பாடல் எண் :2751
மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
"துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற,
853
(இ-ள்) மன்னவன்....நோக்கி - அரசராகிய நின்றசீர்நெடுமாறனார் முன் சொன்னவாறு மந்திரியார் காட்டக் கண்டு அமைச்சரை நோக்கி; "துன்னிய...செய்க" என்று கூற - "பொருந்திய வாதத்தில் தாமே ஒட்டித் தோல்வியுற்ற இந்தச் சமணர்கள் அவ்வாறு ஒட்டித் தோல்வியுற்றமையால் தண்டத்திற்குரியராதலன்றியும், முன்னமே பிள்ளையாரிடத்தில் அனுசிதம் முற்றவும் செய்துள்ளார்கள்; ஆதலின் அவர்களைக் கழுவிலேற்றி நீதிமுறைப்படி தண்டஞ் செய்யும்" என்று சொல்ல,
(வி-ரை) மன்னவன் மாறன் கண்டு - மன்னவன் என்ற குறிப்பு மேல் நீதிமுறைசெய்யவுள்ளநிலை குறித்தபடி. மாறன் - "வடிகொள்வேள் மாறன் காதல் மாறின வண்ண மென்பார்"(2703) என்றபடி பொய்யின் நீங்கி உண்மைகண்டு மாறுதலடைந்தவன் என்பது தொனி; கூன்பாண்டியனாய் அமணச்சார்பில் குனிந்து இருந்தவர் மாறி உண்மை கண்டு சைவச் சார்பில் நிமிர்ந்து நின்றசீர்நெடுமாற ராயினமையும் குறிப்பு. கண்டு - "கொற்றவன் முதலாயுள்ளோர் காண"(2750) அமைச்சனார் காட்டக் கண்டு.
மந்திரியாரை நோக்கி - முறைசெய்க என்று கூற - முன்னர் மாறனாரை மன்னவன் என்று கூறிய நிலைக்கேற்பக் குலச்சிறையாரை என்னாது மந்திரியாரை என்றார். அந்த அமைச்சு நிலையில் அரசரால் ஏவப்பட்ட நீதிமுறைவிதி என்பது.
துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற - துன்னிய - அமணர் தாமேவலிந்து மேலிட்டுக் கொண்ட. "உள்ளவாறு கட்புலத்தில் உய்ப்பது"(2673) என்றும், "வெந்நெருப்பில் வேவுறாமை வெற்றியாவது"(2674) என்றும், "தொடர்ந்தவாது, முன்னுற விருகாற் செய்தோம் முக்காலி லொருக்கால் வெற்றி, என்னினு முடையோம்; மெய்ம்மை யினியொன்று காண்பது"(2692) என்றும் வந்தனவற்றால், அமணர் மேன்மேலும் தாமே வலிந்து வாதினை அழைத்து மேற்கொண்டமை அறிக. ஒட்டி - ஒட்டுதல் வைத்து. "தனிவாதி லழிந்தோ மாகில், வெங்கழு வேற்று வானிவ் வேந்தனே" என்றது(2696). தோற்ற - தமது ஏடு நீருடனே செல்லவும் பிள்ளையார் இட்ட ஏடு எதிர்ந்து செல்லவும் கண்டமையால் தோல்வியுற்ற.
தோற்ற - வாதில் தோல்வியுற்றமையேயன்றியும் அரசன் கூறிய ஆணையாவது: தாமே ஒட்டியபடி அமணர் வாதில் தோல்வியுற்றதொரு காரணந்தானே அவரைக் கழுவிலேற்றி முறை செய்க என ஆணைதருதற்குப் போதியதாகும்; ஆனாலும், அவ்வாறு அதுகொண்டே ஆணையிடாமல் மற்றொரு நியாயமும் காண்கின்றேன் என்றபடி.
