"எம்பிரான் சிவனே யெல்லாப் பொருளு"மென் றெழுது மேட்டிற் றம்பிரா னருளால் வேந்தன் றன்னைமுன் னோங்கப் பாட அம்புய மலராண் மார்ப னனபாய னென்னுஞ் சீர்த்திச் செம்பியன் செங்கோ லென்னத் தென்னன்கூ னிமிர்ந்த தன்றே. | 847 | (இ-ள்) எம்பிரான்....ஏட்டில் - எமது பெருமானாகிய சிவனே முழுமுதற்பொருள் ஆவான் என்று எழுதும் அந்த ஏட்டிலே; தம்பிரான்....பாட - தமது பெருமானது அருளாலே "வேந்தனு மோங்குக" என்று அரசனை ஓங்கும்படி பாடியருளி யமையாலே; அம்புயமலராள்...என்ன - இலக்குமியை மார்பில் உடைய அனபாயன் என்னும் பெயருடைய சிறப்புப் பொருந்திய சோழ அரசனது செங்கோலினைப்போல்; தென்னன் கூன் நிமிர்ந்தது - பாண்டியனது கூனும் அப்பொழுதே நிமிர்ந்தது. (வி-ரை) எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்று - இது சிவபெருமானது முழுமுதற் றன்மை குறித்தது; சட சித்தாகிய எல்லாப் பொருள்களுள்ளும் நிறைந்த சர்வவியாபி என்னும் எங்குநிறைவாம் தன்மை குறித்ததென்றலுமாம். "எப்பொருளு மாக்குவா னீசனே"(1968) என்னம் திருப்பாட்டின் கருத்தும் ஈண்டு வைத்துக் காணத்தக்கது. எல்லாம் - மெய்ப்பொருளின் முடிந்தமுடிபு என்க. "ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல வடியார்மேல், ஊனத் திரனைநீக்கு மதுவு முண்மைப் பொருள்போலும்" (பிள். தேவா - திருவண்ணாமலை); இது திருப்பாசுரக் கருத்தாகிய முதல்வனது "அருள்", "மேலாங் கருணைத் திறம்" (2737) என அப்பதிகத்தின் இருதயத்தில் வைத்துக் காட்டிய நிலை குறித்தது. ஏட்டில் - பாட - ஏடு - என்றது இங்கு ஏட்டில் எழுதிய பதிகத்தில் என்ற பொருளில் வந்தது. ஏடு - அதனில் எழுதிய பதிகத்துக்காகியது ஆகுபெயர். வேந்தன்றன்னை முன் ஓங்கப் பாட - "வேந்தனும் ஓங்குக" என்றது பதிகம். தன்மை முன் - பாட - பதிகத்துள் வேந்தனும் என்றது பொதுப்பெயராய்ப் பின்வரும் மன்னர்கள் எல்லாரையும் குறிக்குமாயினும் அவ்வாறு குறிக்கும் மன்னர்களுள் முதலில் வருபவர் இவ்வரசனாதலின் அதன் பயன் பெற்றனன் என்பதாம். முன் - என்ற குறிப்புமது. இனி வேந்தனும் என்ற சிறப்பும்மையால் இதுவரை சமண் சார்ந்து "முன்செய்த தீவினைப் பயத்தினாலே, அந்நெறிச் சார்வு தன்னை அறமென நினைந்து நின்றா"னாயினும்(2498) இப்போது பிள்ளையார் "தீண்டித் திருநீறு பூசப்பெற்று முன்னைவல் வினையு நீங்கி முதல்வனை அறியுந் தன்மை துன்னினான் வினைக ளெர்த்துத் துலையென நிற்ற லாலே"(2717) என்ற நிலைபெற்று ஞானோபதேசமும் பெறுந்தகுதி பெற்றமையால் "ஆல வாயிலான், பால