பாடல் எண் :2753
பண்புடை யமைச்ச னாரும் பாருளோ ரறியு மாற்றால்
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையி லேற்ற
நண்புடை ஞான முண்டார் மடத்துத்தீ நாடி யிட்ட
வெண்பெருங் குன்றத் தெண்ணா யிரவரு மேறி னார்கள்.
855
(இ-ள்) பண்புடை....ஏற்ற - பண்புடைய அமைச்சனாரும் உலகத்துள்ளோர் அறியும்படியாகக் கணுக்களைப் பக்கங்களிற் றரித்திட்டுக் கூர்மையாய் நீண்ட கழுக்களில் வரிகையாக ஏற்றியிட; நண்புடை...ஏறினார்கள் - அன்புடைய ஞானமுண்டாராகிய பிள்ளையார் எழுந்தருளிய திருமடத்தில் தீயினைக்கொளுவ வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து கொளுவிய எட்டுப் பெருங் குன்றுகளினின்றும் வந்த எண்ணாயிரம் அமண குருமார்களும் ஏறினார்கள்.இம் மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
(வி-ரை) பண்புடை - பண்பாவது கோற்றொழில் தித்தி உலகங்காக்கவல்ல பண்பு (2747); அஃதாவது சிவாபராதமானது பொல்லாத பெருங் குற்றமாமென்றும், அதற்குத் தக்கன் தலைபோனதுபோல இதுவே தக்க தண்டனையாமென்றும், இதுவே அது செய்தார் நரகத் துன்பநீங்கி யுய்யும்வழி என்றும் அறிவிக்கும் பண்பு.
பாருளோர் அறியுமாற்றால் - உலகம் அரசநீதி வழியால் உண்மைகண்டு அறிந்து நன்னெறியொழுகி யுய்யும்படி. தண்டவகை பலவற்றுள்ளும் கொலைத்தண்டமொன்றொழித்தொழிந்த ஏனையவை அக்குற்றவாளியையும் நீதிமுறை காணும் உலகரையும் திருத்தும் கருத்துடையன. கொலைத் தண்டமோ, குற்றவாளி அரசாணையாற் கொல்லப்பட்டொழிதலின் பாருளோர் மட்டும் அறிந்து பயன்பெற நிகழ்வதென்பதாம். அரசனாற் கொலைத்தண்டம் செய்விக்கப்பட்டோர்க்கும் இறைவனது நரகதண்டனையினீங்குதலாகிய மறுமைப்பயனுண்டென்க.
"அரசனுஞ் செய்வ தீச னருள்வழி யரும்பா வங்கள் தரையுளோர் செய்யிற், றீய தண்டலின் வைத்துத் தண்டத் துரைசெய்து தீர்ப்பன்; பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்; நிரயமுஞ் சேரா; ரந்த நிரயமுன் னீர்மை யீதாம்" - சித்தி - 2-32
கண் புடைபட்டு
- பக்கங்களில் உள்ள கணுக்கள் தறிக்கப்பட்டு; புடை கண்பட்டு என்க. படுதல் - தறித்தல் குறித்தது.
கழுத்தறி - கழுமரம்; நிரை - எண்ணாயிரவர் ஏறும் வகையால் இடத்தின் நிலை பற்றி வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன என்பது.
கண்புடை...நிரை - இவற்றை இவ்வாத முடிவினை முன்பே நிச்சயித்து அமைச்சர் யாவருமறிய ஒழுங்குபடுத்தி அமைத்தனர் என்பது "மருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரி யார்தா மென்பார்"(2704) என்று நகர மாந்தர் கண்டு கூறியவாற்றாலறியக்கிடக்கின்றது.
ஏற்ற - ஏற்றி முறை செய்யும்படி தண்டலாளர்களுக்கு ஆணையிட; இதுபற்றி முன் 2751-ன் கீழ் உரைத்தவை பார்க்க.
ஏற்ற - ஏற்றினார்கள்v- ஆணையிட்ட செயல் மந்திரியார் செயலாகவும், அவ்வாணைப்படி ஏறிய செயல் அமணர் செயலாகவும் நிகழ்தலின் இவற்றுள் மாறுபாடின்மையறிக.
நண்புடை ஞானம் - உயிர்களின்மேல் வைத்த அன்புநிறைந்த ஞானம். "அன்பே சிவமாவது" என்ற அருணெயினின்றவர் பிள்ளையாராயினும் அவர்பால் இகல் கொண்டு பொறாமையினால் அமணர் பொல்லாங் கியற்றினர் என்பது இங்கு இவ்வடை மொழியின் குறிப்பு.
நாடியிட்ட - தீ வைத்து ஒழித்தல் வேண்டுமென்ற கருத்துடனே முற்படச் சூழ்ந்து செய்த; நாடியிடுதலாகிய இஃது குற்றத்தின் முக்கிய அங்கம். With the intention என்பர் நவீனர். நாடுதல் - சூழ்தல்; சதியோசனை.(Conpiracy)
எண்பெருங் குன்றம் - மதுரையினைச் சுற்றிச் சூழ்ந்து நிற்கும் ஆனைமலை முதலிய எட்டு மலைகள். இவற்றில் குன்றமொன்றுக்கு ஆயிரவராக அமண குருமார் பாழிகள் வகுத்து உரைந்தனர்; ஆதலின் "எண்பெருங் குன்றத் தெண்ணா யிரவர்" என்றார். இவர்களே (குருமார்களே) அரசாணையின்படியும் தமது சமயக் கோட்பாடு பற்றியும் கழுவேறியவர்கள்; இவர்கள் சார்புகொண்ட ஏனைச் சமணர் கூட்டமாகிய பொது மக்கள் எவ்வாற்றானும் வருத்தம் செய்யப்படாமல் பின்னர்ச் சைவர்களாகி உய்ந்தனர் என்பது நாட்டு நடப்புச் சரித வரலாறு. "ஆனை மாமலை யாதி யாய விடங்க ளிற்பல வல்லல்சேர், ஈனர்கட்கு"(தேவா) என்று பிள்ளையார் முன்பே அருளியது கருதத் தக்கது.