முன்னமே...முற்றச்செய்தார் - அநுசிதம் - செய்யத்தகாத செயல்: அஃதாவது திருமடத்தில் வஞ்சனையினால் அரசனாகிய தன்னை ஏமாற்றித், தீக்கொளுவி அடியார்களை எரித்துக்கொள்ள முயன்றது. அதனைச் சொல்வது தானும் பிழை என்பார் "அநுசிதம்" என்றொழிந்தார். இவ்வநுசிதமும் கொலைத்தண்டம் பெறத் தகுதியுடையது என்றபடி.
கொன்னுனைக் கழுவில் ஏற்றி முறைசெய்க என்று கூற - மேற்கூறிய இசைவாகிய ஒட்டுதலினாலும், அநுசிதத்தாலும் கழுவேற்றப்படத் தக்காராதலின் அவ்வாறே நீதிமுறைத் தண்டம் நிறைவேற்றுக என்றபடி. இஃது அரசன் செய்த அரச நீதிச் சட்டமுறைத் தீர்ப்பு. வாதில் ஒட்டியதொரு காரணத்தாலே அரசன் இவ்வாறு தீர்த்தானல்லன். இசைவுபற்றியெழும் தண்டம் அவ்வளவின் எல்லையை முடிந்த கோடியாகக்கொண்டு வாதத்தின் அளவுக்கு ஏற்ற அளவே நீதிபதி குறித்து முறை செய்யலாம் என்பது இந்நாளிற் போலவே முன்னாளிலும் வழக்கு. ஆயின் இங்கு அரசன் அவ்வாறு அமணர் கழுவேற இசைவு தந்தாலும் வாதின் தோல்வியளவுக்கேற்றவாறு,
கழுக்கொலைத் தண்டத்தைத் தவிர்த்து, நாடுகடத்துதல் முதலாகிய எவையேனும் சிறிய அளவில் தண்டங்கள் விதித்திருக்கலாமே எனின், அவ்வாறு செய்யாமையை விளக்குதற்கென்றே காரணங்காட்ட மேற்வருங்கூற்று எழுந்தது. பிள்ளையார்பாற் செய்த அநுசிதமாகிய, மக்கள் குடியிருப்பு வீட்டுக்குத் தீ வைக்க முயன்றமையும், மக்களைத் தீயிட்டுக் கொல்ல முயன்றமையும், அவையும் எவ்விதக் காரணமும் பற்றாது செய்தமையும், சிவனடியார்பாற் செய்த அபசாரமாயினமையுமே கழுக்கொலைத் தண்டம் விதித்து முடித்ததன் காரணம் என விளக்கப்பட்டது.
கழுவில் ஏற்றி முறைசெய்க - இவ்வாறு கழுவேற்றிக் கொலைத்தண்டம் இயற்றுதல் முன்னாளில் வழக்கத்திலிருந்ததொரு தண்ட விசேடம். அன்றியும் தமது சமயச் சார்புக்கு இழுக்கு நேர்ந்தபோது கழுநாட்டி அதன்மேற் பாய்ந்து உயிர் மாய்த்துக் கொள்வது சமணர் சமய மரபுகளுள் ஒன்றென்பதும் அறியப்படும். "புத்தர்சமண் கழுக்கையர்" என்ற தேவாரம் இதனை உரைத்தமை காண்க. அதனாற்றான் இங்கு அமணர் அவ்வாறு ஒட்டினர் என்க; ஆதலின் அரசன் அவ்வாறே முறைசெய்க என்றதில் கருணையின்மை - வன்கண்மை முதலிய இழுக்கு ஒன்றுமில்லை; இந்நாளிலும் "நாகரிக" (ஆங்கில) நீதிச்சட்டத்தின்படி கொலைத்தண்டம் விதிக்கப்பட்ட ஒருவனைக் கழுத்தில் கயிறு சுருக்கிட்டுத் தொங்கவைத்துக் கொல்ல முறைசெய்வது தண்ட விசேடமாதல் காண்க. அதனை அன்றென விடுத்து மேனாட்டில் குற்றவாளியைப் படுக்கவைத்துக் கழுத்தைக் கனத்த வாள்விட்டு விரைந்துண்டமாக்குதலும், நாற்காலியில் வைத்து மின்சாரத்தை உடலில் ஏவிக் கணத்தில் கொல்லுதலும் முதலிய தண்ட விசேடங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக எழுதல் காண்க. ஈட்டி (சனியன் என்பர்) கொண்டு குத்திக் கொல்லும் முறையும் காண்க. ஆதலின் இத்தண்டமுறை பற்றிப் பரிவுகொண்டது போன்று பகைகொண்டும் ஆராய்ச்சியிற் கிளம்புவோர் இவைகளை உளங்கொளக்கடவர்; அரசன் சமயச் சார்புபற்றி இவ்வாறு முறைசெய்தானல்லன் என்பதும், பிள்ளையார்க்கேனும் சைவர்க்கேனும், சைவ சமயச் சார்புகள் எவற்றுக்கேனும் இதனுள் பொறுப்பும் சம்பந்தமும் இல்லை என்பதும், அரச நீதிமுறையொன்றே இங்கு இயற்றப்பட்டதென்பதும் தெளிந்து கொள்க.
