
திருவுடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு - பொருள்காட்டிப் போகும்
பிள்ளையார் திருவுடையாராதலின் அவர் மெய்ப்பொருள் காட்டுதல் தகும்; "பெம்மானிவனன்றே" என்று சிவஞானம் ஊட்டப்பெற்ற அன்றே பொருள் காட்டினாராதலின் அஃதவர்க் கியல்பாம்; அவர் தம் திருக்கையால் இட்ட ஏடும் காட்டிச் செல்லும்; அவர் திருக்கையால் இடப்பெறுதலின் என்ற குறிப்பும் நயமும் காண்க. பொருள் - "எம்பிரான் சிவனே எல்லாப் பொருள்களும் என்று"(2745) இதனைத் தொடர்ந்து வரும்பாட்டில் விரித்துத் திருப்பாசுரப் பதிகக் கருத்துக் கூறுதல் காண்க.
இருநிலத்தோர்கட் கெல்லாம் காட்டி - எல்லா நிலத்தோர்கட்கும் என்றலுமாம் விண்மண் முதலிய எல்லாப் புவனத்தோர்க்கும்; முற்றும்மை தொக்கது. எல்லாம் என்றதனால் அன்று கண்டாரேயன்றி இனி எதிர்காலத்து வருபவர்க்கு எல்லாம் என்றதுமாம்;எல்லாம் இதுபொருள் என்று கூட்டி உரைப்பினும் ஆம். மேல்வரும் பாட்டுப் பார்க்க.
எதிர்த்து நீர் - என்பதும் பாடம்.