தாயினார் ஞால மாள்வரே"(தேவா) என்று தொடக்கத்திற் போந்த அருட்குறிப்பின்படி அந்நிலை பெற்ற இவ்வேந்தனும் குறிக்கப்படுதல் காண்க. முன் - முதற்பாசுரத்தில் என்றலுமாம். ஓங்க - ஓங்குக என்ற பதிகம் அரசனது உயிரைப்பற்றிய நன்மைகளும் சிறப்பும் குறிக்குமாயினும் சொல்லாற்றலால் உடலைப்பற்றிய நிமிர்ச்சியாகிய ஓங்குதலும் குறித்து அப்பயன் விளைத்தது; இது பிள்ளையாரது அருள்மெய்த் திருவாக்கின் சிறப்பு. "குரும்பை ஆண்பனை யீன்குலை யோத்தூர்" (தேவா) என்று "ஈனுக" என்ற கட்டளையிடாமலே சிறப்பாக இயல்பு கூறியமாத்திரையான் அவ்வாக்குக்கேற்ப ஆண்பனைகள் பெண்பனைகளாக உடலமைப்பின் மாறுவதும், அவை காலந்தரத்திற் சிவத்தைக்கூடி உயிர்ச்சிறப்பான் முத்தி பெறுவதும் ஆகிய வரலாறு இங்குக் கருதத்தக்கது. "வாய்மை குலவுதலால்"; "பெண்ணையாகி"(2878); "காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்"(2881) என்பன காண்க. அன்ன பிறவும் கண்டுகொள்க. அம்புய மலராள் மார்பன் - அம்புய மலராள் - இலக்குமி. அரசர்களைத் திருமாலின் கூறாகச் சொல்வதும், இலக்குமி திருமாலின் மார்பில் வாழ்கின்றாள் என்பதும் மரபு. அனபாயன்....செம்பியன் - ஆசிரியர்பால் வேண்டி இப்புராணம் பாடுவித்த அரசர்பெருமான். இவருக்குக் குலோத்துங்கர், அபயன், தீருநீற்றுச் சோழர் முதலிய பல பெயர்களுண்டு; ஆயினும் அனபாயர் என்ற பெயரையே ஆசிரியர் மிகவும் வழங்குகின்றாராதலின் அதுவே பெருவழக்கில் நிகழ்ந்திருந்தது என்பது கருதப்படும். செம்பியன் செங்கோலென்னக் - கூன் - நிமிர்ந்தது - செங்கோல் நிமிர்ந்துள்ள தன்மைபோலக் கூனும் நேராக நிமிர்ந்ததன்மை பெற்றது. செங்கோல் நிமிர்தலாவது (கோட்டம்) கோணுதலின்றி நேர்செல்லுதல்; மெய்பற்றி வந்த உவமம். செங்கோல் - அரசாட்சியைக் குறிக்கும். செங்கோல் என்ன - நிமிர்ந்தது - என்ற உவமைக் குறிப்பினால், பிள்ளையார், வேந்தனு மோங்குக என்று அவ்வரசரை வாழ்த்தியருளியதுபோல் ஆசிரியரும், அரசனது ஆட்சியின் செம்மையை வாழ்த்திய குறிப்பும், தகுதியும், அமைதியும் கண்டுமகிழ்க. இப்புராணத்தினுள் அனபாயரை ஆசிரியர் கூறியருளிய பதினொரு இடங்களுள் இது சிறந்த இடமாம்.* கூன் நிமிர்ந்தது - ஈண்டுக் கூறியவாற்றால் அதுவரையும் பாண்டியரது உடலிற் கூன் இருந்ததென்றும், அதனால் அவர்க்குக் கூன் பாண்டியர் என்று பெயர் வழங்கியதென்றும், ஈண்டு இவ்வா-று அது நிமிர்ந்தபடியால் அவர் நின்றசீர்நெடுமாறர் ஆயினார் என்றும் சரிதம் அறிவித்த திறமும் தகுதியும் காண்க. அன்றே - அப்பொழுதே.
|
|
|