"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ், களைகட் டதனொடு நேர்" (குறள்) என்றதும், அங்குக் கொடியராவார் இன்னார் என்று கூறுகையில் " தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர்...முதலாயினரை" என்று விரித்துத் தீக்கொளுவுவாரை முதற்கண் வைத்து வகுத்தும், "அரசன் கொடியாரைக் கொலையா னொறுத்துத் தக்கோரைக் காத்தல்" என்று வகுத்தும் எழுதிய பரிமேலழகர் உரை ஈண்டுச் சிந்திக்கற்பாலது.
இங்கு வேறு வேறு பேசுவனவெல்லாம் பிழையென் றொதுக்கிவிடுக. ஆயிரக்கணக்கான மக்களைத் தீக்கொளுவிக் கொளுத்த முயன்று சூழ்ச்சி செய்த கொலைபாதகர்கள் எண்ணாயிரவர் கொலைத் தண்டத்திற் குள்ளாவதில் பரிவுகொள்ளத்தக்க நீதித் தவறு என்னவுள்ளது என்று விடுக்க.
இனி ஒருசார் நவீன ஆராய்ச்சியாளர் இக்கழுவேற்றிய அரசதண்டம் நிகழ்ந்ததே இல்லை என்று முடிக்கவும் துணிந்தனர்; அவர் கூற்றுக்கள் சிலரை மயங்கவைக்குமாதலின் அவைபற்றி ஈண்டுச் சில பேசவேண்டியது அவசியமாகின்றது. அவர் கூறுவனவற்றின் சுருக்கம்: (1) நம்பியாண்டார் நம்பிகளுக்கு முன் இந்நிகழ்ச்சி பற்றி நூல்களுள் ஒன்றும் காணப்படவில்லை; (2) பிள்ளையார் தேவாரங்களில் இதுபற்றிய அகச்சான்று இல்லை; (3) சீன யாத்திரிகர்கள் எழுதிய தமிழ்நாட்டுக் குறிப்புக்களில் இச்செய்தி குறிப்பிடப்படவில்லை; (4) சமணர்களது நூல்களிலும் இதுபற்றிய சான்றில்லை; (5) பின்னேவந்த திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் முதலியவை இச்செய்தியைப் பலவாறு பெரிய புராணத்துட் கூறுவனவற்றுக்கு முரண்படக் கூறுகின்றன:-சமணர்கள் தாங்களே கழுவேறினார்களோ? அல்லது ஏற்றப்பட்டார்களோ? என்பதில் மாறுபாடு; அவர்களைக் கழுவேறாதவாறு பிள்ளையார் தடுத்தனர் என்று திருவிளையாடற் புராணம் கூறும்; பிள்ளையார் "மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்தனர்"(2752) என்பது இப்புராணம். இங்கு வைகைக் கரையில் இச்செய்தி நிகழ்ந்ததென்பதற்கு மாறாகத் திருவாலவாயுடையார் புராணத்தினுள் அது திருப்பூவணத்தில் நிகழ்ந்ததென்றும் பின்பு அது கழுவர் படைவீடு என வழங்கப்பட்டதென்றும் கூறப்பட்டது; (6) பிள்ளையாரது ஏனை அருட்செயல்கள் தமிழ்நாடெங்கும் கொண்டாடப்படுவன; இச்செய்தி பற்றிய விழாக்கள் பாண்டிநாட்டில் மட்டும் நடைபெறுகின்றன; (7) இச்செய்தி பிள்ளையார் கூறும் "எல்லார்களும் ஏத்தும் ஈசன்" "என்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம், நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்" என்பனவாதி திருவாக்குக்களாற் காட்டியருளப்படும் சிவன் பொதுக்கடவுள் என்ற கொள்கைக்கு இது மாறுபாடு;- முதலியன.
