ஆற்றின்மேற் செல்லு மேடு தொடர்ந்தெடுப் பதற்கு வேண்டிக் காற்றென விசையிற் செல்லுங் கடும்பரி யேறிக் கொண்டு கோற்றொழி றிருத்த வல்ல குலச்சிறை யார்பின் சென்றார்; ஏற்றுயர் கொடியி னாரைப் பாடினா ரேடு தங்க. | 849 | (இ-ள்) ஆற்றின்மேல்....எடுப்பதற்கு - ஆற்றிலே நீரினை எதிர்ந்து மேனோக்கிச் செல்கின்ற அந்த ஏட்டினைத் தொடர்ந்துபோய் எடுப்பதற்காக; காற்றென...பின் சென்றார் - அரசாட்சியினைத் திருந்தச் செய்யவல்ல குலச்சிறையார் காற்றுப்போல விரைந்து செல்லும் வேகமுடைய குதிரையின் மேல் ஏறிக்கொண்டு அவ்வேட்டின் பின் சென்றனர்; ஏற்றுயர்...தங்க - (பிள்ளையார்)இடபக்கொடியினையுடைய இறைவரை அந்த ஏடு மேற்செல்லாமல் ஓரிடத்தில் தங்கிநிற்கும்படி பாடினார். (வி-ரை) மேற்செல்லுதல் - ஓடும் நீரினை எதிர்த்து மேலே போதல் ஆறு - சிவநெறியாகிய வழி என்று கொண்டு ஆற்றின் - சிவநெறியின்கண்ணதாகலின் என்றலுமாம். எடுப்பதற்கு வேண்டி - கையில் பற்றி எடுத்துக்கொண்டு வர விரும்பி. காற்றென - விசையிற் செல்லும் - காற்றுப்போல; வினைபற்றிய உவமம்; வாயுவேகம் என்பர். காற்றினுங் கடுக - என்பதும் பாடம். கடும்பரி - கடிய வேகமுடைய குதிரை; பரி - அரச அங்கமாதல் போல அமைச்சர்க்குரிய குதிரை; "வருபரி யிழிந்து"(2624). கோற்றொழில் - கோல் - அரசனது செங்கோல்; அதன் தொழில் - அரசாட்சி. கோற்றொழில் திருத்தவல்ல என்றது கோல் கோணியபோது செய்யும் சிறந்த முதற்கடமை. "வல்ல தமைச்சு" என்பது குறள். "அறிகொன்றறியா னெனினு முறுதி, யுழையிருந்தான் கூறல் கடன்"(குறள்) என்ற கருத்தினை ஈண்டு வைத்துக் காண்க. இக்கடமையின் மேம்பாட்டினை ஆசிரியர் தமது அரசனுக்கு உறுதிகூறித் திருத்திய அமைச்சுத் திறத்தினும்வைத்துக் காண்க. பின் சென்றார் - ஏட்டினைப் பின்பற்றிச் சென்றனர். பாடினார் - பிள்ளையார் என்ற எழுவாய் அவாய்நிலையான் வந்தது. தங்கப் பாடினார் - தங்கும்பொருட்டு; தங்குக என்ற ஆணைக்குறிப்புடன் பாடினார். "எதிர்விரவும் பண்பு" (தேவா) என்று ஏடு எதிரேற நினைந்தருளிப் பாடியபடியால் அஃது ஏறாது தங்கும்படி பாடினாலன்றித் தங்காதாதலானும், அமைச்சனார் அதனைஎட்டிப் பற்றிக் கொண்டு அரசன் முன்னர்க் காட்ட வேண்டிய நிலைமையானும், தங்கும்படி நினைந்து பாடினார்; இஃது "ஏடுசென் றணைதரும்" என்ற பதிகக்குறிப்பின் வருணனையின் இலேசினாற் பெறப்படும். "குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்" என்புழிப் போலக் காண்க. |
|
|