இவற்றைச் சிறிது ஆராய்வாம்: 1-2. பிள்ளையார் தேவாரங்களில் இச்செய்தி குறிக்கப்படாமை: "புத்தரோ டமணை வாதில் அழிவிக்கும் அண்ண றிருநீறு செம்மை திடமே" எனவரும் குறிப்பும், "ஆதமில்லி யமணொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே", "அமண்கையரை, ஓட்டி வாது செயத்திரு வுள்ளமே" என்று திருவுள்ள நோக்கிய குறிப்பும் ஒட்டிய வாதம் நிகழஉள்ள நிலைக்குச் சான்று பகர்கின்றன. "ஆனை மாமலை யாதி யாய விடங்க ளிற்பல வல்லல்சேர் ஈனர்கட் கெளியேன லேன்றிரு வாலவாயர னிற்கவே" என்ற தேவாரம் சமண்சார்புபற்றி நின்று சுரநோயுற்ற அரசன் முன்பு அமணர் பிள்ளையாரைச் சுற்றி நின்று துள்ளியெழுந்து அனேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற அதுகண்டு அஞ்சிய அம்மையாரைப் பிள்ளையார் தெருட்டிய செய்கையினையும், ஆனைமலை முதலிய எண்குன்றத்திருந்த அமணர் ஈனர் அங்குக் கூடிக் குரைத்ததனையும், அவர் இனி அல்லல் சேரவுள்ளதனையும் எடுத்துரைத்தது; அப்போது பாண்டியன்தலை நிலைநிற்கலாற்றாது நடுக்குற்ற நிலையில் நோய் மிக்கிருந்தானென்பது "துளங்கும் முடித் தென்னன்முன் இவை" என்ற அப்பதிகத் திருக்கடைக் காப்புச் சான்று பகர்ந்து காட்டி நிற்கும்; "பொய்ய ராமமணர்கொளு வுஞ்சுடர், பைய வேசென்று பாண்டியற் காகவே" என்ற தேவாரம் அமணர், பிள்ளையாரும், அடியவரும் இருந்த திருமடத்துத் தீநாடியிட்ட கொடும் பாவச்செய்கையினையும், பிள்ளையார் அருளாணையினால் அத்தீப் பாண்டியனிடம் சுரமாகச் சென்று பற்றுவதனையும் கூறுகின்றது; இனிச் சுரவாதம் நிகழ்ந்து அதனில் அமணர் தோல்வியுற்ற செய்திக்குத் திருநீற்றுப் பதிகம் "குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும்கூடக் கண் திகைப் பிப்பது நீறு" என்று சான்று பகர்கின்றது. இனி, அனலில் ஏடு இட்டு வேவாமை பெற்ற ஏடு மெய்ம்மை என்ற வாதம் நிகழ்ந்தமைக்கும் அதில் பிள்ளையார் இட்ட திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏடு(வேவாது) பழுதின்றிப் பச்சையாய் விளங்கிச் சமணர் தோல்வியுற்றனர் என்பதற்கும் "நள்ளாறர்தந், நாமமே மிளிரிள வளநெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே" "கொற்றவ னெதிரிடை யெரியினி லிடவிவை கூறிய, சொற்றெரி ஒருபதும்" எனவரும் திருநள்ளாற்றுப் பதிக ஏட்டினை வைத்து அரசன் எதிரில் திருநள்ளாறர் நாமம் எழுதிய ஏட்டினைப் பாடிய சாதாரித்திருவிராகப் பதிக முழுமையும் ஆகிய தேவார அகச்சான்று உறுதிகூறுகின்றது; "நள்ளாறுடைய நம்பெருமான் - ஆல வாயின்க ணமர்ந்த வாறிது - என்கொல் சொல்லாய்" என்ற பதிகமும் பார்க்க. இனிப், புனல்வாதம் நிகழ்ந்து வைகையாற்றில் பிள்ளையார் இட்ட ஏடு எதிர் சென்றமையால் அமணர் தோல்வியுற்றுச் சிவனே பரம்பொருளாவார் என நாட்டப்பட்டமை திருப்பாசுரப் பதிகத்தால் ஐயமற விளக்கம் பெறுகின்றது. "ஆழ்க தீயது; எல்லா மரனாமமே சூழ்க" "தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப், பற்றின்றிப் பாங்கெதிர் விரவும் பண்புநோக்கிற், பெற்றென் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே" எனவரும் திருப்பாசுரப் பகுதிகளும் "ஏடுசென் றணைதரு மேடகம்" என்ற பதிகமும் இதற்குரிய அகச்சான்றுகளாதல் தெளிக. "பருமதின் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே, வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே" என்ற திருவியமகமும் இதனை நாட்டியதுடன் இவ்வாதங்களில் எல்லாம் பிள்ளையாரே வெல்லவும் அமணர் தோற்கவும் நிகழ்ச்சிகள் கூடிய செய்தியும் விளங்குகின்றது.
இவ்வாற்றான் சமணர் கொலை முயன்ற தீச்செயலும், அதுவே அரசனுக்கேறிக் கொடிய நோய்பற்றிய செயலும், அமணர் பிள்ளையாரைப் பொறாமையாற் சூழ்ந்து பதறிக் கதறிய செயலும், இவை காரணமாக ஒன்றன்பின் ஒன்றாய் மூன்று பெருவா தங்களும் அவற்றால் மூன்றுமுறை அமணர்க்குத் தோல்விகளும் நிகழ்ந்த செயலும், இவையெல்லாம் பிள்ளையார் தேவார அகச்சான்றுகளால் நாட்டப்பெறுகின்றன; பொய்யினான் மெய்ம்மையாக்கப் புகுந்து வஞ்சித்துக் தனது உரிமை உண்மைச் சமயத்தை மறக்கவும் இகழவும் இடையூறு செய்யவும் மயக்கம் செய்தும் தனக்கு இறந்துபடுமளவு தரும் நோய் விளைத்தும், உண்மை நின்ற பெருகுநிலைக் குறியாளரை அவமதித்து நிந்தித்துக் கொலையும் சூழ்ந்தும், சைவ உடைமைகளையும் உண்மை அறிவையும் ஆறலைத்துக் கவர்ந்தும், இத்துணையும் தமது சீவனோபாய முயற்சிகளின் ஆக்கங் கருதிச் செய்ததுமன்றி, அதனோடு நில்லாமல், ஒட்டி வாதமும் செய்து தோல்வியும் பெற்றார்களாயின் அச்சமணர்களை அரசன் ஏற்றவாறு நீதிமுறைத் தண்டஞ் செய்வதில் என்ன குறை? பெருங்குற்றம் நடந்ததும், பெருவாதங்கள் நடந்தனவும் தேவாரங்களால் அறியப்படுதலின் அவற்றுக்குத் தக்க தீர்ப்பும் அரச தண்ட முறையும் நிகழ்ந்தமை எளிதில் கருதக்கிடக்கின்றது. சைவம் மீளத் தாபிக்கப்பட்டமையும் சமணம் வலியிழந்தொழிந்தமையும் கண்கூடாகக் காண்கின்றோம். ஆதலின் அரச நீதிமுறையால் சமணர் அழிக்கப்பட்டனர் என்பது தேற்றமாய் விளங்குமன்றோ? பிள்ளையார் அமணர் கழுவேறிய செய்தி கூறாமைக்குக் காரணம் பல இருத்தல் கூடும். அரசநீதிமுறை பற்றியதாய் அஃது ஒழிந்து சமயச்சார்பு பற்றியதன்றாதலின் அவர் கூறும் நியதியில்லை என்க. அன்றியும் தேவாரங்கள் முழுமையும் நமக்குக் கிடைத்தில என்பதனையும் ஈண்டு நாம் மறந்துவிடலாகாது. (3) சீன யாத்திரிகன் குறிப்பிடாமை பற்றி இந்நிகழ்ச்சி நிகழவில்லை என்பது தவறு; அவ்வாறு முடிவுகொள்ளுதல் தவறான அளவைமுறை. வெதிரேகச் சொல் என்ற அன்மைபற்றி இன்மை கூறுதல் இன்றியமையாத நியதியாகிய பொருத்தமிருந்தாலன்றிக் கூடாது, சீதமின்மை பனியின்மை என்புழிப்போல; சீன யாத்திரிகன் கூறாதனவெல்லாம் நிகழாதன என்றல் பொருந்தாது; சீன யாத்திரிகன் ஆளுடைய பிள்ளையார் ஞானமுண்டமை முதலியனவாகத் தேவார அகச்சான்றுடன் கூடிய ஏனையவெல்லாம் எழுதினானா? ஆளுடைய அரசுகளைச் சமணர் துன்புறுத்திக் கொலைசூழ்ந்த செயல்களையும் அதன்காரணமாகப் பல்லவன் மகேந்திரன் சமண்விட்டுச் சைவம் சார்ந்ததும் பாடலிபுத்திரத்துப் பாழிகளையும் பள்ளிகளையும் இடித்துக் குணபாவீச்சுரம் எடுப்பித்தமையும் அந்நாட்டுப் பிற விளக்கமாகிய உண்மைச் சரித நிகழ்ச்சிகளையும் எழுதினானா? சோழநாட்டில் திருவாரூரில் கமலாலயக் குளக்கரையைத் தூர்த்துக் கவர்ந்து மனைகளை ஆக்கியதோடு, தண்டியடிகள் நமிநந்தியார் முதலிய அடியார்களையும் சிவபெருமானதருளையும் இழித்துக்கூறிய சமணர்களையும், பழையாறை வடதளியிற் கோயிலை மறைத்துக் கவர்ந்து தமது பள்ளியாக்கிய சமணர்களையும், உண்மை கண்டு ஓடத் துரத்தித் தூய்மைகள் செய்த சோழ அரசரது செயல்களையும் நாட்டுச் சரித நிகழ்ச்சிகளையும் எழுதினானா? "வாயி ருந்தமி ழேபடித் தாளுறா, வாயிரஞ் சமணும்மழி வாக்கினான்" என்ற தேவார அகச்சான்று பற்றிய செய்தியைச் சீன யாத்திரிகன் எழுதினானா? இவ்வாறு யாத்திரிகன் எழுதாமைகொண்டு இவையெல்லாம் நிகழ்ந்தனவல்ல என்று முடிப்பது போலியார் முடியுமன்றோ? வழிப்போக்கனாய் வந்த பிறநாட்டு அப்புறச்சமயத்தோன் தான் கண்டவற்றுட் சிலவும், கேட்டவற்றுட் சிலவுமாக, அவற்றுள்ளும் தான் கொண்டவற்றுட் சிலவுமாக இங்குமங்குமாகத் தானே குறித்துக் கொள்வானன்றி நாட்டு முழுச்சரிதமும் எழுதுவான் என்பது அறிவாளிகள் ஒப்பமுடியாத தொன்றாமென்றொழிக. (4) சமணரது நூல்களுள் இதற்காதரவில்லை என்னின், தமது தோல்விகளையும் அழிவுக்குரிய காரணங்களையும் தாமே எழுதி நிலைபெற விளம்பரப்படுத்திக் கொள்ளுதல் மனித இயற்கையன்று; இற்றைஞான்று முடிவெய்தியாகக் கருதப்படும் முதலாவது இரண்டாவது உலகப் பெரும்போர்களில் அவ்வத் திறத்தினர் அவ்வப்போது தமக்கு நேர்ந்த தோல்விகளையும் அழிவுகளையும் எவ்வெவ்வாற்றால் எழுதி வெளியாக்கினர் என்ற வரலாறுகளை அமைதிபெற நோக்கினால் இவ்வுண்மை எவர்க்கும் விளங்காமற்போகாது. (5) பின்வந்த திருவாலவாயுடையார் புராணம் முதலியவற்றுட் கூறப்படும் சரித மாறுபாடுகள் இச்செய்தியை ஐயப்படுத்துகின்றன என்பதும் போலியாராய்ச்சியாம்; இஃது ஆதரவுகளின் வன்மை மென்மையறிந்து முடிக்க அறியாத குறையேயென்க. வேதாகம புராணங்களுள் முன்னையவற்றொடு ஒத்த அளவே புராணங்கள் ஆதரவாம்; மாறுபட்ட வழி, மாறுபடும் பகுதிகளினளவு புராணங்கள் மென்மையுற்றுத் தள்ளப்படும்; பதிவாக்கியங்களாகிய முன்னையவே வலிமையுற்றுக் கொள்ளப்படும் என்பது நூலறி மரபு. பெரியபுராணம் வேதம்; அதனொடு மாறுபடும் தலபுராணங்கள் வலிமையுறுவன அல்ல என்க. எனவே பெரிய புராணவாக்கே உறுதி என்று விடுக்க. இனி, இவர் காட்டும் மாறுபாடென்பனவும் மாறுபாடன்றாம்படி கண்டுகொள்ளத் தக்கன. என்னை? கழுவரிடை(கழுவேறிடை?) என்று வழங்கும் ஒரு கிராமம் வைகைக் கரையில் மதுரையின் கிழக்கில் ஒரு நாழிகையளவில் இப்போதும் கேட்கப்படுகின்றது. பூவணப் புராணம் அங்கு இச்செய்தி நடைபெற்றதாகக் கூறுதல் இறைவரது அருள் எங்கும் வியாபகமாக விளையுந் தன்மைத்தாதலின் அவ்விளைவை யாண்டும் நிகழ்ச்சியிற் கூறியும் கொண்டாடியும் வருவது முறைதானே! முருகன் றிருவவதாரமும், வள்ளி கல்யாணமும், பார்வதி கல்யாணமும், இத்தகைய பிறவும் யாண்டும் கொண்டாடப்படுதல்போலக் கண்டுகொள்க. இனிக் கழுவேற்றிய செய்தி மதுரையிலோ, அன்றி, அதன் அணிய வேறிடத்திலோ இன்ன இடத்தில் நிகழ்த்தப்பட்டதென்று பெரியபுராணத்துட் கூறப்படாமையும் காண்க. மேலும், இவ்விழாப் பாண்டிநாடு மட்டுமேயன்றி ஏனைச் சோழநாடு முதலியவற்றினும் கொண்டாடப்படுதலும் கண்டுகொள்க. சமணர்கள் கழுவேறினார்களோ? அன்றி ஏற்றப்பட்டார்களோ? என்பதில் புராணங்களுள் மாறுபாடு காணவுள்ளது என்னின், இரண்டும் அமையும் என்க. என்னை? அரசன் ஆணையிட்ட வழி அதனை நிறைவேற்றும் சிறைச்சாலை அதிகாரி முதலிய தண்டத் தலைவர்கள் கொலையாளியைத் "தூக்குமேடைக்குப் போ" என்றால் அவன் அதற்குட்பட்டுச் சென்று மேடை ஏறுகின்றான். அவன் ஏறினானா? அல்லது ஏற்றப்பட்டானா? என்று சிந்திக்கில் இரண்டும் உண்மைதானே என்பது புலப்படும்; "மதத்தி னின்மான மிக்கார் தாங்களே வலிய வேறி" என்ற திருவிளையாடற் புராணமுடையார் "சமணரைக் கழுவேற்றிய படலம்" என்று பெயரிட்டமை காண்க. "எல்லார்களும் ஏத்தும் ஈசன்" என்ற கருத்துப்பற்றியும், உண்மைச் சமய சமரசம்பற்றியும் முன்னரே உரைக்கப்பட்டன; கண்டுகொள்க.
ஈண்டு, முன் எவரும் சொல்லாத பொய்ச்செய்தி யொன்றைப் பழிபடக் கற்பித்துரைத்தனர் என்று சைவாசாரியராகிய நம்பியாண்டார் நம்பிகள்பால் இல்லதுபுனைந்துரைத்த குற்றமும், "அவரை நங்கள் நாத"ரென்று கொண்டு அவர் கூறிய பொய்யைப் பழிபடப் பரப்பினார் என்று எமது தெய்வச் சேக்கிழார்பால் அறியாமைக் குற்றமும் சுமத்தி அலர்தூற்றும் இந்நவீன ஆராய்ச்சியாளர், சைவத்தோல் போர்த்த சமணரே யாவர் என்றஞ்சி விடுக்க. "நேர்நின்று, காக்கை வெளிதென்பா ரென்சொலார், - தாய்க்கொலை, சால்புடைத் தென்பாரு முண்டு" - இனி, சமணர்கள் தமிழர்கள் - கொல்லாமையாகிய அறம்பூண்டவர்கள் - உயர்ந்த சமயநிலைக் கொள்கை பற்றியவர்கள் என்றும், - சைவர்கள் அவர்களைப் பகைத்துச் செய்த செயல்கள் தவறு - இவர்களது அச்செயல்கள் சமயப் பூசல்பற்றியும், வடமொழியாளர் சூழ்ச்சிபற்றியும், சமய சமரச நோக்கின்றிக் குறுகிய மனப்பான்மை பற்றியும், சாதிப் பிணக்குப் பற்றியும், இன்னபிறவாறும் எழுந்தன என்றும் சில கோட்பாடுகளைச் சில காரணம்பற்றி முன்னரே மனத்துள்ளே துணிந்துகொண்டு, அக்கோட்டம்பற்றி மேலே கண்டவாறு (வேத சிவாகமங்களின் உண்மை), காணாது போலியாராய்ச்சிகளுட் புகுந்து சிவநிந்தை, சிவனடியார் நிந்தை புரிந்தும், பெரியோரைப் பழித்தும், தாமும் கெட்டு உலகையும் மயக்கிப் பழிக்கும் பாவத்துக்கும் ஆளாகியொழிகின்றனர் இந்நாளிற் சில புதிய ஆராய்ச்சியாளர்கள். திருவருள் அவர்களுக்கு நல்லறிவு தருவதாக. உலகர் இப்போலி ஆராய்ச்சிகளில் மயங்காது நமது முன்னோர் கண்ட உண்மைகளை அனுபவம் வல்ல தேசிகர்களை அடுத்து உணர்ந்து உய்வார்களாக.
வாதில் ஒட்டித் தோற்ற செய்தி 2692 முதல் 2744 வரை பாட்டுக்களிற் கூறப்பட்டது.
முன்னமே பிள்ளையார்பால் அநுசிதம் முற்றச் செய்த - செய்தி 2577 முதல் 2689 வரை பாட்டுக்களிற் கண்டுகொள்க. முற்ற - மிகவும்; முழுதும் என்றலுமாம்.
ஏற்றி - ஏற்ற -என்பனவும் பாடங்கள்.